Published:Updated:

`இங்கு மதுக்கடைகளைத் திறக்கவில்லையென்றால்..!' - புதுவை முதல்வருக்கு அமைச்சரின் அலர்ட்

புதுச்சேரி
புதுச்சேரி

``புதுச்சேரியில் மதுக்கடைகளைத் திறக்கவில்லை என்றால் இங்குள்ளவர்கள் மது குடிப்பதற்காக அண்டை மாநிலங்களுக்குச் செல்லும் வாய்ப்புகள் உருவாகும்” என்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்திருக்கிறார்.

புதுச்சேரியில் கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையாக மே மாதம் 15-ம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இருந்தாலும் கொரோனா தொற்றில் புதுச்சேரி ஆரஞ்சு மண்டலமாக இருப்பதால் நேற்றுமுதல் ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை ஏற்படுத்தி உத்தரவிட்டிருந்தார் முதல்வர் நாராயணசாமி.

அதன்படி அனைத்துக் கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை எந்தவித முன் அனுமதியும் இன்றி திறந்துகொள்ளலாம் என்றும் ஆனால் தனிமனித இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டுமென்றும் கூறியிருந்தார். இந்த உத்தரவு நேற்றுமுதல் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

மதுபானம்
மதுபானம்

இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், ``தற்போது கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்றுவரும் 3 பேரில் ஒருவர் மாஹே பிராந்தியத்தையும், 2 பேர் புதுச்சேரியையும் சேர்ந்தவர்கள். புதுச்சேரியில் இதுவரை 3,281 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 3,220 பேருக்கு தொற்று இல்லை என்று முடிவுகள் வந்திருக்கிறது. இன்னும் 49 பேரின் முடிவுகள் வர வேண்டியிருக்கிறது.

அதேபோல கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்குச் சென்று திரும்பியவர்கள், அவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் என மொத்தம் 157 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கும் தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவுகள் தெரிவித்திருக்கிறது.

`மது கிடைக்காமல் போனதற்குக் கொரோனாதான் காரணம்!' - விபரீத முடிவெடுத்த புதுக்கோட்டை லாரி டிரைவர்

நேற்றுமுதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதால் பிரசவம் மற்றும் சாதாரண பரிசோதனைகளுக்கு வருபவர்களைக்கூட அனுமதிக்க வேண்டாம் என்று உத்தரவிட்டிருக்கிறேன். சாதாரண நோயாளிகள் ஆம்புலன்ஸில் வந்தாலும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மிகவும் அவசர சிகிச்சை தேவைப்படுபவர்கள் மட்டும் ஆம்புலன்ஸில் வந்தால் அனுமதிக்கப்படுவார்கள். ஏனாம் பிராந்தியத்தை ஒட்டியிருக்கும் ஆந்திர மாநிலத்தில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டிருக்கிறது.

அதுபோல மே 7-ம் தேதி முதல் தமிழகத்திலும் மதுபானக் கடைகள் திறக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில், இங்கு மதுக்கடைகளை திறக்கவில்லை என்றால் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் மதுகுடிக்க அண்டை மாநிலங்களுக்குச் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். எனவே, புதுச்சேரியிலும் மதுக்கடைகளைத் திறக்க வேண்டும் என்று முதல்வரிடம் கேட்க இருக்கிறேன்.

புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்
புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

அதேபோல வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் புதுச்சேரிக்கு மது அருந்த வருவதைத் தவிர்க்கும்விதமாக, மாநில எல்லைப் பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகளை மே 17-ம் தேதி வரை மூடியே வைத்திருக்கலாம். ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மதுபான பாட்டில்களின் மீதான வரியை 25% உயர்த்தியிருக்கின்றனர்.

அதேபோல புதுச்சேரியிலும் 2 அல்லது 3 மாதங்களுக்கு தற்காலிகமாக மதுபான பாட்டில்கள் மீதான வரியை உயர்த்தலாம். மதுபானங்கள் மீது தற்காலிகமாகக் கூடுதல் வரி விதிப்பதில் தவறில்லை. அரசுக்கு வருவாய் வந்தால்தான் அரசு ஊழியர்களுக்கு சம்பளமும், மக்களுக்கான நலத்திட்டங்களையும் செய்ய முடியும். மேலும், இதன்மூலம் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் புதுச்சேரிக்குள் நுழைவது தவிர்க்கப்படுவதுடன், இந்த இக்கட்டான நேரத்தில் புதுச்சேரி அரசுக்குத் தேவையான நிதி கிடைக்கும் என்பது என் தனிப்பட்ட விருப்பம்” என்று கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு