Published:Updated:

கோயில் நகைகள் உருக்கப்படுவது கொள்ளைச் செயலா? - ஹெச்.ராஜா சாடலும் உண்மை நிலவரமும்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அமைச்சர் சேகர் பாபு, ஹெச்.ராஜா
அமைச்சர் சேகர் பாபு, ஹெச்.ராஜா

`கோயில் நகைகள் உருக்கப்படுவது, இந்து சொத்துகளைக் கொள்ளையடிக்ககூடிய செயல்’ என்று ஹெச்.ராஜா குற்றம்சாட்டியிருக்கிறார். உண்மை நிலவரம் என்ன?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அந்தத் துறையின் அமைச்சர் சேகர் பாபு கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ``காணாமல்போன சிலைகளை மீட்கும் முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. கோயில் நிலங்களை மீட்பதில் அறநிலையத்துறை வேகம் காட்டிவருகிறது. மானியக் கோரிக்கையில் மட்டும் 112 அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறோம். அவற்றில் முக்கியமான ஐந்து அறிவிப்புகள் நடைமுறைக்கு வந்துள்ளன. முக்கியமாக, கோயில்களில் மொட்டைபோடக் கட்டணம் கிடையாது என்ற அறிவிப்பு மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கோயில்களிலுள்ள பயன்படுத்தாத நகைகளை முறையாக பயன்பாட்டுக்குக் கொண்டுவரவிருக்கிறோம்" என்றார்.

அமைச்சர் சேகர் பாபு
அமைச்சர் சேகர் பாபு

மேலும், `` இதற்காக, மதுரை மண்டலத்துக்கு நீதிபதி ஆர்.மாலா, திருச்சி மண்டலத்துக்கு நீதிபதி ரவிசந்திரபாபு, சென்னை மண்டலத்துக்கு நீதிபதி ராஜு ஆகியோர் தலைமையில் ஒரு குழு உருவாக்கப்படும். இந்தக் குழுவின் மூலம், கோயில்களில் பயன்படுத்தாமல் இருக்கும் நகைகளை மீட்டு அவை உருக்கப்படும். இந்த உருக்கும் பணி மத்திய அரசின் உருக்காலைகளில் உருக்கப்பட்டு, தங்கக்கட்டிகளாக மாற்றப்படும். இதை வைப்புநிதியில் வைத்து வருமானம் ஈட்டவிருக்கிறோம். அதில் வரும் வட்டித்தொகையைக் கோயில் திருப்பணிகளில் பயன்படுத்தவிருக்கிறோம். இது கோயில்களின் வருமானத்தை அதிகரிக்க உதவும். இந்த நகைகள் பயன்படுத்தாமல் இருக்கின்றன. இவற்றை முறையாகப் பயன்படுத்தவிருக்கிறோம்" என்று கூறினார். இந்த அறிவிப்புக்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மதுரையிலுள்ள பாஜக அலுவலகத்தில் தீனதயாள் உபத்யாயா பிறந்தநாள் விழாக் கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ``அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் 75 கட்டளைகளைக் கொடுத்திருக்கிறது. அவற்றைப் பற்றிக் கவலைப்படாமல், அறநிலையத்துறை அமைச்சர் உதயநிதியின் பின்னால் கூட்டங்களுக்குச் சென்றுகொண்டிருக்கிறார். சமீபத்தில் மதுரையில், இந்து சமய அறநிலையத்துறை என்பதில் இந்து சமயத்தை எடுத்துவிட்டு அறநிலையத்துறை என்று போஸ்டர் அடித்திருக்கிறார்கள் என்று எனக்குத் தகவல் வந்துள்ளது. இந்தத் துறை இந்து மதத்தை அழிப்பதற்காக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. எனக்கு வந்த தகவல் உண்மையென்றால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின்மீது அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் இந்த அமைச்சரை `செயல்' பாபு என்று அழைக்கிறார். இவர் செயல் பாபுவும் கிடையாது, சேகர் பாபுவும் கிடையாது. `சினேக் பாபு’ என்று சொல்கிறேன். மானியக் கோரிக்கைகளில் இவர் அறிவித்த அறிவிப்புகள் அனைத்துமே இவரின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டவை" என்றார்.

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஹெச்.ராஜா
பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஹெச்.ராஜா

மேலும், ``கோயில் நகைகள் எல்லாவற்றையும் உருக்கப்போகிறாராம் அமைச்சர். அந்த நகைகளில் இருக்கும் வைரம், வைடூரியம் போன்ற கற்களையெல்லாம் என்ன செய்யப்போகிறீர்கள்? அதையெல்லாம் கொள்ளை அடிப்பதற்கா? திராவிட இயக்கத்தவர்களால் இந்துக் கோயில் சொத்துகள் சூறையாடப்படுகின்றன. எந்தச் சட்டத்தின் கீழ் கோயில் நகைகளை உருக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்? இதற்கு அமைச்சருக்கு அதிகாரம் இருக்கிறதா? இந்தத் தங்க நகை விவகாரத்தில் நானே நீதிமன்றத்துக்குச் செல்வேன். எந்தக் கோயிலிலும் காணிக்கையாக வழங்கப்படும் தங்க நகை குறித்து பதிவேடுகளில் பதிவு செய்வது கிடையாது. உண்டியலில் காணிக்கையாகப் போடப்படும் தங்க நகைகளெல்லாம் பதிவு செய்யப்பட்டிருக்கின்றனவா? அவை குறித்து எத்தனை கோயில்களில் எழுதப்படுகிறது? கோயில் நகைகளில் எவ்வளவு கொள்ளை அடிப்பீர்கள்? சிலைத் திருட்டுக்கு அறநிலையத்துறைதான் காரணம். ஈ.வெ.ரா உருவாக்கிவிட்ட முட்டாள்கள் கேட்கிறார்கள்... பூசாரிக்குத் தெரியாமல் சிலை காணாமல் போகுமா என்று? பூசாரிகளின் கட்டுப்பாட்டிலுள்ள மூலவர் சிலை எங்கும் திருடப்படவில்லை. அறநிலையத்துறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிலைகள்தான் திருடு போயிருக்கின்றன" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், ``சுதந்திர தினத்தன்று பணிநியமன ஆணையை வழங்கியிருக்கிறார். அதற்கு அமைச்சருக்கு அதிகாரம் இருக்கிறதா? முதல்வருக்கு அதிகாரம் இருக்கிறதா? அது சட்டவிரோதம். கோயிலில் பூசாரிகளை நியமனம் செய்வதற்கு கோயில் நிர்வாகிகளுக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது. சட்டத்தை மீறியிருக்கிறார்கள் திமுக-வினர். சட்டம் தெரியாதவர்கள் அதிகாரத்தில் இருக்கிறார்கள். கோயில்களை அழிப்பதற்காக, கோயில்களைக் கையகப்படுத்துகிற இந்து விரோத அரசாங்கம் இது. திருவண்ணாமலையில் இன்னும் பல கோயில்களையே மீட்டெடுக்கவில்லை. இதில் நிலங்களை மீட்டெடுத்துவிட்டேன் என்று யாரை ஏமாற்றுகிறீர்கள்? இந்து மக்களுக்கு நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். நமது பகுதியில் இருக்கும் கோயில்களுக்கு நாமே ஒரு குழுவை அமைப்போம். அந்தக் கோயிலின் சொத்துகளைப் பட்டியலிடுவோம். கோயில் சொத்துகளை யாரெல்லாம் வைத்திருக்கிறார்களோ, அவர்களின் வீடுகளுக்குச் சென்று குடும்பத்தோடு `நாசமாப் போக...’ என்று மண்ணைவாரித் தூற்றுவோம். வேறு வழி தெரியவில்லை எங்களுக்கு. ஏனென்றால் அமைச்சரே பொய் சொல்கிறார்" என்று கூறினார்.

கோயில் ஆய்வு பணியில் அமைச்சர் சேகர் பாபு
கோயில் ஆய்வு பணியில் அமைச்சர் சேகர் பாபு

தொடர்ந்து பேசியவர், `` நான் சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசனை செய்து வழக்கு தொடருவேன். போராட்டம் நடக்கும். இனி எனது முழு நேரமும் இந்துக் கோயில்களை மீட்டெடுப்பதில் செலவு செய்வது என்று முடிவு செய்திருக்கிறேன். இதுவரை அரசு எடுத்திருக்கும் கோயில்களையே இவர்களால் ஒழுங்காகப் பராமரிக்க முடியவில்லை. இந்நிலையில் புதிய கோயில்களில் அரசு கைவைக்கக் கூடாது. இந்துக் கோயில்களை தொடுவதைப்போல சர்ச்சுகளையும் மசூதிகளையும் தொடுவார்களா? இந்துக்கள் என்றால் என்ன இளக்காரமா? அவர்களின் கோயிலை எடுத்து அழிப்பீர்களா? முஸ்லிம் படையெடுப்பில் அழிக்கப்பட்ட கோயில்களைக் காட்டிலும் இந்த நாத்திக இந்து விரோத திராவிட ஆட்சியில் அழிக்கப்பட்டுள்ள கோயில்களின் எண்ணிக்கை அதிகம். அவர்களைவிட மோசமானவர்கள் இவர்கள். வெள்ளிக்கிழமை மசூதிகளையும், ஞாயிறுகளில் சர்ச்சுகளுக்கும் மூடுவதற்கு துணிச்சல் துணிச்சல், வக்கு இருக்கிறதா? வெள்ளி, சனி, ஞாயிறுகளில் கோயில்களை மூடிவிட்டு அந்த நாள்களில் இந்துக்களை மசூதிக்கும், சர்ச்சுகளுக்கும் விரட்டுவதற்கான தீய செயல் இது" என்று காட்டமாகப் பேசினார்.

``இறைவன் சொத்து இறைவனுக்கே; கோயில் நிலத்துக்குப் பட்டா வழங்க முடியாது!''- அமைச்சர் சேகர் பாபு

பல்வேறு சர்சைகள் எழுந்த நிலையில், கோயில் நகைகளை உருக்குவது தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு விளக்கமளித்திருந்தார். ``கோயில்களில் பக்தர்கள் நன்கொடையாகக் கொடுத்த பல்வேறு ஆபரணங்கள் கடந்த ஒன்பது ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் உள்ளன. அந்த நகைகளில் தெய்வங்களுக்கு நேரடியாகப் பயன்படுத்தப்படும் நகைகளைப் பயன்படுத்தவும், பயன்படுத்த முடியாத நகைகளை உருக்கித் தங்கக்கட்டிகளாக மாற்றிப் பயன்படுத்தவிருக்கிறோம். அந்த வாய்ப்பு தொகை கோயிலின் வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும். கோயில்களில் பயன்படாமல் இருக்கும் எதுவும் தெய்வத்துக்குப் பயன்படும் என்றால் எந்த விமர்சனத்தையும் சந்திக்கத் தயார். நகைகளை உருக்கும் நடவடிக்கைகளில் எந்தவித லாப நோக்கமும் இல்லாமல் நேர்மையாகவும், உண்மையாகவும், தூய்மையாகவும் அரசு செயல்படும்" என்று கூறினார்.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசியபோது, ``அறநிலையத்துறை பணி என்பது கோயில்களினுடைய நிர்வாகத்தை கவனிப்பது மட்டும்தான். அந்த நகைகளை கோயில்களுக்குக் காணிக்கையாகக் கொடுத்தது பொதுமக்கள். கோயில் நகைகளை உருக்கி அவற்றை முதலீடு செய்து, அதன் மூலம் பணமாக்கிச் செலவிடுவது என்பது தவறானது. இது அறநிலையத்துறையின் அறமற்ற மற்றும் முறையற்ற செயல். பக்தர் ஒருவர் ஒரு கோயிலுக்குக் காணிக்கை செலுத்துகிறார் என்றால், அந்தக் காணிக்கை அந்தக் கோயிலுக்கு மட்டும்தான். நிதி மேலாண்மை, அந்தக் கோயில்களின் வரவு, செலவு என்பவை அந்தந்தக் கோயில்களுக்கு உட்பட்டவை. கோயில் நகைகளை என்ன செய்வது என்று அந்தக் கோயில்தான் முடிவு செய்ய வேண்டும். இது அறநிலையத்துறையின் பணியே கிடையாது. அறநிலையத்துறையின் வேலையைத் தாண்டி இவர்கள் இப்படிச் செய்வது மிகவும் தவறு" என்று கூறினார்.

இது தொடர்பாக ஆன்மிகத் திருப்பணிகள் சார்ந்து இயங்கும் ஒருவரிடம் பேசினோம். ``கோயில் நகைகளை உருக்கும் விவகாரத்தில் அரசு ஒரு தெளிவான விளக்கத்தை மக்களுக்கு வழங்க வேண்டும். அப்போதுதான் என்ன நடக்கப்போகிறது என்பது பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் தெளிவாகும். அதுமட்டுமின்றி, இந்த நகைகளைக் கோயில்களிலிருந்து உருக்க அனுப்பும்போது, வழக்கமாகக் கோயில்களில் யாருக்கும் தெரியாமல் நடைபெறும் ஆய்வுகள்போல இல்லாமல், உயரதிகாரிகள், பொதுமக்கள், பக்தர்கள் முன்னிலையில் நடத்த வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு ஒரு நம்பிக்கை பிறக்கும். கோயிலிலுள்ள தொன்மையான நகைகளை அரசு பாதுகாக்கும் என்ற உறுதியையும் மக்களுக்கு வழங்க வேண்டும்" என்றார்.

தஞ்சை பெரிய கோவில்
தஞ்சை பெரிய கோவில்

மேலும், `` கோயில் நகைகளை உருக்கி அந்தந்தக் கோயில்களுக்கே தங்க, வெள்ளி ஆபரணங்களாக மாற்றி அதைச் சாமிக்குப் பயன்படுத்த முடியும் என்றால் அதைச் செய்யலாம். தவிர, அந்த நகைகளை வைப்புநிதியாக வைத்து வரும் வருமானத்தில் மேற்கொள்ளப்படும் திருப்பணிகளில் அரசின் பெயர் இடம்பெறாமல், அந்தக் கோயில்களின் பெயர் இடம்பெற வேண்டும். உதாரணமாக, திருச்செந்தூர் முருகன் கோயில் நகைகளின் மூலம் வரும் வருமானத்தில் அந்தப் பகுதியில் ஒரு கட்டடமோ, ஒரு மேம்பட்டு பணியோ மேற்கொள்ளப்பட்டால் அதில் அரசின் பெயரோ அல்லது கட்சியின் பெயரோ வராது. திருச்செந்தூர் முருகனின் பெயர்தான் இடம்பெற வேண்டும். இந்த விவகாரத்தில் அதிகாரிகள் நகைகளைத் திருட அதிக வாய்ப்பிருக்கிறாது. எனவே, அரசு மிக வெளிப்படையாக நடந்துகொள்ள வேண்டும். இதில் ஏதேனும் தவறு நடந்தால் அது அரசைத்தான் மிகவும் பாதிக்கும் என்பதை அவர்கள் உணர வேண்டும்" என்று கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு