Published:Updated:

`மாணவர்களுக்கு எதிராக அரசு போர் நடத்துகிறது!’ - ஜெ.என்.யு தாக்குதலால் கொதித்த கன்ஹையா குமார்

கன்ஹையா குமார்
கன்ஹையா குமார் ( Twitter )

``முதலில் அவர்கள் கல்விக் கட்டணத்தை அதிகரிக்கிறார்கள். இதை எதிர்த்து மாணவர்கள் போராடினால், காவல்துறையினரை அனுப்பி அடித்துத் துன்புறுத்துகின்றனர்” என்று பதிவிட்டுள்ளார் கன்ஹையா குமார்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இடதுசாரி மற்றும் வலதுசாரி அமைப்பு மாணவர்களுக்கு இடையேயான மோதல்களே இந்தத் தாக்குதலுக்குக் காரணமாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள், ஜெ.என்.யு-வின் முன்னாள் மாணவர்கள் உட்பட பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக ஜெ.என்.யு-வின் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் கன்ஹையா குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், ``எவ்வளவு வெட்கக்கேடான அரசாங்கம் இது. முதலில் அவர்கள் கல்விக் கட்டணத்தை அதிகரிக்கிறார்கள். இதை எதிர்த்து மாணவர்கள் போராடினால், காவல்துறையினரை அனுப்பி அடித்துத் துன்புறுத்துகின்றனர். மாணவர்கள் அடங்கவில்லை என்றால், குண்டர்களை அனுப்பி தாக்குதல்கள் நடத்துகின்றனர். அவர்கள், அதிகாரத்துக்கு வந்ததிலிருந்தே நாடு முழுவதும் மாணவர்களுக்கு எதிராகப் போரை நடத்தி வருகின்றனர்” என்று பதிவிட்டுள்ளார்.

`முகமூடி, ஹாக்கி மட்டைகள்; நொறுக்கப்பட்ட கதவுகள்!'- கண்ணீருடன் விவரித்த ஜே.என்.யூ மாணவர்கள்

மேலும், ``நான் மீண்டும் சொல்கிறேன். நீங்கள் அவர்களை அடக்க முயற்சி செய்யலாம். இந்தியாவின் மாணவர்கள் மீண்டும் எழுந்து வருவார்கள். அரசியலமைப்புக்கும் ஏழைகளுக்கும் எதிரான உங்களின் சதிகளை முறியடிக்க மாணவர்கள் ஒன்றிணைந்து செயல்படுவார்கள்” என்றும் கூறியுள்ளார்.

ஜெ.என்.யு மாணவ அமைப்பின் துணைத்தலைவர் சாகேத் மூன் பேசும்போது, ``காவல்துறையினர் பிற்பகல் முதல் பல்கலைக்கழக வளாகத்தில்தான் இருந்தனர். ஆனால், அவர்கள் எதுவுமே செய்யவில்லை” என்று கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பாக ஏ.பி.வி.பி அமைப்பினர் தங்களது ட்விட்டர் பக்கத்தில், ``11 மாணவர்களால் ஏ.பி.வி.பி அமைப்பின் உறுப்பினர்கள் விடுதியில் தாக்கப்பட்டுள்ளனர். 25-க்கும் அதிகமான மாணவர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்கள் குறித்த தகவல்கள் எதுவும் தெரியவில்லை. ஏ.பி.வி.பி மாணவர்கள் அதிகமாக விடுதிகளில் தாக்கப்படுகின்றனர். இடதுசாரி குண்டர்களால் விடுதி அழிக்கப்படுகிறது” என்று பதிவிட்டுள்ளனர்.

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில், ``முகமூடி அணிந்த மர்ம நபர்கள் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதும் அங்கிருந்த சொத்துகளை சேதப்படுத்தியதும் அமைச்சரகத்தின் கவனத்துக்கு வந்துள்ளது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது மற்றும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற வன்முறைகளையும் அராஜகங்களையும் பொறுத்துக்கொள்ள முடியாது” என்று பதிவிட்டுள்ளனர்.

ஜெ.என்.யு-வில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இதைப் பகிர்ந்து தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

`மாணவர்கள், பேராசிரியர்கள் மீது தாக்குதல்; விடுதி சூறையாடல்!' -கலவர பூமியான டெல்லி ஜே.என்.யூ
அடுத்த கட்டுரைக்கு