வேளச்சேரியில் ஏரியை ஒட்டியிருக்கும் சாஸ்திரி நகர், காந்தி நகரில் சுமார் 1,500 குடும்பங்கள் வசித்துவருகிறார்கள். இந்த நிலையில், வேளச்சேரி ஏரியை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியிருப்பதாகக் கூறி, அந்தப் பகுதிகளில் வசிக்கும் 800 குடும்பங்களுக்கு `உடனடியாக வீடுகளை காலிசெய்ய வேண்டும்' என நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் உறைந்திருக்கும் அந்தப் பகுதி மக்களை நேரில் சந்தித்துப் பேசினோம். நம்மிடம் பேசிய தேவதாஸ் என்பவர், "நாங்கள் இந்தப் பகுதியில் 60 ஆண்டுகளாக வசித்துவருகிறோம். அனைவரும் சாதாரணக் கூலி வேலைகளைத்தான் செய்துவருகிறோம். குறிப்பாக கட்டட வேலை போன்றவற்றுக்குத்தான் சென்றுவருகிறோம். இங்கு வசதி படைத்தவர்கள் யாரும் இல்லை. எங்கள் குழந்தைகளின் படிப்பும் இந்தப் பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளிகளை நம்பிதான் இருக்கிறது.
இந்த நிலையில், 2009-ம் ஆண்டில் வேளச்சேரி ஏரியில் படகு விடப்போவதாகக் கூறி, வீடுகளை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் வழங்கினார்கள். பின்னர் 55 குடும்பங்கள் இணைந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். விசாரித்த நீதிமன்றம், எங்களுக்குப் பட்டா வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
ஏரியில் 210 ஏக்கரை அரசே எடுத்துக்கொண்டிருக்கிறது. அதேபோல் எங்களுக்கும் பட்டா வழங்க வேண்டும். இங்கிருந்து சென்றால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே, இதற்கு உரிய தீர்வு வழங்க வேண்டும்" என்றார் வேதனையாக.
இது குறித்து நம்மிடம் பேசிய முகமது ரபீக் என்பவர், ``சுமார் 60 ஆண்டுகளாக வேளச்சேரி ஏரியை ஒட்டியிருக்கும் சாஸ்திரி நகர், காந்தி நகரில் சுமார் 1,500 குடும்பங்கள் வசித்துவருகிறார்கள். இரண்டு தலைமுறைகளாக வசிக்கும் இவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, மின்சார வசதி போன்ற அனைத்தும் செய்து தரப்பட்டிருக்கிறது. இங்கிருக்கும் வேளச்சேரி ஏரியின் மொத்த பரப்பளவு 265 ஏக்கர்.
இதில் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளையும், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளையும் கட்டுவதற்காக 210 ஏக்கர் நிலத்தை அரசே எடுத்துக்கொண்டிருக்கிறது. மீதமிருக்கும் 55 ஏக்கர் இடத்தில்தான் ஏரியும், சாஸ்திரி நகர், காந்தி நகர் போன்ற பகுதிகள் அமைந்திருக்கின்றன. இதற்கிடையில் வழக்கு ஒன்றில் பசுமை தீர்ப்பாயம், `ஏரி புறம்போக்கில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்' எனக் கூறியிருந்தது.
இதனடிப்படையில் சாஸ்திரி நகர், காந்தி நகரில் வசிக்கும் குடும்பங்களுக்கு உடனடியாக வீடுகளை காலி செய்ய வேண்டும் எனக் கூறி நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிமன்றமே ஏரியில்தான் இருக்கிறது. சாதாரண மக்களை மட்டுமே அகற்ற வேண்டும் என நினைக்கிறார்கள். ஏற்கெனவே 2009-ல் இதேபோல் பிரச்னை ஏற்பட்டது. அப்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம்.
விசாரித்த நீதிமன்றம், `இந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்கலாம்' எனத் தெரிவித்தது. இப்படியிருக்கும் சூழலில் எப்படி இந்த பொதுமக்களை அப்புறப்படுத்த முடியும். ஏரியை பலப்படுத்த வேண்டும் என்றால் அதைச் சுற்றி தடுப்பு அமைக்கலாம். அதற்குத் தேவையான இடத்தை நாங்கள் கொடுத்து விடுகிறோம். மக்களை அப்புறப்படுத்திவிட்டுச் செய்ய வேண்டுமென்றால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கொதித்தார்.
இது குறித்து படப்பை நீர்வளத்துறை கூடுதல் பொறியாளர் மகேந்திரகுமாரிடம் விளக்கம் கேட்டோம். "வேளச்சேரி ஏரியை ஆக்கிரமித்து அதன் கரைமீது வீடுகளைக் கட்டியிருக்கும் 800 நபர்களுக்குத்தான், அதை அகற்றிக்கொள்ளும்படி நோட்டீஸ் வழங்கியிருக்கிறோம்.
விஜய்நகர் சாலை முதல் ஆதம்பாக்கம் காவல் நிலையம் வரை வேளச்சேரி ஏரியின் கரை இருக்கிறது. சம்பந்தப்பட்ட நோட்டீஸைப் பெற்ற மக்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிப்பார்கள். அதன் பிறகு மீண்டும் நாங்கள் ஆய்வுசெய்வோம். அந்த அறிக்கையை தாசில்தாரிடம் வழங்குவோம். அவர்கள் மீண்டும் ஆய்வுமேற்கொள்வார்கள்.

அப்போது சம்பந்தப்பட்ட மக்கள் வைத்திருக்கும் ஆவணங்கள், அதைச் சொந்தம் கொண்டாட முடியாத அளவுக்கு இருக்கும்பட்சத்தில், அது குறித்த அறிக்கையை எங்களுக்கு அனுப்புவார்கள். அதன்படி மீண்டும் நோட்டீஸ் வழங்குவோம். மேலும் 21 நாள்கள் அவகாசம் வழங்குவோம். அதன் பிறகு மாற்று இடம் கொடுப்பதற்கு அரசு முடிவுசெய்யும்.
எனவே, நிச்சயமாக மாற்று இடம் வழங்கப்படும். ஆக்கிரமிப்பை அகற்றும் இடங்களில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் மாற்று இடம் வழங்கப்பட்டுவருகிறது. ஏரியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 90-களுக்கு முன்பு அப்போதைய சட்டத்தை பயன்படுத்தி கட்டப்பட்டது.
2007-க்குப் பிறகு நீர்நிலைகளில் எந்தக் கட்டடமும் கட்டப்படவில்லை. நாங்கள் தொடர்ந்து வீடு கட்ட வேண்டாம் என்று தெரிவித்துவருகிறோம். ஆனால், யாரும் கேட்பதில்லை. இந்தப் பகுதியைச் சரிசெய்து படகுவிடுதல், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.