Published:Updated:

`ஆளுநர் அழைப்பு!' - மகாராஷ்டிராவில் புதிய சிக்கலில் பா.ஜ.க

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்குமாறு பா.ஜ.க-வுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்திருக்கிறார்.

தேவேந்திர பட்னாவிஸ்
தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 15 நாள்கள் ஆகிய நிலையில், பா.ஜ.க - சிவசேனா இடையிலான மோதல்களால் இதுவரை யாரும் ஆட்சியமைக்க முடியவில்லை. மொத்தமுள்ள 288 இடங்களில் பா.ஜ.க 105 இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா 56 இடங்களிலும் வென்றிருக்கின்றன. சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும் வெற்றிபெற்றிருக்கின்றன.

தேவேந்திர பட்னாவிஸ்
தேவேந்திர பட்னாவிஸ்
ANI

முதலமைச்சர் பதவி உட்பட, அமைச்சர் பதவிகளைச் சரிசமமாக பிரித்துக் கொடுக்க வேண்டும் என சிவசேனா தொடர்ந்து கோரிக்கை வைத்துவருகிறது. ஆனால், இந்தக் கோரிக்கைகளுக்கு பா.ஜ.க செவிசாய்க்கவில்லை. இதனால், அங்கு தொடர்ந்து இழுபறி நீடித்துவந்தது. இரு தரப்பிலும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுக்கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில், ஆளுநரை சந்தித்து, முதல்வர் பதவியைக் கடந்த வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்தார் தேவேந்திர பட்னாவிஸ்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், உத்தவ் தாக்கரே மற்றும் சிவசேனாவைக் கடுமையாக தாக்கிப் பேசினார். தனது அழைப்புகளுக்கு உத்தவ் தாக்கரே பதிலளிக்கவில்லை என்றதுடன், பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைமையை சிவசேனா கடுமையாக விமர்சித்துவருவதாகவும் கூறினார். இதற்குப் பதிலடிகொடுத்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவர் முதல்வராவார் என்றும், அதற்கு தேவேந்திர பட்னாவிஸோ அமித் ஷாவோ தேவையில்லை என்று காட்டமாகக் கூறியிருந்தார்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

இந்த நிலையில், மகாராஷ்டிராவில் அதிக இடங்களை வென்ற கட்சி என்ற அடிப்படையில், ஆட்சியமைக்க வருமாறு பா.ஜ.க -வுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷியாரி அழைப்பு விடுத்திருக்கிறார். குடியரசுத் தலைவர் ஆட்சி அமையும் என்று தகவல்கள் வெளியான நிலையில், ஆளுநரின் இந்த அழைப்பு வெளியாகியிருக்கிறது. இது, மகாராஷ்டிர அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதை சிவசேனா கட்சி வரவேற்றுள்ளது. அதேநேரம், ஆளுநரின் அழைப்பு தாமதமானது எனக் கூறியுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், பா.ஜ.க-வுக்கு எதிராக வாக்களிப்போம் என்று தெரிவித்திருக்கிறது.

ஆளுநரின் அழைப்பை அடுத்து, இன்று மும்பையில் பா.ஜ.க-வின் உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், ஆட்சியமைப்பதுகுறித்து பா.ஜ.க முக்கிய முடிவெடுக்கும் என்று கூறப்படுகிறது.

`பா.ஜ.க-வைக் கண்டுகொள்ளாத சிவசேனா; பிளான் பி!' - மகாராஷ்ட்ரா முதல்வர் பட்னாவிஸ் ராஜினாமா

ஆளுநர் அழைப்பை ஏற்று ஆட்சியமைக்க உரிமை கோரும் நிலையில், பெரும்பான்மையை நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் சட்டப்பேரவையில் பா.ஜ.க நிரூபிக்க வேண்டும். அந்த வாக்கெடுப்பில் சிவசேனா கட்சி பா.ஜ.க-வுக்கு எதிராக வாக்களித்தால், ஆட்சி கவிழும் நிலை உருவாகும். இதனால், பா.ஜ.க புதிய சிக்கலில் இருக்கிறது.