Published:Updated:

`மேடம், ஜீப் டயர்களைக் காணோம்!'- பெரம்பலூர் அரசு அலுவலகங்களைப் பதறவைக்கும் திருட்டுக் கும்பல்

பெரம்பலூர் காவல் நிலையம்
பெரம்பலூர் காவல் நிலையம்

ஜீப்பின் பின்புறத்தில் உள்ள இரு டயர்களையும் கழட்டிவிட்டு எதற்குமே பயன்படாத பழைய டயர்களை பொருத்துவிட்டுப் பொறுமையாக திருடிச் சென்றிருக்கிறார்கள்.

``ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் டயர்களை திருடிவிட்டார்கள், அவர்கள் யார் என்று கண்டுபிடித்துக்கொடுங்கள்" என்று உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கும் சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"தொடர்ந்து வாகனத்தின் டயர்களை மட்டுமே குறிவைத்து ஒரு கும்பல் தொடர்ச்சியாக பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் கைவரிசை காட்டி வருகிறது. இந்தக் கும்பலைப் பிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்" எனக் குற்றம் சாட்டுகின்றனர் அதிகாரிகள்.

டயர் திருட்டு
டயர் திருட்டு

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறத்தில் பல்வேறு துறைகளின் ஜீப்புகள் (அரசு வாகனத்தை) நிறுத்துவதற்கான கார் ஸ்டேண்டுகள் உள்ளன. இதில் பெரம்பலூர் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான ஜீப் ஒன்று கலெக்டர் அலுவலகத்தின் பின்புறத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், உணவுப் பாதுகாப்புத்துறை வாகனத்துக்கான ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த மோகன் என்பவர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

`காரில் நோட்டம்; நோட்ஸ்; தொடர் திருட்டு!' - காரைக்குடியை அதிரவைத்த கொள்ளையர்கள்

அதற்குப் பிறகு அந்தப் பணியிடத்துக்கு புது டிரைவர் இன்னமும் நியமிக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் இருந்த ஜீப்பை, தொடர்ந்து நோட்டமிட்டு வந்த மர்மநபர்கள், அந்த ஜீப்பின் பின்புறத்தில் உள்ள இரு டயர்களையும் கழட்டிவிட்டு எதற்குமே பயன்படாத பழைய டயர்களை பொருத்திவிட்டுப் பொறுமையாக திருடிச் சென்றிருக்கிறார்கள்.

மறுநாள் காலையில் அலுவலகத்துக்கு வந்த அதிகாரிகள் இதைப் பார்த்ததும் பதறிப்போய் மாவட்ட நியமன அலுவலர் செளமியா சுந்தரியிடம், `மேடம்.. ஜீப்பின் டயர்களைக் காணவில்லை' என்று தகவல் சொல்லியிருக்கிறார்கள்.

டயர் திருட்டு
டயர் திருட்டு

`கலெக்டர் அலுவலகத்திலேயே திருட்டா?' என அதிர்ச்சி அடைந்தவர், சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டிருக்கிறார். அதன்பிறகு வேறு வழியில்லாமல் பெரம்பலூர் போலீஸாரிடம் தகவல் சொல்லியிருக்கிறார். அவர்களும், `இதைப் புகாராக கொடுங்கள் மேடம், விசாரிக்கிறோம்' என்றிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து புகார் கொடுத்திருக்கிறார். `இச்சம்பவம் வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்ளுங்கள்' எனப் போலீஸாரிடம் கூறியுள்ளனர் அதிகாரிகள்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள், ``பெரம்பலூர் மாவட்டத்தை மையமாக வைத்து பல இடங்களில் கார் டயர் திருட்டுச் சம்பவம் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்புகூட மதனகோலபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் அவரது காரை வீட்டின் எதிரில் நிறுத்திவிட்டு இரவு தூங்கச் சென்றிருக்கிறார்.

பெரம்பலூர் காவல் நிலையம்
பெரம்பலூர் காவல் நிலையம்

காலையில் வந்து பார்த்தபோது காரின் நான்கு டயர்களுக்குப் பதிலாக, கல், பேட்டரி பாக்ஸ், செங்கல் ஆகியவற்றை முட்டுக்கொடுத்துவிட்டு சர்வசாதாரணமாகக் கழட்டிவிட்டுச் சென்றிருந்தார்கள். அதேபோல்தான் இங்கும் நடந்திருக்கிறது. இது ஆட்சியர் அலுவலகம். மக்கள் அதிகமாக கூடுவார்கள் என்பதால் யார் மீதும் சந்தேகம் எளிதில் வராமல் இருக்க வேண்டும் என்பதற்காகப் புதிய டயர்களை கழற்றிவிட்டு சந்தேகம் வராமல் இருக்க பழைய டயர்களைப் பொறுமையாக மாற்றியிருக்கிறாா்கள். இரண்டு நாள்களுக்கு முன்பே இந்தச் சம்பவம் நடந்துவிட்டது.

பெரம்பலூர்
பெரம்பலூர்

இதை வெளியில் சொன்னால் அசிங்கமாகிவிடும் என்பதால் மூடி மறைக்க முயற்சி செய்திருக்கிறார்கள் அதிகாரிகள். ஆனால், தகவல் வெளியே கசிந்துவிட்டது. இம்மாவட்டத்தில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால், குற்றவாளிகளைப் பிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகிறார்கள்" எனக் கொதிப்போடு பேசி முடித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு