Published:Updated:

`60 மீண்டும் 58 ஆகிறதா..?!’ - அரசு ஊழியர்கள் கவுன்ட்டௌன் ஆரம்பம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தலைமைச் செயலகம் - அரசு ஊழியர்கள்
தலைமைச் செயலகம் - அரசு ஊழியர்கள்

தற்போது ரிடையர்மென்ட் பலன்களை, இரண்டு ஆண்டுகள் கழித்துப் பணமாக்கும் பத்திரமாக வழங்கவிருப்பதாகச் செய்திகள் கோட்டையில் உலாவருகின்றன.

வெள்ளை அறிக்கை, பட்ஜெட் என்று தலைமைச் செயலகம் பரபரப்பாகக் காட்சியளிக்கிறது. ஆனால், அரசு ஊழியர்கள்தான் சோகத்தில் இருக்கிறார்கள். தங்களுடைய பிரச்னைகளையெல்லாம் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆனதும் தீர்த்துவைப்பார் என்கிற பெரிய எதிர்பார்ப்புடன் இருந்தார்கள் தமிழகத்திலுள்ள 14 லட்சம் அரசு ஊழியர்கள். ஆனால், புது ஆட்சி வந்து நூறு நாள்கள் ஆகப்போகின்றன. நிதிப் பற்றாக்குறையால், பழைய பென்ஷன் திட்டம் தள்ளிப்போகும். ரிட்டயர்மென்ட் வயது 58-ஆகக் குறைக்கப்படும். நிலுவைத்தொகைகள் தர வாய்ப்பில்லை... என்றெல்லாம் அரசுத் தரப்பில் தினம் ஒரு தகவல் கசிவதைப் பார்த்துக் கலங்கிப்போயிருக்கிறார்கள். அரசுப் பணியாளர்களின் நிர்வாகத்தை கவனிக்கும் பொறுப்பை, நிதித்துறையை கவனிக்கும் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனிடம் கொடுத்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அரசு ஊழியர்கள், பிரச்னைகளைப் பற்றிப் பேச முயன்றும், அமைச்சர் பிஸியாக இருப்பதால் சந்திக்க முடியாமல் திணறுகிறார்கள். கருணாநிதி ஆட்சியில் அமைச்சர் வீரபாண்டியார், அரசு ஊழியர்கள் நலனை கவனித்துவந்தார். ஏதாவது பிரச்னையென்றால், இவரைச் சந்தித்தால் விஷயத்தை முதல்வரிடம் உடனே கொண்டு செல்வார். சீனியர் அமைச்சர்கள் பலரும் அரசு ஊழியர் சங்கப் பிரதிநிதிகளுடன் அன்றாடத் தொடர்பில் இருப்பார்கள். இப்போது நிலைமை தலைகீழ்! முக்கிய அமைச்சர்களை அரசுப் பணியாளர்கள் சந்தித்துப் பிரச்னைகளைச் சொன்னால், அவர்கள் கேட்டுக்கொள்வதோடு சரி. முதல்வர் கவனத்துக்குக் கொண்டுபோவதில்லையாம்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தலைமைச்செயலகத்திலுள்ள அரசுப் பணியாளர் சங்கப் பிரமுகர் ஒருவர் கூறுகிறார்...

``தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் தி.மு.கழக அனுதாபிகள் என்று ஒரு முத்திரை உண்டு. அரசு ஊழியர்கள் யாரும் அ.தி.மு.க-வுக்கு ஒட்டுப்போட மாட்டார்கள், தேர்தல் பணியில் தி.மு.க-வுக்கு ஆதரவாகச் செயல்படுவார்கள் என்றே ஜெயலலிதா ஆட்சியில் சொல்வார்கள். அதற்குப் பின்னணியும் உண்டு. அரசு ஊழியர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட சம்பள கமிஷன்களில் ஒன்றைத் தவிர, அனைத்தும் தி.மு.க அரசால் வழங்கப்பட்டவை. மத்திய அரசுக்கு இணையான சம்பளம், புதிய பதவிகள் நியமனம், உடனடிப் பதவி உயர்வு, கேட்ட இடத்துக்கு டிரான்ஸ்ஃபர் என அரசு ஊழியர்களைச் செல்லப் பிள்ளைகளாகவே நடத்திவந்தார் கருணாநிதி.

2003 அரசு ஊழியர் ஸ்டிரைக்கில் அனைவரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டபோது ஊழியர் சங்கத் தலைவர்களை அழைத்து `உங்கள் வயிற்றெரிச்சல் சும்மா விடாதுய்யா...’ என்று ஆறுதல் சொல்லி தன் உணர்வை வெளிப்படுத்தியவர் கருணாநிதி. அவருக்குத் துணையாக வீரபாண்டியார் அனைத்து அரசு ஊழியர் சங்கங்களையும் அரவணைத்து, அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தனி கவனம் செலுத்துவார். கலைஞர் கருணாநிதி ஒருமுறை வேடிக்கையாக வீரபாண்டியாரிடம், ``நீங்கள் தி.மு.க-காரரா அல்லது அரசு ஊழியர் சங்க நிர்வாகியா?” என்று வேடிக்கையாகக் கேட்டதுண்டு.

2001-2006 ஜெயலலிதா ஆட்சியில் லட்சக்கணக்கில் அரசு ஊழியர்கள் கைதுசெய்யப்பட்டதும், ஐம்பதுக்கும் மேலான அரசு ஊழியர்கள் ஸ்டிரைக் நடவடிக்கைகளால் உயிர் பலியானதும் அவர்கள் மனதில் ஆறாத வடுவாகப் பதிந்துவிட்டன. அ.தி.மு.கழக சார்புநிலை எடுத்தவர்கள்கூட, அதன் பிறகு தி.மு.க சார்புநிலை எடுத்தார்கள்.

ஜெயலலிதா
ஜெயலலிதா

2004 முதல் ஜெயலலிதாவே தாமாக முன்வந்து பல சலுகைகளை அறிவித்தபோதும் அவர்கள் மனம் மாறவில்லை. அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க ஒரு சீட்கூட வெற்றிபெற முடியவில்லை. 2006 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றிபெற அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் மாநிலம் முழுதும் பிரசாரம் செய்யும் அளவு இறங்கிவிட்டார்கள். பலனாக 2006-ல் திமுக ஆட்சியமைத்தது. அந்த ஆட்சிக்காலத்தில் கருணாநிதி அரசு ஊழியர்களுக்கு எல்லா விதிகளையும் தளர்த்தி பதவி உயர்வுகளை வாரி வழங்கியது. தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் செக்‌ஷன் ஆபீஸர்கள் சம்பளம் உயர்த்தப்பட்டது. ஊதியக்குழு நிலைவைத் தொகைகள் தவறாமல் வழங்கப்பட்டன. கிட்டத்தட்ட 2006-2011 தி.மு.க ஆட்சிக்காலம் தமிழ்நாடு அரசு ஊழியர்களின் பொற்காலமாகவே இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதற்கு அடுத்தபடியாக, 2011 முதல் 2021 வரை நடைபெற்ற அ.தி.மு.க ஆட்சிக்காலம் தமிழ்நாடு அரசு ஊழியர்களின் இருண்ட காலம் என்றே சொல்லலாம். பதவி உயர்வுகள் குறித்த காலத்தில் வழங்கப்படவில்லை. தேர்வாணையங்களில் டெபுடி கலெக்டர் முதல் ஜூனியர் அசிஸ்டன்ட் வரை காசு கொடுத்தால் எப்படியும் வேலை கிடைக்கும் என்ற அளவு நிர்வாகம் தள்ளாடியது. பணியாளர் நிர்வாகம், நிதி உள்ளிட்ட அரசு ஊழியர் தொடர்புடைய துறைகளெல்லாம் அவர்களுக்குப் பாதகமாகவே செயல்பட்டன. எந்தக் கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. பதவி உயர்வுகள் கிடப்பில் போடப்பட்டன. நீதிமன்ற வழக்குகள் அப்பீல் செய்யப்பட்டு இழுத்தடிக்கப்பட்டன. தி.மு.க-வின் 2021 தேர்தல் வாக்குறுதியில் அரசு ஊழியர்களுக்கான பல திட்டங்கள் இருந்தன. அவற்றில் முதன்மையானது பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவது. அதன் பிறகு அ.தி.மு.க-வின் பத்தாண்டு ஆட்சியில் ரத்து செய்யப்பட்ட பலன்களை மீண்டும் வழங்குவோம் என்று பிரசாரம் செய்தார்கள். எனவே, 2021-ல் மீண்டும் தி.மு.க ஆட்சி வந்தால்தான் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு விடிவு காலம் என்று கும்மிடிப்பூண்டி முதல் குழித்துறை வரை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் உறுதியாக நம்பினார்கள்'' என்று நிறுத்தினார்.

அரசு ஊழியர்கள்
அரசு ஊழியர்கள்

அவரிடம், `அரசுப் பணியாளர்களின் பிரச்னைதான் என்ன?’ என்று கேட்டோம்

பணியாளர் சங்கப் பிரமுகர் தொடர்ந்தார்... ``2004-ல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பென்ஷன் திட்டத்தில் அப்போது குறைவானவர்களே இருந்தார்கள். 2021-ல் கிட்டத்தட்ட 50 சதவிகிதத்துக்கும் மேல் புதிய பென்ஷன் திட்ட ஊழியர்களே. புதிய பென்ஷன் திட்டத்தில் முக்கியக் குறை, பணியாளரே தனது பென்ஷனுக்கான தொகையைச் செலுத்த வேண்டும். அந்தத் தொகையை இடையில் அட்வான்ஸாகப் பெற முடியாது. பழைய பென்ஷன் திட்டத்தில் உள்ளவர்களுக்கு ஜி.பி.எஃப் என்ற வருங்கால வைப்பு நிதித் திட்டம் உண்டும். அந்தத் திட்டத்தில் அவர்கள் சேமிக்கும் தொகையை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அட்வான்ஸாகப் பெற முடியும். இந்த வசதி புதிய பென்ஷன் திட்டத்தில் இல்லை. இதனால் புதிய பென்ஷன் திட்டத்தில் பணியில் சேர்ந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். எடுத்துக்காட்டாக, தலைமைச் செயலகத்தில் தவறாமல் 30 மாவட்டங்களுக்கு ஒவ்வொரு ஆறு மாதமும் தலா 90 செக்‌ஷன் ஆபீஸர்களும், 90 அண்டர் செக்ரட்டரிகளும் பயிற்சிக்கு அனுப்புவது கிடப்பில் போடப்பட்டது. இதனால் பதவி உயர்வு கடுமையாக பாதிக்கப்பட்டது. அடுத்து ஓய்வு பெறும் வயதை 59 என உயர்த்தி, பிறகு 60 என உச்சத்துக்கு ஏற்றிவிட்டது அ.தி.மு.க அரசு. இதனால் ஓய்வுபெறுபவர்களின் ரிடையர்மென்ட் பலன்கள் வழங்குவது இரண்டு வருடங்கள் தள்ளிப்போனது.

அமைதியோ அமைதியில் அமைச்சர்கள் இல்லம்... செயலற்றிருக்கும் தலைமைச் செயலகம்!

பின்னர் கோவிட் பெருந்தொற்று காரணமாக டிஏ நிறுத்தப்பட்டது. லீவ் சரண்டர் என்ற அரை மாதச் சம்பளத்தைப் பணமாகப் பெறுவது ரத்து செய்யப்பட்டது. விடுப்பு பயணச் சலுகை நிறுத்தப்பட்டது. சம்பளம் கொடுப்பதே பெரிய விஷயம் என்ற அளவுக்கு அரசு நிர்வாகம் தள்ளாடியது. இந்தக் குறைகளெல்லாம் தி.மு.க பதவிக்கு வந்தால் சரியாகிவிடும் என்ற எதிர்பார்ப்போடு அரசு ஊழியர்கள் தவமாகத் தவமிருந்தார்கள். ஆனால் திமுக அரசு பதவியேற்றதும், 7.5.2021 அன்று கோட்டைக்குள் நுழைந்த முதலமைச்சர் ஸ்டாலின் தன்னை வரவேற்க, பதாகைகளுடன் நின்ற தலைமைச் செயலக ஊழியர்கள் பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை. இதுதான் முதல் வருத்தம் எங்களுக்கு!'' என்றார்.

கருணாநிதி, ஸ்டாலின்
கருணாநிதி, ஸ்டாலின்

தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் மற்றோர் அதிகாரியிடம் பேசினோம்.

``அதிமுக ஆட்சியில் 60-ஆக உயர்த்தப்பட்ட ரிடையர்மென்ட் வயது மீண்டும் 58 ஆகிறது என்று கடந்த ஒரு வாரமாக எல்லாப் பத்திரிகைகளும் எழுதிவருகின்றன. வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த முடிவு என்று சொல்லப்பட்டாலும், ஓய்வூதியப் பலன்கள் ஏதும் இப்போது கிடையாது என்பது பேரிடியாக விழுந்துள்ளது. 2003-ல் ஜெயலலிதா ரிடையர்மென்ட் பலன்களை ஐந்து ஆண்டுகள் கழித்துப் பெறும் பத்திரங்களாக வழங்கி ஆணையிட்டு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் தேன்கூட்டை கலைத்தார். அதன் பலனை அடுத்த எட்டு ஆண்டுகள் அனுபவித்தார். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு சீட்கூட அதிமுக வெற்றி பெறவில்லை. 2006 கொளப்பாக்கம் அதிமுக பொதுக்குழுவில், மாவட்டப் பிரதிநிதிகள் அனைவரும் மேடையிலிருந்த அம்மாவிடம், அதிமுக-காரர்களை எந்த அரசு அலுவலகத்திலும் கண்டுகொள்வதில்லை என்று புலம்பினார்கள். இதற்காகச் சில சலுகைகளை ஜெயலலிதா அறிவித்துப்பார்த்தார். இருந்தாலும் 2006 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவியது. இதே பாணியில் தற்போது ரிடையர்மென்ட் பலன்களை இரண்டு ஆண்டுகள் கழித்துப் பணமாக்கும் பத்திரமாக வழங்கவிருப்பதாகச் செய்திகள் கோட்டையில் உலாவருகின்றன. ஆக, `நான் திமுக அனுதாபி’ என்று மார்தட்டிய அரசு ஊழியர்கள் இன்று இரண்டு கழகங்களாலும் கைவிடப்பட்ட அநாதைகளாக நிற்கிறார்கள் '' என்றார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், நிதிப் பற்றாக்குறையைக் காரணம்காட்டி அரசு ஊழியர்களுக்குச் சாதகம் செய்யாவிட்டால், 2003 அரசு ஊழியர் போராட்டத்தைப் போன்ற இன்னொரு போராட்டத்துக்கான சகல அறிகுறிகளும் தெரிகின்றன. ஒய்வு பெறும்போது கிடைக்கும் பணப் பலன்கள் தள்ளிப்போவதை பெரும்பாலானவர்கள் விரும்பவில்லை. தலைமைச் செயலகத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் ஓய்வு வயதை 58-ஆக குறைத்தால் உடனடியாக வீட்டுக்குச் செல்வார்கள். தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் பேர் ஓய்வு பெறுவார்கள். இவர்களுக்கான பணப் பலன்களை உடனடியாக மு.க.ஸ்டாலின் அரசால் கொடுக்க முடியுமா என்பது கேள்விக்குறி!

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்

இப்படிப் பல விஷயங்களில் அரசு ஊழியர்கள் கதிகலங்கியிருக்கிறார்கள். அ.தி.மு.க அரசால் நிறுத்தப்பட்ட சலுகைகள் மீண்டும் தரப்படுமா, ஓய்வு பெற்றவர்களின் காலியிடத்தில் ஜூனியர்கள் பதவி உயர்வு பெற்று நியமிக்கப்படுவார்களா, அ.தி.மு.க ஆட்சியைவிட இன்னும் மோசமாகப் போகுமா என்றெல்லாம் தலையில் தொங்கும் கத்தியைப் பார்த்தபடி தினம் தினம் கோப்புகளை நகர்த்திவருகிறார்கள் தமிழ்நாடு அரசு ஊழியர்கள். கருணாநிதியாக இருந்தால் அரசு ஊழியர்களுக்கான சலுகைகளை அதிரடியாக அறிவிப்பார். அத்தகைய துணிச்சலும் நிர்வாகத்திறனும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கும் இருக்கும் என்று நம்புகிறார்கள் அரசுப் பணியாளர்கள்.

அடுத்து வரும் நாள்களில் இவற்றுக்கான பதில் கிடைத்துவிடும்!

3-ம் ஆண்டு நினைவுநாள்: கருணாநிதியின் கனவுகளை நோக்கி ஸ்டாலின் ஆட்சி..!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு