தூத்துக்குடியில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி மூலம் புதிதாகத் தொடங்கப்பட்டிருக்கும் இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கத்தை பா.ஜ.க-வின் மாநிலத் துணைத் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சசிகலா புஷ்பா திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இளைஞர்களின் உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் நோக்கில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாஜக சார்பில் விளையாட்டு மைதானங்கள் திறக்கப்பட்டுவருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கம் தொடங்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் திட்டங்களைத் தொடர்ந்து தி.மு.க மக்களிடம் பொய்ப் பிரசாரம் செய்துவருகிறது. தி.மு.க-வின் அராஜகப் போக்கு அதிகமாகிவிட்டது. பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தி.மு.க அமைச்சர்களின் ஊழல்களை ஒவ்வொன்றாக அம்பலப்படுத்திவருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஆகையால், எப்போது வேண்டுமானாலும் மகாராஷ்டிராவில் நடந்ததுபோல் தமிழ்நாட்டிலும் ஆட்சி மாற்றம் நடக்கலாம். 2011-ம் ஆண்டு மின்வெட்டு பிரச்னை காரணமாகவே தி.மு.க ஆட்சியை இழந்தது. அதன் பிறகு அ.தி.மு.க ஆட்சியில் பெரிய அளவில் மின்வெட்டு ஏதும் இல்லை. தற்போதைய தி.மு.க ஆட்சியில் தொடர்ந்து நிலவும் மின்வெட்டுக்கு ஊழல்தான் காரணம்.

தி.மு.க-வின் மாநில மகளிரணிச் செயலாளரும், இந்தத் தொகுதியின் எம்.பி-யுமான கனிமொழி இருக்கும் இந்த மாவட்டத்தில் எரல் பகுதியிலுள்ள ஓர் அரசுப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியிடம் ஆசிரியர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டிருக்கிறார். பெற்றோர்களின் போராட்டத்தால் அந்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். தி.மு.க ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. இனியும் இருக்காது” என்றார்.