Published:Updated:

`பிளாஸ்டிக்கில் தடவி எடுத்து வரப்பட்ட தங்கம்!’ - திருச்சி விமான நிலையத்தில் சிக்கிய கடத்தல் கும்பல்

திருச்சி விமான நிலையம்
News
திருச்சி விமான நிலையம்

`அதிகாரிகள் முழுமையான சோதனைகளை மேற்கொண்டால், இன்னும் ஏராளமான கடத்தல் சம்பவங்கள் வெளியாக வாய்ப்பிருக்கிறது’ என்கிறார்கள்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு துபாய், சிங்கப்பூர், மலேசியா எனப் பல நாடுகளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து இறங்குகின்றனர். பயணிகளைப்போலவே வெளிநாடுகளிலிருந்து தங்கம் உள்ளிட்ட பொருள்களைக் கடத்திவரும் கடத்தல் கும்பல்களும் இதில் அடக்கம். குறிப்பாக, சமீபகாலமாக தங்கக் கடத்தல் அதிகமாக நடக்கும் இடமாக திருச்சி சர்வதேச விமான நிலையம் மாறிப்போயிருக்கிறது. உடைமைகளுக்கு இடையே மறைத்து தங்கத்தை எடுத்து வருவதில் ஆரம்பித்து, ஆசனவாயில் மறைத்துக் கடத்திவருவது என டிசைன் டிசைனாகத் தங்கம் கடத்தப்பட்டுவருகிறது. அப்படி நேற்று துபாயிலிருந்து திருச்சிக்கு வந்த ஏர் இந்தியா விமானப் பயணிகளை, விமான நிலைய வான் நுண்ணறிவுப் பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்துள்ளனர். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் தடுமாற்றத்துடன் இருவர் நின்றிருக்கிறார்கள்.

பிளாஸ்டிக் கவரில் தடவி எடுத்து வரப்பட்ட தங்கம்
பிளாஸ்டிக் கவரில் தடவி எடுத்து வரப்பட்ட தங்கம்

அவர்களின் செயல்களில் சந்தேகம் தென்படவே, உடனே அந்த இருவரையும் அதிகாரிகள் அழைத்துச் சென்று அவர்கள் கொண்டு வந்திருந்த பை, உடைமைகளை சோதனையிட்டுள்ளனர். அதில் எதில் சிக்காமல் போக, போலீஸாருக்கு ஏதோ உறுத்தியிருக்கிறது. உடனே அந்த டிராவல் பேக்கின் அடிப்பகுதியைக் கிழித்துப் பார்த்துள்ளனர். அப்போது டிராவல் பேக்கின் அடிப்பகுதியில் இருந்த பிளாஸ்டிக் கவரில் தங்கத்தை உருக்கி, தடவி எடுத்து வந்திருப்பது தெரியவந்திருக்கிறது. சுமார் 12,44,000 ரூபாய் மதிப்புள்ள 255 கிராம் தங்கத்தைக் கைப்பற்றிய விமான நிலைய அதிகாரிகள், அந்த நபர்கள் இருவரையும் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
திருச்சி விமான நிலையம்
திருச்சி விமான நிலையம்

இது குறித்து விஷயமறிந்தவர்களிடம் பேசினோம். ``இரண்டு மாதங்களுக்கு முன்பு சுங்கத்துறை உயரதிகாரி ஒருவர் மஃப்டியில் திருச்சி விமான நிலையத்துக்கு வந்திருந்தார். பயணிகளிடம் அதிகாரிகள் எப்படிச் சோதனை செய்கிறார்கள் எனக் கண்காணித்துப் பார்த்தவருக்கு பெரும் அதிர்ச்சி. பயணிகளைப் பெரும்பாலும் சோதனை செய்யாமல் அதிகாரிகள் அனுப்ப, கோபமடைந்தவர் அதிகாரிகளைக் கடுமையாக டோஸ்விட்டதோடு, ஒருசில நாளிலேயே அதிகாரிகள் சிலரை தூக்கியடித்தார். அப்படியிருந்தும், இன்னும் விமான நிலைய செக்கிங்கில் அதிகாரிகள் மெத்தனமாகவே இருக்கின்றனர். முறையான சோதனை செய்தால் ஏராளமான கடத்தல் கும்பல் சிக்க வாய்ப்பிருக்கிறது” என்றார்கள்.