கேரள மாநிலம், எர்ணாகுளத்தைச் சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பு சார்பில், `சமகால இந்தியா எதிர்கொள்ளும் உள்நாட்டு பாதுகாப்புச் சிக்கல்கள்’ என்ற தலைப்பில் கொச்சியில் ஒரு கருத்தரங்கு நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்கு கேரள லோக் ஆயுக்தா நீதிபதி சிறியக் ஜோசப் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, கேரள மாநில பா.ஜ.க முன்னாள் தலைவராக இருந்தவரும், தற்போது கோவா கவர்னராகவும் பதவி வகிக்கும் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். அந்தக் கருத்தரங்கில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, "தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களுடனும், நிரபராதிகளைக் கொல்பவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது. துப்பாக்கியால்தான் அவர்களை எதிர்கொள்ள வேண்டும். ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆண்டு தாக்குதலில் இறந்த 300 பேரில் 200 பேர் பயங்கரவாதிகள்.

நாட்டுக்குள் இருக்கும் பிரிவினைவாத இயக்கங்களுக்கு எதிராக துப்பாக்கி ஏந்திப் போராட வேண்டும். தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிராகச் செயல்படுபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டிய அவசியமில்லை. துப்பாக்கி ஏந்துபவர்களைத் துப்பாக்கியைக் கொண்டுதான் எதிர்கொள்ள வேண்டும். துப்பாக்கியைப் போட்டுவிட்டு சரணடைய வருபவர்களிடம் மட்டுமே பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ள வேண்டும். வன்முறையை எதிர்கொள்வதில் துளியும் சகிப்புத்தன்மை தேவை இல்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அண்டை நாடுகள் நமக்கு நட்பு நாடுகளா அல்லது எதிரி நாடுகளா என்பதை உறுதி செய்வதில் தெளிவு வேண்டும். வெறும் 10 தீவிரவாதிகள் நம் நாட்டையே மிரளவைத்துக்கொண்டிருந்தனர். மும்பைத் தாக்குதல் நடந்து ஒன்பது மாதங்களில் அப்போதைய இந்திய பிரதமரும், பாகிஸ்தான் பிரதமரும் கூட்டு உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டனர். அதில் இந்தியா, பாகிஸ்தான் என இரண்டு நாடுகளுமே தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவை என்று கூறப்பட்டிருந்தது. இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்... பாகிஸ்தான் நமக்கு நண்பரா, எதிரியா என்பதைத் தீர்மானித்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்" என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய கோவா ஆளுநர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை, "மாவோயிஸ்டுகள் உள்ளிட்டவர்கள் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக விடும் சவால்களைக் கண்டும் காணாததுபோல நடிக்க முடியாது. அரசியலமைப்பைவிட மதம் உயர்ந்தது என வாதிடுபவர்கள் உண்டு. நாங்கள் இந்த நட்டை ஏற்றுக்கொள்ள மாட்டோம், இறையாண்மையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனக் கூறுபவர்கள் உண்டு. அவ்வாறு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவற்றையெல்லாம் கடந்து தர்மத்தின் அடிப்படையில், நாட்டின் மகத்தான கலாசாரத்தை அனுசரித்து நம்மால் முன்னேற முடியும்" என்றார்.