Published:Updated:

ரத்தத்தில் கையெழுத்து; அரசுப் பேருந்து ஓட்டுநர் டு அதிமுக அவைத்தலைவர் - யார் இந்த தமிழ்மகன் உசேன்?

தமிழ்மகன் உசேன்
News
தமிழ்மகன் உசேன்

தனக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டதை, ``உழைப்புக்குக் கிடைத்த மரியாதை'' என நெகிழ்ச்சியோடு தெரிவித்திருக்கிறார் தமிழ்மகன் உசேன்.

அ.தி.மு.க-வின் அவைத்தலைவராக அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளர் தமிழ்மகன் உசேன், இன்று நடந்த அந்தக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் மறைவுக்குப் பிறகு, கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக காலியாக இருந்த பதவிக்கு தற்காலிகமாக அவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அ.தி.மு.க-வில், அவைத்தலைவர் பதவி அதிகாரமிக்க பதவியாக இல்லாவிட்டாலும், கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவுக்குத் தலைமை தாங்கும் கௌரவமான பதவியாகப் பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணைய விதிப்படி ஆண்டுக்கொருமுறை பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும். அ.தி.மு.க-வில் அவைத்தலைவர் தலைமையில்தான் அந்தக் கூட்டம் நடக்கும். அவரது கையெழுத்திட்டே பொதுக்குழு உறுப்பினர்களுக்கான அழைப்பிதழ், அது தொடர்பான அறிக்கைகள் வெளியாகும். வருகிற ஜனவரிக்குள் அ.தி.மு.க-வின் பொதுக்குழுக் கூட்டம் நடக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், அதற்குள் அவைத்தலைவரை நியமித்தாக வேண்டும் என்ற கட்டாயம் எழுந்தது.

ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி
ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அ.தி.மு.க-வில் இதுவரை பாவலர் மா.முத்துசாமி, வள்ளிமுத்து, நாவலர் நெடுஞ்செழியன், பொன்னையன், புலவர் புலமைப்பித்தன், கா.காளிமுத்து, மதுசூதனன் ஆகியோர் அவைத்தலைவர்களாக பதவி வகித்திருக்கிறார்கள். அதிகபட்சமாக, 2007 முதல் 2021 வரை கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் மதுசூதனன் அந்தப் பதவியை வகித்திருக்கிறார். 2021, ஆகஸ்ட் 5-ம் தேதி உடல்நலக் குறைவால் அவர் மறைந்ததை அடுத்து, காலியாக இருந்த பதவிக்கு, முன்னாள் அமைச்சர் வளர்மதி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் முயன்றனர். கடந்த சில நாள்களுக்கு முன்பாக நடந்த கூட்டத்தில், செங்கோட்டையனை அவைத்தலைவராக நியமிக்க வேண்டும் எனவும் சிலர் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இந்த நிலையில், நேற்று அந்தக் கட்சியின் சிறுபான்மைப் பிரிவு செயலாளராக இருந்த அன்வர் ராஜா நீக்கப்பட்டிருந்த நிலையில், அதை ஈடுசெய்யும்விதமாக தமிழ்மகன் உசேனுக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாக அ.தி.மு.க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தனக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டது, ``உழைப்புக்குக் கிடைத்த மரியாதை'' என நெகிழ்ச்சியோடு தெரிவித்திருக்கிறார் தமிழ்மகன் உசேன்.

யார் இந்த தமிழ்மகன் உசேன்?

கன்னியாகுமரி மாவட்டத்தைப் பூர்விகமாகக்கொண்ட தமிழ்மகன் உசேன், சிறுவயதிலிருந்தே தீவிரமான எம்.ஜி.ஆர் ரசிகர். எம்.ஜி.ஆர் மன்றங்களில் மிகத் தீவிரமாகச் செயல்பட்டவர். அரசுப் பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றிவந்தார். இந்த நிலையில், 1972 -ம் ஆண்டு, அக்டோபர் 10-ம் தேதி தி.மு.க-விலிருந்து எம்.ஜி.ஆர் நீக்கப்பட்ட விஷயம் தெரியாமல், நாகர்கோவிலிலிருந்து திருச்சிக்குப் பேருந்தை ஓட்டிக்கொண்டு சென்றிருக்கிறார் தமிழ்மகன் உசேன். மதுரை மேலூர் அருகே பேருந்து சென்றபோது சாலையில் ஒரே கூட்டமாக இருந்ததைக் கண்டு பேருந்தை நிறுத்தி, அங்கிருந்தவர்களிடம் என்னவென்று விசாரித்திருக்கிறார். அப்போது, எம்.ஜி.ஆரைத் தி.மு.க-விலிருந்து நீக்கிவிட்டார்கள் என்கிற செய்தி ரேடியோவில் ஒலிபரப்பாவதாக அங்கிருந்தவர்கள் கூறியிருக்கிறார்கள். இதையடுத்து 24 பயணிகளோடு பேருந்தைவிட்டு இறங்கியவர் 'காட்டு தர்பார் கருணாநிதி ஆட்சியில் ஓட்டுநராக இருக்க நான் விரும்பவில்லை. என்னுடைய பதவியை ராஜினாமா செய்கிறேன்' என ஒரு பேப்பரில் எழுதி, கண்டக்டரிடம் கொடுத்துவிட்டு, அங்கிருந்து சென்னை வந்து எம்.ஜி.ஆரைச் சந்தித்திருக்கிறார்.

தமிழ்மகன் உசேன்
தமிழ்மகன் உசேன்

அதேபோல, சென்னை சத்யா ஸ்டூடியோவில் அ.தி.மு.க கட்சி தொடங்கும்போது எம்.ஜி.ஆருடன் கையெழுத்திட்ட 11 நபர்களில் இவரும் ஒருவர். நான்காவதாகக் கையெழுத்திட்ட இவர், தன் ரத்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார். கன்னியாகுமரி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளராக முதன்முறையாக நியமிக்கப்பட்டவர். 17 வருடங்கள் மாவட்டச் செயலாளராகவும் இருந்திருக்கிறார். கிட்டத்தட்ட 50 வருடங்களாக எம்.ஜி.ஆர் மன்றப் பொறுப்புவகித்து வந்தவரை, 2011-ம் ஆண்டு அகில உலக எம்.ஜி.ஆர் மன்றத்தின் செயலாளராக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நியமனம் செய்தார். 2012-ல் ஆட்சி மன்றக்குழு உறுப்பினராகவும், வக்பு வாரியக்குழுத் தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், இன்று அவர் அ.தி.மு.க-வின் தற்காலிகாக அவைத்தலைவராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். முறைப்படி அவர் பொதுக்குழுவில் அ.தி.மு.க-வின் அவைத்தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று அ.தி.மு.க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவிர, குமரி மாவட்டத்தை தமிழ்நாட்டோடு இணைக்க நடந்த போராட்டத்தில் ஈடுபட்டு, தற்போதுவரை எல்லைக் காவல் வீரருக்கான உதவித்தொகையையும் பெற்றுவரும் தமிழ்மகன் உசேனுக்கு, 2021-ம் ஆண்டு தமிழக அரசு சார்பில் தந்தை பெரியார் விருதும் வழங்கப்பட்டது.