Published:Updated:

`அரசுப் பள்ளி வறுமை அல்ல, பெருமை’ - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சும் எதிர்பார்ப்பும்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அன்பில் மகேஷ் பொய்யாமொழி

‘அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளமாக அதை மாற்றுவோம்’ என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார்.

கொரோனா பெருந்தொற்றால் பள்ளிகள் மூடிக்கிடக்கும் சூழலில்தான், தி.மு.க அரசு பொறுப்பேற்றது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதவியேற்றார். பள்ளிகள் மூடப்பட்டிருந்தாலும், தனது துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டங்கள், கள ஆய்வுகள் என அமைச்சர் இயங்கிவருகிறார். இத்தகைய சூழலில், தற்போது நடைபெற்றுவரும் தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில், பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய பா.ம.க உறுப்பினர் கோ.க.மணி, ``புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிகளை மேம்படுத்தும் வகையில் கல்வியில் சீர்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும். குறிப்பாக, கூடுதல் கல்வி நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். அதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்தார்.

அரசுப் பள்ளி
அரசுப் பள்ளி

அப்போது, ``அரசுப் பள்ளிகளை நவீனப்படுத்தவும், அவற்றின் தரத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளமல்ல. அவற்றைப் பெருமையின் அடையாளமாக மாற்றுவோம்” என்றார். அமைச்சரின் இந்தக் கருத்தை பல்வேறு தரப்பினரும் நெகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள். அதேநேரத்தில், கல்வி வணிகமயமாக மாறிவிட்ட இன்றைய சூழலில், வசூல் வேட்டையை மட்டுமே முக்கிய நோக்கமாகக்கொண்ட தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் இந்தக் கருத்து எந்த அளவுக்கு செயல்வடிவம் பெறும் என்ற கேள்வி எழுகிறது.

இந்த நேரத்தில், கடந்த பத்தாண்டுக்கால அ.தி.மு.க ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை எப்படி இருந்தது என்பதை நினைவுகூர வேண்டியிருக்கிறது. மாஃபா பாண்டியராஜன், வைகைச்செல்வன், செங்கோட்டையன் எனப் பல அமைச்சர்களை பள்ளிக்கல்வித்துறை கடந்த பத்தாண்டுகளில் கண்டது. கடைசியாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர், செங்கோட்டையன். இவரது காலத்தில்தான், பள்ளிக் கல்வித்துறையின் அரசுச் செயலாளராக உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டார். அந்த இடத்தில் சில காலமே இருந்த உதயச்சந்திரன், பல நல்ல மாற்றங்களை பள்ளிக் கல்வியில் கொண்டுவந்தார்.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

அதன் காரணமாக, `மற்ற துறைகளைவிட பள்ளிக்கல்வித்துறை சிறப்பாக செயல்படுகிறது’ என்ற நல்ல பெயர் செங்கோட்டையனுக்குக் கிடைத்தது. ஏதோ ஒரு காரணத்தால் உதயச்சந்திரன் திடீரென அங்கிருந்து வேறு இடத்துக்கு மாற்றப்பட்டார். அதன் பிறகு, தன் இஷ்டத்துக்கு தினமும் பல அறிவிப்புகளை வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார் செங்கோட்டையன். அவற்றில் ஏதாவது ஒன்று நடைமுறைக்கு வந்ததா என்று கேட்டால், அதற்கான பதில் செங்கோட்டையனுக்கே தெரியுமா என்பது சந்தேகம்தான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதோடு, கொரோனா பெருந்தொற்றுப் பரவலால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடிக்கிடக்கின்றன. இதற்கிடையில், கொரோனா மூன்றாவது அலை வரப்போவதாகச் செய்திகள் அச்சமூட்டிக்கொண்டிருக்கின்றன. அடுத்து எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது தெரியாத நிலை நீடிக்கிறது. அரசுப் பள்ளி மாணவர்கள் தற்போது எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

இது ஒருபுறமிருக்க, அமைச்சர் கூறுவதைப்போல பெருமைமிகு அடையாளமாக அரசுப் பள்ளிகள் மாற வேண்டுமென்றால், தொலைநோக்குப் பார்வையுடன் தமிழக அரசு செயல்படத் தொடங்க வேண்டும். அமைச்சர் கூறுவதைப்போல அரசுப் பள்ளிகளின் தரம் உயர வேண்டுமென்றால் அரசு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கல்வியாளர்களிடம் பேசினோம்.

அரசுப் பள்ளி
அரசுப் பள்ளி

“பள்ளிக்கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டுமென்றால், ஒரேயோர் அடிப்படை விஷயத்தைச் செய்தால் போதும்” என்கிறார் பள்ளிக் கல்விக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

“கல்வியாளர்களைத் தலைவராகக்கொண்ட கல்விக்குழுக்களும் உலக அனுபவமும் முக்கியமான ஒரு விஷயத்தைச் சொல்கின்றன. அரசுப் பள்ளிகளை அருகமைப் பள்ளிகளாக மாற்ற வேண்டும் என்பதுதான் அது. அருகமைப் பள்ளி என்கிற விஷயம் புதிதான ஒன்று அல்ல. 19-வது நூற்றாண்டிலிருந்து தொடர்ந்து இது பற்றிப் பேசப்பட்டுவருகிறது. கோத்தாரி கமிஷன் பரிந்துரையில் அருகமைப்பள்ளி இடம்பெற்றிருக்கிறது.

பிரின்ஸ் கஜேந்திரபாபு
பிரின்ஸ் கஜேந்திரபாபு

அமெரிக்கா, ஜெர்மனி, பின்லாந்து, கியூபா என வளர்ந்த நாடுகளின் வளர்ச்சிக்கு கல்வியறிவுதான் அடிப்படையான காரணமாக இருந்துள்ளன. அந்தக் கல்வியறிவுக்கு அடிப்படையான காரணம், அருகமைப் பள்ளிகள்தான். வளர்ந்த பிறகு, ஜெர்மனியில் உயர் கல்வியில் ஜெர்மன் மொழியில் படிப்பவர்களுக்கு கட்டணம் இல்லை என்று கொண்டுவந்திருக்கிறார்கள். ஆனால், அந்தச் சிந்தனைக்குள் நம் தேசம் இன்னும் வரவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்துகளில் கட்டணமில்லா கட்டாயக் கல்வியைக் கொடுப்பதென்று 1920 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி சட்டம் மற்றும் 1924 விதிகள் ஆகியவற்றில் சொல்லப்பட்டிருக்கிறது. 1930-களில் சென்னை மாநகராட்சியில் சத்துணவு கொடுக்கப்பட்டிருக்கிறது. 1920-களிலும் 1930-களிலும் செய்ததைத்தான் இப்போதும் செய்துகொண்டு இருக்கப்போகிறீர்களா... அதிலிருந்து முன்னேறவே போவதில்லையா? நூற்றாண்டு நீதிக் கட்சியின் பாரம்பர்யம் என்று சொன்னால், சமச்சீர் கல்வி என்று கலைஞர் கருணாநிதி சொன்னதை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோக வேண்டும்.

சமச்சீர் என்றால்... ‘சமம்’, ‘சீர்’ ஆகிய இரண்டும் இருக்க வேண்டும். சமமும் சீரும் தற்போதைய சமச்சீர் கல்வியில் இருக்கிறதா?சமமான கற்றல் வாய்ப்பைக் கொடுக்கக்கூடிய சீரான பள்ளிக்கல்வி முறை என்பதுதானே சமச்சீர் கல்வி. இதைப் பற்றிய விவாதம் நடத்தப்பட வேண்டும். அருகமைப் பள்ளிகளை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்” என்றார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

அரசுப் பள்ளி
அரசுப் பள்ளி

அருகமைப் பள்ளிகள் என்றால்... ஆரம்பப் பள்ளிகள் 1 கி.மீ-க்கு உள்ளேயும், நடுநிலைப் பள்ளிகள் 3 கி.மீ-க்கு உள்ளேயும், மேல்நிலைப் பள்ளிகள் 5 கி.மீ-க்கு உள்ளேயும் இருக்க வேண்டும் என்று கோத்தாரி கமிஷன் பரிந்துரையில் வரையறுக்கப்பட்டுள்ளது.

அருகமைப் பள்ளிகளை உருவாக்குவதன் மூலமாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் பல்வேறு மொழி, இன, மத, சாதிப் பின்னணியைக்கொண்டவர்களை ஒரே வகுப்பறையில் கல்வி பயில வைக்க முடியும். அப்போது, வகுப்பறை என்பது அந்தப் பகுதியின் வேறுபட்ட பின்னணியைச் சேர்ந்தவர்கள் ஒருங்கிணையும் இடமாக இருக்கும். இதன் மூலமாக மொழி, மத, சாதிரீதியான பிரிவினைகளுக்கு இடையேயான இணக்கத்தை மாணவர்களிடம் ஏற்படுத்த முடியும். வகுப்பறையில் ஏற்படும் இந்த இணக்கத்தை சமூகத்துக்கு மிக எளிதாகக் கடத்த முடியும். ஒரு மேம்பட்ட சமூக இணக்கத்தையும் சகிப்புத்தன்மையும் நாம் அருகமைப் பள்ளிகளை உருவாக்குவதன் வழியாகத் திட்டமிடலாம் என்று கோத்தாரி கூறியிருக்கிறார்.

ரூ.100 லட்சம் கோடியில் `கதி சக்தி’ திட்டம்: `வெற்று அறிவிப்பு’ - எதிர்த்தரப்பு விமர்சனம் சரியா?

இது குறித்து கல்வியாளர் ரத்தினசபாபதியிடம் பேசினோம். “தமிழகத்தின் அரசுப் பள்ளிகளில் பெரும்பாலும் கட்டட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது ஒரு நல்ல அம்சம். அதேநேரத்தில் கழிப்பறை வசதிகள், இருக்கை வசதிகள், நூலக வசதி, நூலகர் நியமனம் போன்ற உள்ளமைப்பு வசதிகள் போதுமான அளவுக்கு இல்லை. இத்தகைய வசதிகளைத் தேவையான அளவுக்கு ஏற்படுத்திவிட்டால், தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகள் உயர்ந்துவிடும். அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இரவுக் காவலர், பகல் காவலரை நியமனம் செய்து பள்ளி வளாகங்களில் சமூகவிரோதச் செயல்கள் நிகழாதவாறு பாதுகாக்க வேண்டியது அவசியம்.

விளையாட்டுத் திடல் இல்லாத அரசுப் பள்ளிகள் உள்ளன. அங்கெல்லாம், அருகிலுள்ள இடங்களை அரசு கையகப்படுத்தி விளையாட்டுத்திடல் ஏற்படுத்த வேண்டும். அரசுப் பள்ளிகளுக்கு அருகில் குப்பை இல்லாமல் சுத்தமாகப் பராமரிக்கப்பட வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

ரத்தினசபாபதி
ரத்தினசபாபதி

ஆசிரியர் நியமனங்களில் இருக்கும் குறைபாடுகளால், சில பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாத நிலை இருக்கிறது. அனைத்துப் பாடங்களுக்கும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். விளையாட்டு, இசை, ஓவியம், நடனம் உள்ளிட்ட இணைவுப் பாடங்களுக்கு தமிழக அரசுப் பள்ளிகளில் முக்கியத்துவம் குறைந்துவிட்டது. இணைவுப் பாடங்கள் என்பவை மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து, அவற்றுக்கான ஆசிரியர்களை நியமித்து, அந்தப் பாடங்கள் முறையாக நடத்தப்படுவதை அரசு உறுதிசெய்ய வேண்டும்.

இதைச் செய்தால், அரசுப் பள்ளி மீது பெற்றோர்களுக்கு ஓர் ஈர்ப்பு ஏற்படும். இதையெல்லாம் செய்தால், அரசுப் பள்ளிகள் பெருமைக்குரிய பள்ளிகளாக மாறும். `பெருமையின் அடையாளமாக அரசுப் பள்ளிகளை மாற்றுவோம்’ என்று சட்டமன்றத்தில் அமைச்சர் பேசியிருப்பது அரசுப் பள்ளிகள் குறித்து அக்கறை கொண்டவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பள்ளிக்கல்வி அமைச்சரும் தமிழக முதல்வரும் அதற்கு ஆவன செய்வார்கள் என்று நம்புகிறேன்” என்றார் ரத்தினசபாபதி.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பேச்சு, விரைவில் செயல்வடிவம் பெறட்டும்.

விகடன் தயாரிப்பில் வெளிவரவிருக்கும் `ஆதலினால் காதல் செய்வீர்’ தொடரின் Promo...

அடுத்த கட்டுரைக்கு