
கேரள சட்டசபையில் உரையாற்றிய ஆளுநர், மத்திய அரசை விமர்சிக்கும் கருத்துகள் மட்டுமல்லாமல், தன்னையே விமர்சிக்கும் வாசகங்களையும் வாசித்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.
கேரளாவில் எலியும் பூனையுமாக இருந்த ஆளுநர் - முதல்வர் உறவில் அண்மைக்காலமாக திடீர் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. சட்டென மாறிய இந்த வானிலை மாற்றத்தின் பின்னணியில் ‘பா.ஜ.க-வின் அரசியல் வியூகம் இருப்பதாக’ச் சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
‘‘அறிவு இல்லாதவர் கேரளத்தை ஆட்சி செய்கிறார்’’, ‘‘கேரள கவர்னர், முட்டாள்தனமாகப் பேசுகிறார்’’ என்றெல்லாம் மாறி மாறி வசைபாடி வந்த கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கானும் முதல்வர் பினராயி விஜயனும் இப்போது பூங்கொத்து கொடுத்து அன்பைப் பறிமாறிக்கொள்கிறார்கள்.

அண்மையில், கேரள சட்டசபையில் உரையாற்றிய ஆளுநர், மத்திய அரசை விமர்சிக்கும் கருத்துகள் மட்டுமல்லாமல், தன்னையே விமர்சிக்கும் வாசகங்களையும் வாசித்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார். கடந்த ஆண்டு இறுதிவரை மாதம் தவறாமல் சி.பி.எம் தலைமையிலான இடது முன்னணி அரசுக்குக் குடைச்சல் கொடுத்த ஆளுநர், 2023-ம் ஆண்டிலிருந்து சாந்தமான முகத்துடன் முதல்வர் பினராயி விஜயனை அணுகிவருகிறார். மேலும், ஆண்டு தொடக்கத்தில் காஷ்மீர் சுற்றுலா முடித்து வந்த கையோடு, காஷ்மீர் சாக்லேட்டும் குங்குமப்பூவும் கொடுத்தனுப்பி முதல்வர் பினராயி விஜயனுக்கு ஐஸ் வைத்தார் ஆளுநர். அரசியல் அமைப்பு குறித்துத் தவறாக விமர்சனம் செய்ததால், பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்த மீன்வளத்துறை அமைச்சர் சஜி செரியனுக்கு, மீண்டும் அமைச்சர் பதவி வழங்க முதல்வர் பினராயி விஜயன் முடிவு செய்தபோதும்கூட, எந்தவித எதிர்வினையும் ஆற்றாமல் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். பதவி ஏற்பு விழா மேடையிலேயே, ‘நான் அனுப்பிய காஷ்மீர் ஸ்வீட் எப்படி இருந்தது?’ என பினராயி விஜயனிடம் கேட்டு இணக்கத்தை அதிகரித்துக்கொண்டார்.
‘‘கேரள, தமிழ்நாடு கவர்னர்களின் இந்த `திடீர்’ மனமாற்றத்துக்கு 2024 நாடாளுமன்றத் தேர்தல்தான் காரணம். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், கவர்னர்கள் எதிர்க்கட்சி போன்று செயல்படுவதையும், தனி அரசாங்கம் நடத்துவதையும் அந்தந்த மாநில மக்கள் ரசிக்கவில்லை என்பதைப் புரிந்துகொண்டது மத்திய அரசு. இந்தப் போக்கு தொடர்ந்தால், அது மத்திய அரசு மீதான அதிருப்தியாக மாறி 2024 தேர்தலில், பா.ஜ.க-வுக்குக் கடும் பின்விளைவை ஏற்படுத்தும் என ஸ்ட்ராங்கான ரிப்போர்ட்டுகள் டெல்லிக்குச் சென்றிருக்கின்றன. டெல்லி அடக்கி வாசிக்கச் சொன்னதால்தான், சண்டைக்கோழி ஆளுநர்கள் கொஞ்சும் புறாக்களாகியிருக்கிறார்கள்” என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
முட்டிவிட்டு, வலித்ததும் குனிவதே இவர்களுக்கு வழக்கமாகப்போய்விட்டது!