தமிழக அரசின் விரைவு பேருந்துகளில் நெடுந்தூரம் பயணிக்கும் பயணிகள், பேருந்து நிறுத்தப்படும் பயண வழி உணவகங்களில் தான் சாப்பிட்டாக வேண்டும்..!தரமற்ற உணவுகள், மூன்று மடங்கு அதிக விலை, அடாவடி பேச்சுக்கள் என இங்கு துயரங்களை பயணிகள் சந்திப்பது பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த துயரங்களையும், தமிழக அரசின் போக்குவரத்து கழகங்களின் அலட்சியப் போக்கையும் விவரித்து 12.12.2021 தேதியிட்ட ஜூனியர் விகடன் புத்தகத்தில், "தரமற்ற உணவு... மூன்று மடங்கு விலை... அடாவடி ஹோட்டல்களுக்கு துணைபோகும் அரசு போக்குவரத்துக்கழகம்" எனும் தலைப்பில் விரிவான கட்டுரையை வெளியிட்டிருந்தோம்.

நம் செய்தியின் எதிரொலியாக, கடந்த டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் விக்கிரவாண்டி, மாமண்டூர் பகுதிகளிலுள்ள பயணவழி உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறையினரால் சோதனை நடைபெற்றது. இது மட்டுமின்றி, விழுப்புரம் - ஒலக்கூர் இடையிலான நெடுஞ்சாலை ஓரமாக இருக்கும் உணவகங்களிலும் சோதனை நடைபெற்றது.
குறிப்பாக விக்கிரவாண்டி அருகே செயல்பட்டு வரும்... பயணவழி உணவகங்களான (அரசு போக்குவரத்து கழகத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டவை) ஹில்டா, அரிஸ்டோ, உதயா, ஜே.ஜே.கிளாசிக், ஜே.கிளாசிக், அண்ணா ஆகிய 6 பயணவழி உணவகங்களிலும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் காலாவதியான உணவு பொருட்கள் அழிக்கப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட உணவகங்கள் 10 நாட்களுக்குள் தவறுகளை திருத்திக் கொள்ளும் படி நோட்டீஸும் அளிக்கப்பட்டது. ஆனால், 'இவையெல்லாம் நாடகம்' தான் எனும் குற்றச்சாட்டுகளும் எழுந்தது.

அச்சமயம் நம்மிடம் பேசியிருந்த போக்குவரத்துதுறை அமைச்சர் ராஜகண்ணப்பன், "பயணவழி உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகள் தரமானதாகவும், விலை நியாயமானதாகவும் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் டெண்டரே கொடுக்கப்படுகிறது. போக்குவரத்து துறைக்கு வருவாய் கிடைக்கிறது என்பதற்காக தரம் மற்றும் விலையில் சமரசம் செய்து கொள்ள முடியாது. தற்போது மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் அடுத்தடுத்து தொடரும். தவறு செய்யும் ஹோட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவற்றின் டெண்டர் கேன்சல் செய்யப்படும்" என்று கூறியிருந்தார்.
அமைச்சரின் பதிலையும் சேர்த்து, டிசம்பர் 22ம் தேதி "ஹைவே ஹோட்டல்களில் சோதனை... நாடகமா... உண்மையான அக்கறையா?" எனும் தலைப்பில் follow-up கட்டுரையை வெளியிட்டோம். இதனைத் தொடர்ந்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் தான் நேற்று (25.01.2022) செங்கல்பட்டு மாவட்டம், மாமண்டூர் பயணவழி உணவகத்தில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து புகார் எழுந்ததையடுத்து... அந்த பயணவழி உணவகத்தில், அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் நின்று செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக விக்கிரவாண்டி அருகே செயல்பட்டு வரும் 5 பயணவழி உணவகங்களிலும் அரசு பேருந்துகள் நின்று செல்வதற்கு தடை விதித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "மாமண்டூர் பயணவழி உணவகத்தை தொடர்ந்து, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் இளங்கோவன் தலைமையில் போக்குவரத்து கழக அலுவலர்கள் குழு, போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் நிற்கும் நெடுஞ்சாலை தனியார் உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் விக்கிரவாண்டி அருகே செயல்பட்டு வரும் அண்ணா, உதயா, வேல்ஸ், ஹில்டா மற்றும் அரிஸ்டோ ஆகிய 5 உணவகங்கள் சுகாதாரமற்ற உணவுப்பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தது ஆய்வின்போது கண்டறியப்பட்டது. மேற்கண்ட உணவகங்களில் அரசு பேருந்துகளை நிறுத்த தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், மேற்கண்ட உணவகங்களில் அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளை நிறுத்துவதற்காக போடப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுகாதாரமற்ற பொருட்களை அதிக விலைக்கு விற்று கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வந்த பயணவழி உணவகங்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கும் மக்கள் பிரதிநிதிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது ஜூனியர் விகடன்.