Published:Updated:

மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி இழப்பீட்டுத்தொகை!- ரூ.35,298 கோடியை வழங்கியது மத்திய அரசு

ஜி.எஸ்.டி இழப்பீட்டுத்தொகை
ஜி.எஸ்.டி இழப்பீட்டுத்தொகை ( vikatan )

புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஜி.எஸ்.டி தாக்கல் செய்ய கால அவகாசத்தை நீட்டித்ததும், மக்களின் நுகர்வு குறைந்துள்ளதும் தான் ஜி.எஸ்.டி வசூல் குறைந்ததற்குக் காரணம் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்.டி கவுன்சில் கலந்தாய்வுக்கூட்டம் வரும் புதனன்று நடைபெறவுள்ள நிலையில், மாநிலங்களுக்குத் தரவேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டு நிலுவைத்தொகை ரூ.35,298 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இழப்பீட்டுத் தொகையைத் தருவதற்குத் தாமதமானதை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒப்புக்கொண்டார்.

ஜி.எஸ்.டி இழப்பீட்டுத்தொகை
ஜி.எஸ்.டி இழப்பீட்டுத்தொகை
vikatan

கடந்த நான்கு மாதங்களாகத் தங்களுக்கு வரவேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டுத்தொகையைத் தரவேண்டி பா.ஜ.க ஆளாத மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் சார்பில் மத்திய அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது. தங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படாதபட்சத்தில் மத்திய அரசுமீது வழக்கு தொடுக்கவும் ஆலோசித்தன குறிப்பிட்ட மாநில அரசுகள். மேலும், புதனன்று நடக்கவுள்ள ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தைப் புறக்கணிப்பது அல்லது கடுமையாக விவாதிப்பது என்ற முடிவில் பா.ஜ.க ஆளாத மாநிலங்கள் இருந்தன. இந்த நிலையில் அவர்களைச் சமாதானப்படுத்தும் விதமாக நிலுவையிலுள்ள இழப்பீட்டுத் தொகையை இன்று மத்திய அரசு வழங்கியுள்ளது.

பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்பட்ட ஜி.எஸ்.டி வசூல் தொகையைவிட, தற்போது 40% குறைவாக வசூலாகியுள்ளது. மத்திய அரசுக்கு மட்டும் சுமார் ரூ.80,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த ஜி.எஸ்.டி வருவாய் இழப்பு ரூ.2.03 லட்சம் கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஜி.எஸ்.டி தாக்கல் செய்ய கால அவகாசத்தை நீட்டித்ததும், மக்களின் நுகர்வு குறைந்துள்ளதும் தான் ஜி.எஸ்.டி வசூல் குறைந்ததற்குக் காரணம் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும், ஜி.எஸ்.டி வருவாயை அதிகரிப்பது குறித்து மாநிலங்களோடு கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
vikatan

ஜி.எஸ்.டி வரி வசூலை அதிகரிக்க, தங்கத்தின்மீதான 3% வரியை 5 சதவிகிதமாக உயர்த்துவார்கள் எனத் தெரிகிறது. மேலும், சில பொருள்களின் வரிவிகிதத்தை அதிகபட்ச 28% வரம்புக்கு உயர்த்தவும் வாய்ப்புள்ளது. இவை குறித்து புதன்கிழமை ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பேசி முடிவெடுக்கப்படும்.

அடுத்த கட்டுரைக்கு