Published:Updated:

சட்டப் பிரிவுகள் 370, 35ஏ! - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இழப்பால் நடக்கப் போவது என்ன?

சத்யா கோபாலன்

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு அளித்து வந்த சிறப்பு சட்டப்பிரிவுகள் 35A, 370 ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

ஜம்மு - காஷ்மீர்
ஜம்மு - காஷ்மீர்

ஜம்மு - காஷ்மீரில் மாநிலத்தில் கடந்த சில நாள்களாகப் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. திடீரென அங்கு பல ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டார்கள். அந்த மாநிலத்துக்குச் சுற்றுலா சென்ற பயணிகள், அமர்நாத் சென்ற பக்தர்கள் போன்றவர்கள் அவசரமாக அம்மாநிலத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த மாநிலத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

காஷ்மீர் அரசியல் தலைவர்கள்
காஷ்மீர் அரசியல் தலைவர்கள்

அங்கு என்ன நடக்கிறது எனத் தெரியாமல் அம்மாநில அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் குழம்பியிருந்த நிலையில், இன்று இவை அனைத்தும் ஒரு விடை கிடைத்துள்ளது. இன்று காலை மாநிலங்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழக்கும் சட்டப்பிரிவுகள் 35A, 370 ஆகியவை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். மேலும், காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரிப்பதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். இதனால் மாநிலங்களவையில் உச்சக்கட்ட கூச்சல், குழப்பம் நிலவி வருகிறது.

சிறப்புச் சட்டப்பிரிவு 35A உருவான கதை!

ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. அப்போது காஷ்மீரின் மன்னர் ஹரிசிங், தன் மக்களின் நலன் கருதி பல்வேறு நிபந்தனைகளை விதித்தார். நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால்தான் இந்தியாவுடன் காஷ்மீரை இணைக்க ஒப்புக்கொள்வேன் என்று பிடிவாதம் பிடித்தார். பாகிஸ்தான், காஷ்மீரைக் கைப்பற்றத் துடித்துக்கொண்டிருந்த காரணத்தினால், இந்தியத் தலைவர்கள் காஷ்மீருக்காகச் சிறப்பு அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்க ஒப்புக்கொண்டார்கள். அப்படிக் கொண்டுவரப்பட்டதுதான் சிறப்பு சட்டப்பிரிவு 370 மற்றும் 35A. இந்தச் சட்டத்தினால், காஷ்மீரிகள்தான் இந்தியாவின் செல்லக் குழந்தைகள் ஆகிறார்கள்.

மன்னர் ஹரிசிங்
மன்னர் ஹரிசிங்

பிரிவு 370, 35A காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு உரிமைகள்!

காஷ்மீர் மக்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம். ஆனால், மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் காஷ்மீரில் ஒரு பிடி மண்கூட வாங்கிவிட முடியாது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் காஷ்மீருக்குப் பொருந்தாது. பாதுகாப்புத் துறை, தகவல் தொடர்புத் துறை, நிதித் துறை, வெளியுறவுத் துறை தவிர, காஷ்மீர் தொடர்பான எந்த ஒரு சட்டம் இயற்றப்பட்டாலும், காஷ்மீர் சட்டமன்றம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

காஷ்மீர் பெண்கள், வேறு மாநிலத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்தால், காஷ்மீரில் நிலம் வாங்கும் உரிமையை இழக்கிறார்கள். அதே வேளை, ஆண்கள் வேறு மாநிலத்தைச் சேர்ந்த பெண்களை மணம் புரிந்தால், அங்கே நிலம் வாங்க உரிமை உண்டு.

காஷ்மீர் விஷயம் தொடர்பாக APPAPPO ஆப்பில் கிளாஸிக் கட்டுரைகள் ஏதாவது இருக்கிறதா என்று தேடினோம்! அட.. இன்று APPAPPOவில் ட்ரெண்டிங்கே 1947ல் எழுதப்பட்ட ஒரு தலையங்கம்தானாம்! காஷ்மீர், இந்தியாவுடன் இணைந்த நாள் 1947, அக்டோபர் 26ம் தேதி. இதற்கு அடுத்த வாரமே ஆனந்த விகடனில் தலையங்கம் எழுதிவிட்டார்கள்!

1947ம் ஆண்டு எழுதப்பட்ட அந்த தலையங்கம் APPAPPO ஆப்பில் மட்டுமே படிக்கக் கிடைக்கிறது! -> http://bit.ly/kashmir1947

அரசியலமைப்புச் சட்டம் 35 ஏ, காஷ்மீரின் நிரந்தரமாக குடியேறியவர்களுக்கு, அசையா சொத்துகள் வாங்குவது மற்றும் அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கிறது.

இந்திய மாநிலங்களில் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் மட்டுமே தனிக்கொடியும், தனி அரசியல் சாசனமும் உண்டு. ஜம்மு - காஷ்மீர் மாநில சட்டமன்றத்தின் பதவிக் காலம் ஆறு ஆண்டுகள் ஆகும். மற்ற எந்த இந்திய மாநிலங்களின் சட்டமன்ற காலம் 5 ஆண்டுகளாகும்.

முதலில் உருவாக்கப்பட்ட 370-வது பிரிவில், ``மாநில அரசு என்பதற்கான அர்த்தம், குடியரசுத் தலைவரால் தற்காலிகமாக அங்கீகரிக்கப்படுகிற நபரே ஜம்மு - காஷ்மீரின் மகாராஜாவாக, மத்திய அமைச்சர்களின் அறிவுரைப்படி தற்காலிகமாகச் செயல்பட முடியும்" எனக் கூறப்பட்டிருந்தது.

ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீர்

பின்னர் 1952 -ம் ஆண்டு 370-வது பிரிவில் மாற்றம் செய்யப்பட்டு, `` மாநில அரசு என்பதற்கான அர்த்தம் ஜம்மு - காஷ்மீர் ஆளுநரால், மாநில சட்டசபை மூலம் பரிந்துரைக்கப்பட்டு, குடியரசுத் தலைவரால் தற்காலிகமாக அங்கீகரிக்கப்படுகிற நபரே ஜம்மு - காஷ்மீரின் முதலமைச்சராக மத்திய அமைச்சர்களின் அறிவுரைப்படி தற்காலிகமாகச் செயல்பட முடியும்" என வரையறுக்கப்பட்டது. அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவின்படி மாநிலத்தின் எல்லையை இந்திய நாடாளுமன்றத்தால் கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியாது.

சட்டப்பிரிவு நீக்கத்தால் அரசுக்கு ஏற்படும் பயன்!

மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் காஷ்மீர் மாநிலத்தில் செல்வாக்கு பெற்றுள்ள அரசியல் கட்சிகளுக்கும், அந்த மாநிலத்தைத் தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று போராடி வரும் பிரிவினைவாதிகளுக்கும் சிக்கல் ஏற்படும். ஒரே பிரதேசம் இரண்டாக உடைந்தால், எந்தப் பகுதிக்காகப் போராட முடியும் என்கிற கேள்வி எழும்.

அமித் ஷா
அமித் ஷா

மேலும், அந்த மாநிலத்தில் கணிசமாக உள்ள இஸ்லாமியர்களின் வாக்குகளும் பிரியும் நிலையும் உள்ளது. காஷ்மீரில் நீடித்துவரும் பிரச்னைக்கு இதைத் தவிர வேறு வழியில்லை என்று மத்திய அரசு தரப்பில் சொல்லப்படுகிறது. அசுர பலத்தோடு மத்தியில் ஆட்சியைப் பிடித்திருக்கும் பா.ஜ.க அரசு, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது கவனிக்கத்தக்கது.