Published:Updated:

''1000 ஜோதிமணிகள் வந்தாலும் காங்கிரஸ் கட்சியை ஒன்றும் செய்யமுடியாது!'' - கோபண்ணா கோபம்

கோபண்ணா

''ஜோதிமணி இப்படி பேசுவதே அப்பட்டமான கட்சி விரோத நடவடிக்கை. இவ்வளவு பெரிய தைரியம் அவருக்கு எங்கிருந்து வந்தது? அவரது அராஜக அரசியலைப் பற்றித்தான் நான் ட்வீட்டரில் குறிப்பிட்டுள்ளேன்'' என்று கோபம் கொள்கிறார் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கோபண்ணா.

''1000 ஜோதிமணிகள் வந்தாலும் காங்கிரஸ் கட்சியை ஒன்றும் செய்யமுடியாது!'' - கோபண்ணா கோபம்

''ஜோதிமணி இப்படி பேசுவதே அப்பட்டமான கட்சி விரோத நடவடிக்கை. இவ்வளவு பெரிய தைரியம் அவருக்கு எங்கிருந்து வந்தது? அவரது அராஜக அரசியலைப் பற்றித்தான் நான் ட்வீட்டரில் குறிப்பிட்டுள்ளேன்'' என்று கோபம் கொள்கிறார் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கோபண்ணா.

Published:Updated:
கோபண்ணா

தேர்தலில், போட்டியிட சீட் கிடைக்காதவர்கள் சொந்தக் கட்சிகளுக்கு எதிராகவே நடத்திவருகிற அதிரடி போராட்டங்களால் கலகலத்து நிற்கின்றன முன்னணி அரசியல் கட்சிகள்! கோஷ்டி பூசலுக்கு பெயர்போன தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் நடைபெறும் போராட்டங்களோ இன்னும் வேற லெவல்!

தி.மு.க கூட்டணியில் 25 இடங்கள் பெற்று தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியில் முழுதாக வேட்பாளர் பட்டியல் முடிவுசெய்யப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே ரணகளங்கள் ஆரம்பமாகிவிட்டன. 'கட்சியில் பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே சீட் வழங்கப்படுகிறது' என்று ஒரு கோஷ்டியும், 'கட்சி மாறி காங்கிரஸுக்குள் வந்தவர்களுக்கு சீட் கொடுக்கக்கூடாது' என்று இன்னொரு கோஷ்டியுமாக நேற்றையதினம் சத்தியமூர்த்தி பவனில் சடுகுடு ஆடினர்.

''1000 ஜோதிமணிகள் வந்தாலும் காங்கிரஸ் கட்சியை ஒன்றும் செய்யமுடியாது!''
- கோபண்ணா கோபம்
ஜோதிமணி ட்வீட்

''காங்கிரஸ் கட்சியில் பணக்காரர்களுக்கு மட்டுமே சீட் வழங்கப்படுகிறது'' என்றொரு வாதத்தை கட்சியின் மூத்த தலைவரான பீட்டர் அல்போன்ஸ் கடந்த காலங்களிலேயே தெரிவித்திருக்கிறார். தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காத விரக்தியில் மாநில மகளிர் காங்கிரஸின் முன்னாள் தலைவியான ஜான்ஸிராணியும் சில நாட்களுக்கு முன்பு, ''காங்கிரஸ் கட்சியில் வாரிசுகளுக்கும் பண பலத்துக்குமே முக்கியத்துவம்; உழைப்பவர்களுக்கு சீட் இல்லை'' என்று தனது உள்ளக்குமுறலை வெளிப்படையாக பேட்டியளித்திருந்தார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினான ஜோதிமணியும், 'காங்கிரஸ் தொண்டர்களின் மனதில் தற்போது கொந்தளித்துக்கொண்டிருக்கின்ற உணர்வுகளை நான் அறிவேன். தொகுதி,வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை.நிறைய தவறு நடக்கிறது. தட்டிக்கேட்டேன். பதிலில்லை. தொண்டர்களின் இரத்தத்தை குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்கள் நியாயத்தின் குரலை செவிமடுக்கவில்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நீண்டகாலம் கட்சிக்கு உழைத்த வெற்றி வாய்ப்புள்ள உண்மையான விசுவாசிகள் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் சீட் பெறமுடியும் என்பது அக்கிரமம். காங்கிரஸ் கட்சி தொண்டர்களில் இரத்தத்திலும், வியர்வையிலும் உருவானது. இதை அழிக்க யாருக்கும் உரிமையில்லை.

பணம் தான் பிரதானமென நினைத்திருந்தால் இன்று நான் எம்.பி கிடையாது. இந்த தலைவர்கள் தொண்டர்களுக்கு மட்டுமல்ல தன்னை நம்பிய தலைவருக்கும் துரோகம் செய்கிறார்கள். நமது கட்சியையும்,நமது தலைவரின் கௌரவத்தையும் தொண்டர்களாகிய நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.

கோபண்ணா ட்வீட்
கோபண்ணா ட்வீட்

உண்மையான கட்சி விசுவாசிகளுக்கு கண்முன்னால் இழைக்கப்படும் துரோகத்தை கண்டு எனது இரத்தம் கொதிக்கிறது. எனது யுத்தத்தை நான் தொடர்வேன். தொண்டர்களின் குரலாக தொடர்ந்து ஒலிப்பேன்.நடப்பது நடக்கட்டும். எதிரிகளை மட்டுமல்ல துரோகிகளையும் எதிர்கொள்ளும் வலிமை நமக்கு உண்டு!' என்று படுகாட்டமாக தமிழக காங்கிரஸ் தலைமையை விமர்சித்து அடுத்தடுத்த ட்வீட்களை பதிவுசெய்து வந்தார்.

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 'உண்ணாவிரதம்', 'உண்ணும் விரதம்' என பல்வேறு கோஷ்டியினரும் சத்தியமூர்த்தி பவனுக்குள் போட்டி போராட்டம் நடத்திக்கொண்டிருந்த நேரத்தில், ஜோதிமணியின் ட்வீட்கள் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த நிலையில், ஜோதிமணியின் ட்வீட்டுக்குப் பதிலடியாக காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் கோபண்ணாவும் 'ஜோதிமணியின் அராஜக அரசியலுக்கு முடிவுகட்டும் நேரம் வந்துவிட்டது; காங்கிரஸ் கட்சியை களங்கப்படுத்துகிற ஜோதிமணி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்' என கொதித்திருக்கிறார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தேர்வு குறித்து அந்தக் கட்சியினர் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு விடை கேட்டு கோபண்ணாவிடம் பேசினேன்....

''காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி ஜனநாயகத்துக்குட்பட்டு கேள்வி எழுப்பியுள்ள ஜோதிமணியை, அராஜக அரசியல் செய்கிறார் என்று காட்டமாக விமர்சித்திருக்கிறீர்களே நியாயமா?''

''உட்கட்சி ஜனநாயகம் என்பதை உட்கட்சியில்தான் பேசவேண்டும். பொதுவெளியில், பொது ஊடகத்தில் பேசக்கூடாது. காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினராக பொறுப்புள்ள பதவியில் இருந்துவரும் ஜோதிமணி இப்படி பேசுவதே அப்பட்டமான கட்சி விரோத நடவடிக்கை. ஜோதிமணியின் ட்வீட்டைப் படிக்கின்ற என்னைப்போன்ற உண்மையான காங்கிரஸ் தொண்டர்களுக்கு ரத்தம் கொதிக்கிறது.''

கோபண்ணா
கோபண்ணா

''பொதுவெளியில் கட்சியை களங்கப்படுத்தலாமா என கேள்வி கேட்கும் கோபண்ணாவே ட்வீட்டர் வழியேதானே பதிலடி கொடுத்துள்ளார்?''

''என்னுடைய பதிலடியில் கட்சியைக் களங்கப்படுத்தும்விதமாக எதையும் சொல்லவில்லையே! ஜோதிமணிக்கு இவ்வளவு பெரிய தைரியம் எங்கிருந்து வந்தது? அவரது இந்த அராஜக அரசியலைப் பற்றித்தான் நான் ட்வீட்டரில் குறிப்பிட்டுள்ளேன். மற்றபடி தனிப்பட்ட ஜோதிமணியின் நேர்மை குறித்து நான் எந்தக் கேள்வியும் எழுப்பவில்லையே!''

''காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தேர்வுகுறித்து ஜோதிமணி ஆவேசமாவதற்கான காரணம் என்னவென்று நீங்கள் சொல்வீர்கள்?''

''கரூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்த்தவர் மாவட்ட தலைவரான பேங்க் சுப்பிரமணியம். கடந்த தேர்தலில் வெறும் 401 வாக்கு வித்தியாசத்தில் அவர் தோல்வியடைந்துவிட்டார். இதேபோல், ஆயிரம் வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் தோல்வியுற்ற காங்கிரஸ்காரர் பழனி நாடார். இவர்கள் இருவருக்கும் இந்தமுறை வேட்பாளராக வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்று கட்சியின் தலைவர்கள் அனைவரும் போராடி சீட் பெற்றோம்.

ஜோதிமணி
ஜோதிமணி

அதாவது பேங்க் சுப்பிரமணியத்துக்கு கரூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில், கூட்டணியில் கரூர் தொகுதியைக் கேட்டோம். ஆனால், அந்தத் தொகுதியில் தி.மு.க-வைச் சேர்ந்த செந்தில் பாலாஜி போட்டியிடுவதால், காங்கிரஸுக்கு தொகுதி கிடைக்கவில்லை. எனவே வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கக்கூடிய அரவாக்குறிச்சியை கூட்டணியில் கேட்டு வாங்கினோம். ஆனால், இப்படி காங்கிரஸ் தலைவர்கள் அரவாக்குறிச்சி தொகுதியை பேங்க் சுப்பிரமணியத்துக்காக கேட்டுப் பெற்றுவிட்டோம் என்றவுடனேயே, ஜோதிமணி கட்சியின் மூத்த தலைவர்களிடையே பேசிய பேச்சு என்பது அவர் எவ்வளவு பெரிய அராஜக எண்ணம் கொண்டவர் என்பதை தெள்ளத் தெளிவாக நிரூபித்தது. நானும் கண்ணெதிரிலேயே பார்த்தவன் என்ற முறையில் இதைச் சொல்கிறேன்.

'என்னுடைய கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குள் வரக்கூடிய அரவாக்குறிச்சி தொகுதியை நீங்கள் எப்படி கேட்டு வாங்கலாம்... அதைத் திருப்பிக்கொடுங்கள்' என்று சண்டித்தனம் செய்தார் ஜோதிமணி. பேங்க் சுப்பிரமணியத்தின் மீது அவருக்கிருந்த தனிப்பட்ட விரோதம், பழிவாங்கும் எண்ணத்துடனேயே இப்படி நடந்துகொண்டார். ஜோதிமணியின் வற்புறுத்தலுக்கு இணங்கி கட்சியின் மூத்த தலைவர்களும் ஒருகட்டத்தில் அந்தத் தொகுதியை விட்டுக்கொடுத்துவிட்டனர்.''

''ஆதாரமே இல்லாமலா இப்படியொரு குற்றச்சாட்டை ஜோதிமணி வைத்திருப்பார்?''

''காங்கிரஸ் கட்சியை களங்கப்படுத்தும்விதமாக ஜோதிமணி ட்வீட்டரில் பதிவிட்டுள்ள கருத்துகள் அனைத்தும் பொய்யானது. வேட்பாளர் தேர்வில் காங்கிரஸ் தலைவர்கள் தவறு நடந்ததாக 5% ஆதாரத்தையாவது வெளியிடுவாரா ஜோதிமணி? சவாலாகவே இந்தக் கேள்வியை நான் கேட்கிறேன். அப்படி அவர் ஆதாரம் எதையும் வழங்கவில்லை என்றால், கட்சியின் தலைமை அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்.''

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

''அப்படியென்றால், மகளிர் காங்கிரஸின் முன்னாள் தலைவி ஜான்ஸிராணி மற்றும் டாக்டர் விஷ்ணுபிரசாத் உள்ளிட்டோரும்கூட வேட்பாளர் தேர்வு குறித்து குற்றச்சாட்டு கூறியிருக்கிறார்களே?''

''காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜான்ஸிராணி, தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றுதான் சொல்லியிருக்கிறாரே தவிர, பணம் வாங்கியதாக எந்தக் குற்றச்சாட்டையும் கூறவில்லை. விஷ்ணு பிரசாத்தும்கூட நேற்றைய தினம் சத்திய மூர்த்தி பவனிலேயே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். யாராக இருந்தாலும் அவர்கள் சொல்கிற குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக ஒரு 5% ஆதாரத்தையாவது காட்ட வேண்டும்.''

''பணம் படைத்தவர்களுக்கே கட்சியில் வேட்பாளர் வாய்ப்பு கிடைக்கிறது என்ற குற்றச்சாட்டை எப்படி மறுக்கப்போகிறீர்கள்?''

''ரூபி மனோகரன், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டார். ஆனால், அது அவருக்கு மறுக்கப்பட்டது. அதேசமயம் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. காரணம் ஏற்கெனவே இடைத்தேர்தலின்போது அந்தத் தொகுதியில் நின்று தோற்றுப்போனவர் அவர். எனவே இந்த முறை நாங்குநேரியில் போட்டியிட கட்சி அவருக்கு வாய்ப்பு அளித்திருப்பதென்பது அவரது உரிமை. அடுத்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட அறிவிக்கப்பட்டிருக்கும் வேட்பாளர்களில் பணக்காரர் என்றால், ஊர்வசி அமிர்தராஜ் மட்டும்தான். அவருக்கும் அவரது சொந்த தொகுதியான ஶ்ரீவைகுண்டம்தான் இப்போது ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது இயல்பான ஒன்றுதான். இதை எப்படி தவறு என்று சொல்லமுடியும?''

ராகுல்காந்தி
ராகுல்காந்தி

''ஏற்கெனவே கட்சிப் பதவிகளில் இருப்பவர்களுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லையே?''

''தாராபுரம், கடலூர், தென்காசி, கிள்ளியூர் தொகுதிகளில் மாவட்ட தலைவர்களுக்குத்தான் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதுவும் இந்தமுறை வேட்பாளர் பட்டியல் என்பது டெல்லிவரை சென்று முடிவெடுக்கப்படாமல், சென்னையிலேயே முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது காங்கிரஸ் கட்சியின் வரலாற்றிலேயே கே.எஸ்.அழகிரி செய்துள்ள வரலாற்றுப் புரட்சி.

25 பேர்களைக்கொண்ட பிரதேச எலக்‌ஷன் கமிட்டி, 8 பேரைக் கொண்ட ஆய்வுக்குழு கமிட்டி என அனைவரது ஆலோசனைக்குப் பிறகும்தான் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். எனவே ஒரு வேட்பாளரை நிறுத்துகிற முடிவை கே.எஸ்.அழகிரியோ அல்லது தினேஷ் குண்டுராவோ.... எந்தவொரு தனிப்பட்ட தலைவர் மட்டுமே முடிவெடுத்து அறிவித்துவிட முடியாது. குழுக்கள்தான் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கிறது என்கிறபோது, அதில் எப்படி தவறு நடக்கமுடியும்? ஆனால், அப்படி தவறு நடந்துவிட்டதாக சிலர் கூறுகிறார்கள் என்றால், அது தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது.''

''கட்சியிலுள்ள மூத்த தலைவர்களின் வாரிசுகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதே?''

''கட்சியில் தொடர்ந்து பணியாற்றிவரும் திருநாவுக்கரசர் மகன் கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் வெறும் 2 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றவர். எனவே அவருக்கு மீண்டும் இந்தத் தேர்தலிலும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. திருநாவுக்கரசரின் மகன் என்ற வாரிசு அடிப்படையில் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அடுத்து பெரியாரின் கொள்ளுப்பேரனும் ஈ.வி.கே.எஸ். மகனுமான திருமகன் ஈவெரா-வுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதற்குக் காரணம்... ஈரோடு கிழக்கு என்பது அவருடைய சொந்தத் தொகுதி. அங்கே அவரைத் தவிர வேறு யாராலும் வெற்றி பெறமுடியாது என்ற நிலையில் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் பாரம்பர்யமிக்க குடும்பத்தைச் சேர்ந்த திருமகன் ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவு தலைவர் பதவி வகித்தவர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

அடுத்து 'எனக்கு வயதாகிவிட்டது... எனவே இந்த முறை என் மகனுக்கு சீட் கொடுங்கள்' என்று கே.ஆர்.ராமசாமி கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அவரது மகனுக்கு சீட் வழங்கப்பட்டிருக்கிறது. காரணம்... தொடர்ந்து 3 தலைமுறையாக கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கும் மேலாக அவரது குடும்பம் அந்தப் பகுதியில் சொந்த செல்வாக்கு மிக்கவர்களாக இருந்துவருகிறார்கள். அவரது குடும்பத்தைத்தவிர வேறு ஒருவரை திருவாடானை தொகுதியில் நிறுத்தினால் ஜெயிக்கவே முடியாது. இந்தச்சூழ்நிலையில்தான் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அரசியலில் இவையெல்லாம் தவிர்க்கமுடியாதது. எனவே, இதில் என்ன தவறு இருக்கிறது?''

''கட்சியின் நலன் குறித்து ஆர்வம் இருப்பதனாலேயேதான் விமர்சிக்கிறார்கள்... அதையே ஒரு குற்றமாக பார்ப்பதென்பது எந்தவிதத்தில் நியாயம்?''

''வெறும் 25 தொகுதிகள்தான் கட்சிக்கு கிடைத்திருக்கின்றன. ஆனால், இந்தச் சூழலிலும்கூட 25 வேட்பாளர்களையும் வெற்றிபெற வைக்க முயற்சி செய்யாமல், கட்சி மீதே களங்கம் கற்பிப்பதென்பது தேர்தலின்போது கட்சியை எந்தளவு பாதிக்கும் என்று இவர்களுக்கெல்லாம் தெரியாதா?

சோனியாகாந்தி
சோனியாகாந்தி

விஷ்ணுபிரசாத், 2 முறை எம்.பி, எம்.எல்.ஏ பதவி வகித்தவர். அவரது அப்பாவும் 2 முறை எம்.பி-யாக இருந்தவர். ஆக இவரது குடும்பமே தொடர்ந்து 50 வருடங்களாக பதவியை அனுபவித்து வருகிறது. ஆனால், இப்படிப்பட்ட விஷ்ணுபிரசாத் சத்திய மூர்த்தி பவனிலேயே ஆர்ப்பாட்டம் செய்கிறார் என்றால் அது எந்தவகையில் நியாயம்? இது கட்சிக்கு எந்தளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவருக்குத் தெரியாதா என்ன?

வேட்பாளர் தேர்வில் முறைகேடு நடப்பதாக கருதுபவர்கள் அதற்கான ஆதாரத்தை குண்டுராவிடமோ அல்லது கட்சியின் அகில இந்திய தலைமையான சோனியாகாந்தியிடமோ அளிக்கலாமே! அதைவிட்டுவிட்டு பொதுவெளியில் ட்வீட் பண்ணி, காங்கிரஸ் கட்சியை மிரட்டுகிறீர்களா? காங்கிரஸ் கட்சி எந்த மிரட்டலுக்கும் பணியாது. 1000 ஜோதிமணிகளை காங்கிரஸ் கட்சி பார்க்கும்!''