Published:Updated:

கோயில்களின் சொத்து விவரம்: அதிரடிகாட்டும் அறநிலையத்துறை அமைச்சர்! - அரசின் நோக்கம் என்ன?

அமைச்சர் சேகர்பாபு ஆலோசனைக் கூட்டம்

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலிருக்கும் தமிழக கோயில்களின் சொத்து விவரங்களை மக்கள் பார்க்கும் வகையில் இணையத்தில் பதிவேற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். கோயில்களைவிட்டு அரசு வெளியேற வேண்டும் என்ற முழக்கம் எழுந்துள்ள நிலையில் அரசின் இந்த அறிவிப்பு எதை நோக்கியது?

கோயில்களின் சொத்து விவரம்: அதிரடிகாட்டும் அறநிலையத்துறை அமைச்சர்! - அரசின் நோக்கம் என்ன?

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலிருக்கும் தமிழக கோயில்களின் சொத்து விவரங்களை மக்கள் பார்க்கும் வகையில் இணையத்தில் பதிவேற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். கோயில்களைவிட்டு அரசு வெளியேற வேண்டும் என்ற முழக்கம் எழுந்துள்ள நிலையில் அரசின் இந்த அறிவிப்பு எதை நோக்கியது?

Published:Updated:
அமைச்சர் சேகர்பாபு ஆலோசனைக் கூட்டம்

தமிழகத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன் மக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளைத் துரிதமாக எடுத்துவருகிறது. தடுப்பூசித் தட்டுப்பாட்டை போக்க அவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் என்று அறிவித்ததுடன், அதற்கான ஒப்பந்தங்களும் உடனடியாக கோரப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல, தடுப்பூசி மற்றும் ஆக்ஸிஜன் தயாரிப்பைத் தமிழகத்திலேயே தொடங்கவும் நடவடிக்கை எடுத்துவருகிறது. அந்த வகையில் தொழில்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, நிதித்துறை அமைச்சர்கள் என அனைவரும் தங்கள் துறைசார்ந்து இருக்கும் பிரச்னைகளை ஆராய்ந்து அதற்கேற்ப அதிரடி நடவடிக்கைகளை அரங்கேற்றிவருகின்றனர். இந்து சமய அறநிலையத்துறை சொத்துகள் குறித்து இணையத்தில் சிலர் கடந்த சில தினங்களாகக் கேள்விகளை எழுப்பிவந்தனர். இந்தச் சொத்துகளைப் புதிய அரசு பாதுகாக்க வேண்டும்; இதில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துவந்தனர். இந்தநிலையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அறநிலையத்துறை அமைச்சர் அறிக்கை
அறநிலையத்துறை அமைச்சர் அறிக்கை

“தமிழகத்தில் அறநிலையத்துறைக்கு உட்பட்ட அனைத்து கோயில்களின் சொத்து ஆவணங்களையும் இணையத்தில் வெளிப்படையாகப் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் புவிசார் குறியீடு செய்து இணையத்தில் பதிவேற்ற வேண்டும்” என உத்தரவிடப்பட்டுள்ளது. திருக்கோயில் நிர்வாகம், அலுவலர்கள், திருப்பணிகள் மற்றும் விழாக்கள் போன்ற தகவல்களை இணையத்தில் வெளியிட வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை இந்த முக்கியமான முடிவை எடுத்துள்ளது.

அரசின் அறிவிப்பு குறித்து திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியனிடம் பேசினோம். “தமிழகக் கோயில்கள் 1863-ம் ஆண்டு வரை அரசிடம்தான் இருந்தன. ஆங்கிலேய அரசு மத விவகாரங்களில் தலையிட விரும்பாததால், அதன் பிறகு அவை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டன. அப்படி தனியாரிடமிருந்த காலகட்டத்தில் கோயில்கள் முறையாக நிர்வகிக்கப்படவில்லை என ஆன்மிக அமைப்புகளே அரசிடம் பலமுறை முறையிட்டன. குறிப்பாக தர்ம ரக்ஷன சபை இரண்டு மூன்று முறை தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பியிருக்கிறது. அதன் பின்னர்தான் நீதிக்கட்சி ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அறநிலையத்துறையை உருவாக்குவதற்கான வரைவு முழுவதையும் எழுதியவர் என்.கோபால்சாமி அய்யங்கார், அதன் முதல் தலைவராக இருந்தவர் நீதிபதி சதாசிவம் ஐயர். இப்படி பனகல் அரசர் மிகச் சரியாக யாரிடமிருந்து எதிர்ப்பு வருமோ அவர்களைக் கொண்டே இந்த விஷயத்தைக் கையாண்டார். ஆனால், அப்போது முதல் ஒருபக்கம் அதற்கு எதிர்ப்பும் இருந்தது. காமராஜர் முதல்வராக இருந்தபோதும் அறநிலையத்துறையைக் கலைக்க வேண்டும் எனப் பல எதிர்ப்புகளும் கோரிக்கைகளும் எழுந்தன. ஆனால், அவரும் முடியாது என உறுதியாக மறுத்துவிட்டார். அதன் பின்னர் கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளாக பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா அறநிலையத்துறையை கலைக்க வேண்டும் எனத் தொடர்ந்து பேசிவருகிறார். தற்போது ஜக்கி வசுவேதவும் ஹெச்.ராஜாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துவருகிறார். அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழக கோயில்களை விடுத்து தனியாரிடம், இந்துகளிடம் கொடுத்துவிடுங்கள் என்கிறார்கள்.

சுப.வீரபாண்டியன்
சுப.வீரபாண்டியன்

தனியார் என்றால் அது யார்? இந்துக்கள் யார்? கருவறை செல்ல அனுமதி உள்ள இந்துக்களா? வாசல் வரை அனுமதிக்கப்பட்ட இந்துக்களா? கொடிக்கம்பத்தைத் தாண்டக் கூடாது என்று சொல்லப்பட்டுள்ள இந்துக்களா? அல்லது கோயிலுக்குள்ளேயே நுழையக் கூடாது எனத் தடுக்கப்பட்டுள்ள இந்துக்களா? இந்துக்கள் என்று சொன்னாலே வருணாசிரம அடிப்படையில் படிப்படியாக இருக்கும் சமூக அமைப்பில் யார் மேலே இருக்கிறார்களோ அவர்கள் கையில் கொடுங்கள் என்றுதான் அவர்கள் சொல்கிறார்கள். கோடிக்கணக்கான வருமானம் உடைய கோயில்களை ஒப்படையுங்கள் என்று சொல்வது வெறும் அதிகாரத்துக்காக மட்டுமல்ல” என்றவர்,

மேலும் “தனியாரிடம், இந்துகளிடம் நிர்வாகத்தை ஒப்படைத்தால் நிர்வாகம் சிறப்பாக இருக்கும் என்கிறார்கள். அப்படி தீட்சிதர்கள் நிர்வாகத்திலிருந்த சிதம்பரம் நடராஜர் கோயிலை மட்டும் உதாரணத்துக்காக எடுத்துக்கொள்வோம். அரசிமிருந்தபோது இவ்வளவு வருமானம் இருந்தது, தீட்சிதர்கள் கையிலிருந்தபோது எவ்வளவு வருமானம் வந்தது என்று நீதிமன்றத்திலேயே புள்ளிவிவரங்களுடன் தரவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதை ஆராய்ந்தால் நிர்வாக முறைகேடு பற்றித் தெரிந்துகொள்ளலாம். இப்போது பொறுப்பேற்றிருக்கும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அனைத்து கோயில்களின் சொத்து விவரங்களையும் இணையத்தில் பதிவேற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து கோயில்களைத் தனியாரிடம், இந்துகளிடம் கொடுத்துவிடுங்கள் என்று சொல்லிவரும் ஜக்கி வாசுதேவே இது சரியான நகர்வுதான் என்று பாராட்டும்போதுதான் கொஞ்சம் அச்சமாக இருக்கிறது. ஆனால், அவர்களுக்கும் பாராட்டுவதைத் தவிர வேறு வழியும் இல்லை. இதற்கிடையே நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் குறித்து மிகக் கடுமையாகவும், தரம் குறைந்தும் ஒரு நேர்காணலைக் கொடுக்கிறார். இதன் மூலம் இவர்களின் நோக்கம் மக்கள், ஆன்மிகம், பக்தர்கள் நலம் நோக்கியது என்றில்லாமல் சமூகத்தில் மூன்று சதவிகிதமாக இருக்கிற தாங்கள் எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ள வேண்டும். எல்லா சொத்துகளையும் தாங்களே அபகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதையே காட்டுகிறது.

சேகர்பாபு
சேகர்பாபு

காட்சி சார்பின்றி இந்துகள் என்று சொல்லிக்கொள்ளும் அனைவரும் இணைந்து கோயில்களின் சொத்துகள் அரசிடம்தான் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அது மக்கள் சொத்தாக இருக்கும் என்று குரல் கொடுக்க வேண்டும். என்னுடைய கணக்கில் மீண்டும் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதோர் என்கிற முரண் சமூகத்தில் மேம்பட்டுக்கொண்டே வருகிறது” என்றார் விளக்கமாக.

கோயில்களின் சொத்து விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவு குறித்து தமிழக பா.ஜ.க-வின் மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜனிடம் பேசினோம். “கோயிலின் சொத்துகள் சீரழிக்கப்படக் கூடாது. பல்லாயிரக்கணக்கான கோயில்களில் ஆன்மிகச் செயல்பாடுகளுக்கான நிதி வசதி இல்லாமல் இருப்பதையும், மறுபக்கம் கோயில்களின் நிதி வசதி சுரண்டப்படுவதையும், ஆக்கிரமிக்கப்படுவதையும் பார்க்கிறோம். அதுமட்டுமல்ல, கோயில் நிலங்களில் வாடகைக்கு இருப்போர் அதற்குரிய வாடகையைக் கொடுக்காமல் இருப்பதிலும், பல கோயில்களில் வாடகைத் தொகை என்பது மிகவும் குறைவாக வசூலிக்கப்படுவதையும் பார்க்க முடிகிறது. கோயில்கள் சீரமைக்கப்பட்டு நிர்வகிக்கப்பட வேண்டும் என்பது பா.ஜ.க-வின் நீண்ட நாள் கோரிக்கை ஆசையும் ஆகும். இதையே பா.ஜ.க தலைவர்கள் பலரும் தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம். எனவே, கோயில் சொத்துகளைக் கணக்கெடுப்பது வரவேற்கப்பட வேண்டியது. அவற்றில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அவை மீட்கப்பட வேண்டும்.

கரு.நாகராஜன்
கரு.நாகராஜன்

விதிகளுக்கு மீறி கட்டடங்கள் அமைக்கப்பட்டிருந்தால் அவை அகற்றப்பட வேண்டும். மேலும், வாடகை பாக்கிதாரர்கள் மற்றும் முறைகேடாகக் கோயிலில் தொழில் செய்துவருபவர்களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில்களின் சொத்துகளைப் பட்டியலிட்டு அவற்றை இணையத்தில் பதிவிடுவதுடன் ஒரு கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள், கடைகள் குறித்தும் அறிவிப்பு பலகைகளையும் வைக்க வேண்டும் என்பதும் என்னுடைய கருத்து.

கோயில் நிர்வாகங்கள் சரியாகச் செயல்படவில்லை என்பதால்தான் அவற்றை பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பா.ஜ.க தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம். ஊருக்குப் பெரியவர்கள் மற்றும் ஆன்மிகத்த்ல் தேர்ந்தவர்களைக் கோயில்களில் தக்காராக நியமிப்பதற்குக் காரணம் அவர்களின் ஆலோசனை, அனுபவத்தின் மூலம் கோயில் வளர்ச்சி, பக்தர்களின் தேவையான அடிப்படை வசதிகளைப் பெருக்க, ஆன்மிகரீதியிலான பூஜைகளைச் சரியாக நடத்த, கும்பாபிஷேகம் போன்ற நிகழ்வுகளை திறம்பட நடத்துவதற்காகத்தானே... அறங்காவலர்களை நியமிக்கும் அரசு அவர்களிடம் கோயில் நிர்வாகத்தை ஒப்படைக்க மட்டும் ஏன் தயங்குகிறது? அப்போதுதானே நிர்வாகத்தில் நிகழும் மாற்றங்களைப் பார்க்க முடியும்... தமிழகக் கோயில்களின் சொத்துகளைக் கணக்கெடுத்து அவற்றை வருமானம் குறைவாக உள்ள கோயில்களைச் சீரமைக்கப் பயன்படுத்தி, எல்லா கால பூஜைகளும் சிறப்பாக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லிவருகிறோம்.

இந்து அறநிலையத்துறை
இந்து அறநிலையத்துறை

ஆன்மிகம் வளர்ந்துகொண்டிருக்கிறது, இந்து மதம் தழைத்தோங்கிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு விழாவிலும் பக்தர்கள் கோடிக்கணக்கில் பங்கேற்று இறைவனை வழிபடுகிறார்கள். கொரோனா காலத்திலும் கோயில்களின் வாசலில் நின்று பல ஆயிரம் பேர் திருமணம் செய்துகொண்டிருக்கிறார்கள். இறை பக்தி எந்த அளவுக்கு மக்களிடம் வளர்ந்துவருகிறது என்பதைப் புரிந்துகொண்டு, இந்து சமய அறநிலையத்துறையைச் சீரமைத்து மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப இந்த அரசு செயல்பட வேண்டும்” என்றார்.