அரசியல்
Published:Updated:

பவன் பாலிடிக்ஸ்... சூடாகும் தி.மு.க!

ஆர்.என்.ரவி, ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆர்.என்.ரவி, ஸ்டாலின்

நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் சட்ட முன்வடிவை, குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பவில்லை’ என்று ஆளும் தரப்பில் பிரச்னை செய்தனர்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையேயான பனிப்போர் உச்சகட்டத்தை நெருங்கியிருப்பதாகச் சொல்கிறது ராஜ்பவன் வட்டாரம். நீட் விவகாரத்தில் தொடங்கிய இந்த முட்டல்மோதல், உள்ளாட்சி அமைப்புகளுக்கான மத்திய அரசின் நிதிப் பங்களிப்பில் ஆளுநர் நோட்டம்விடுவது வரை நீண்டிருக்கிறது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். மத்திய அரசுடன் நேரடி மோதலை விரும்பாத தமிழக அரசும், ஆளுநருக்கு ‘செக்’ வைப்பதன் மூலமாக, மத்திய அரசுக்கு மறைமுக நெருக்கடியைக் கொடுக்க முனைகிறது. சூடாகிக்கொண்டே வரும் இந்த ஆடுபுலி ஆட்டத்தில், கொதிநிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது தி.மு.க. இந்த அனல் அரசியலின் பின்னணியில் நடப்பது என்ன?

முரண்பாட்டின் ஆரம்பப்புள்ளி!

ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையிலான முரண்பாடு இப்போது புதிதாகத் தொடங்கியதல்ல. கடந்த நவம்பர் மாதமே வெட்டவெளிச்சமானது. நவம்பர் 27-ம் தேதி மாலை ஆளுநரைச் சந்தித்துவிட்டு வந்த முதல்வர் ஸ்டாலின், ‘நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பக் கோரிக்கை விடுத்தேன்’ என்று விளக்கமளித்தார். அரசின் செய்திக்குறிப்பிலும் இதே விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், அடுத்த நாள் ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மழை வெள்ளம், கொரோனா மீட்பு நடவடிக்கை குறித்தே பேசப்பட்டது’ என்று அந்தச் சந்திப்புக்குக் காரணம் சொன்னது ராஜ்பவன். அப்போதே, ‘யார் சொல்வது உண்மை?’ என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இந்த முரண்பாடு தற்போது வீரியமடைந்திருப்பதாகச் சொல்கிறது ராஜ்பவன் வட்டாரம்.

ஆளுநர் ரவிக்கு நெருக்கமான முன்னாள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். “தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டபோதே, அவரது ஐ.பி.எஸ் பின்னணியை முன்வைத்து தமிழகத்திலும் சர்ச்சைகள் சூழ ஆரம்பித்தன. ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், தமிழக அரசுடன் அனுசரணையான போக்கைத்தான் ஆளுநர் கையாண்டார். துறைவாரியாக அரசின் செயல்பாடுகளை, தான் அறிய விரும்புவதாக முதல்வரிடம் அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், இந்த விவகாரம் வீண் சர்ச்சையை ஏற்படுத்தியவுடன் ஆய்வுக்கான திட்டம் தள்ளிவைக்கப்பட்டது. இதை கெளரவக் குறைச்சலாக ஆளுநர் அலட்டிக்கொள்ளவில்லை. தமிழக அரசின் சூழலைப் புரிந்து நடந்துகொண்டார். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 34-வது பட்டமளிப்பு விழா, கடந்த டிசம்பர் 20-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய ஆளுநர், ‘சக்திவாய்ந்த முதல்வராக ஸ்டாலின் திகழ்கிறார்’ என்று புகழாரம் சூட்டினார். ‘தன்னுடைய அதிகார வரம்பு எது?’ என்பதையறிந்தே ஆளுநர் செயல்பட்டார். ஆனால், அவருடைய அனுசரணைக்கு ஏற்ப தமிழக அரசு இணக்கமாக நடந்துகொள்ளவில்லை.

பவன் பாலிடிக்ஸ்... சூடாகும் தி.மு.க!

“இந்த ஆளுநர் தேவையில்லை!” - முறுக்கிய தி.மு.க

‘நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் சட்ட முன்வடிவை, குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பவில்லை’ என்று ஆளும் தரப்பில் பிரச்னை செய்தனர். தி.மு.க பொருளாளரும், அக்கட்சியின் மக்களவைக்குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, ‘ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும்; அவர் தமிழகத்துக்குத் தேவையில்லை’ என்று காட்டமாக விமர்சித்தார். இந்தச் சட்ட முன்வடிவு குறித்து தனக்குச் சில சந்தேகங்கள் இருப்பதால்தான், அதைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் வைத்திருக்கிறார் ஆளுநர். இந்த விளக்கம் தமிழக அரசுத் தரப்புக்கும் தெரியும். ஆனால், எல்லாம் தெரிந்துகொண்டே பிரச்னை செய்கிறார்கள். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களை ஆளுநர் நியமிப்பதுதான் தமிழகத்தில் நடைமுறை. அந்த முறையை மாற்றிவிடத் தீர்மானித்திருக்கிறது தமிழக அரசு. ‘துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் வகையில் புதிய சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும்’ என்று சமீபத்தில் முதல்வர் அறிவித்திருக்கிறார். இப்படி ஆளுநர் மாளிகையுடன் மோதலான போக்கை தி.மு.க-தான் கையாள்கிறது” என்றனர்.

இப்படி ஆளுநர் மாளிகை ஒருபக்கம் அனுதாபம் தேடிக்கொண்டாலும், பல்வேறு விவகாரங்களில் அவர்கள் மறைமுகமாக மூக்கை நுழைப்பதுதான் தி.மு.க-வைக் கொதிப்படையச் செய்திருக்கிறது என்கிறார்கள். “ஆளுநர் ரவி, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, சென்னை மண்டல மத்திய உளவுத்துறைத் தலைவர் ரவிச்சந்திரன்... இந்த முக்கோணக் கூட்டணி தி.மு.க-வுக்கு எதிராக வரிந்துகட்டிக்கொண்டு செயல்படுகிறது” என்றபடி ராஜ்பவன் ரகசியங்களை நம்மிடையே புட்டு புட்டுவைத்தார் மூத்த அமைச்சர் ஒருவர்.

‘பவன் பாலிடிக்ஸ்!’

“பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுடன் ஆலோசனை செய்வது ஆளுநரின் உரிமை. அதில் நாங்கள் தலையிடவில்லை. ஆனால், கடந்த அக்டோபர் 30-ம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், தேசியக் கல்விக் கொள்கையைத் தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்து துணைவேந்தர்களுடன் பேசியிருக்கிறார் ஆளுநர். ‘தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிராகத் தமிழக அரசு நிலைப்பாடு எடுத்திருக்கும் நிலையில், அதை அமல்படுத்த ஆளுநர் துடிப்பது ஏன்?’ என்பதுதான் கேள்வி. நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதா, ஆளுநருக்கு அனுப்பப்பட்டு நூறு நாள்களைக் கடந்துவிட்டன.இதுவரை அந்த மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படவில்லை. இதில் சட்ட நுணுக்கத்தை ஆராயவேண்டிய அவசியம் ஆளுநருக்கு என்ன இருக்கிறது? மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது மட்டும்தான் அவருடைய பணி. ஆனால், அதையே செய்யாமல் காலம் தாழ்த்துகிறார் ஆளுநர். இதை நாங்கள் கேட்டால், முட்டுகிறோம்... மோதுகிறோம் என்பதா?

சட்டமன்றத்தில் வாசிக்கப்படும் ஆளுநர் உரையைத் தமிழக அரசுதான் தயார்செய்யும். இந்த உரை வாசிக்கப்படும்போதே, உரையின் நகல் சட்டமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் வழங்கப்படும். ஜனவரி 5-ம் தேதி சட்டமன்றத்தில் ஆளுநர் உரையை வாசித்த ரவி, ‘ஜெய்ஹிந்த்’ என்றதோடு உரையை முடித்தார். இந்த வார்த்தை அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் இல்லை. இல்லாத வார்த்தையை அவர் பேசினார் என்பதற்காக, ஏற்கெனவே அச்சடிக்கப்பட்ட அரசின் செய்திக்குறிப்பில் எப்படி உடனடியாக மாற்றம் செய்ய முடியும்? இந்த நடைமுறைச் சிக்கல்கள் தெரிந்திருந்தும், வீண் பிரச்னையைக் கிளப்புகிறது ராஜ்பவன் வட்டாரம்.

தமிழக அரசுக்கு எதிராக அவ்வப்போது அறிக்கைகள் பெறுவதும், அதனடிப்படையில் ஏதாவது ஒரு கேள்வியைக் கேட்டு அரசின் நிர்வாகத்தில் குடைச்சலை ஏற்படுத்த முனைவதும் ராஜ்பவனுக்குச் சமீபகால வாடிக்கையாகிவிட்டது. சம்பந்தி வீட்டுக்குச் செல்வதுபோல, ராஜ்பவனுக்கு அடிக்கடி செல்லும் பா.ஜ.க-வினர், அரசின் மீது புகார்களை அளிப்பதை வழக்கமாக்கிக்கொண்டுள்ளனர். அந்தப் புகார்கள் மூலமாக ‘தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை’ என்பது போன்ற பிம்பத்தை உருவாக்கச் சிலர் முயல்கிறார்கள். இதே பாணியில், கடந்த டிசம்பர் 27-ம் தேதி அ.தி.மு.க சார்பில் ஆளுநரைச் சந்தித்து, ‘தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை’ என்று மனு கொடுத்தனர். தி.மு.க ஆட்சிக்கு வந்த 200 நாள்களில் 557 கொலை நடந்ததாக விவரங்கள் அளித்தனர். உடனடியாக அந்தப் புகாரை மத்திய உள்துறைக்கு அனுப்பியதோடு, மாநில அரசிடமும் விளக்கம் கேட்டார் ஆளுநர் ரவி. இதில் இவ்வளவு வேகம் காட்டும் ஆளுநர், தமிழக அரசு அளித்த நீட் விலக்கு மசோதாவில் வேகத்தைக் காட்டவில்லையே? ராஜ்பவன் பாலிடிக்ஸை எங்களிடமே காட்ட முற்படுகிறார் ஆளுநர் ரவி. இந்த வருடம் ஆறு துணைவேந்தர் பதவியிடங்கள் காலியாகவுள்ளன. அவற்றில் தங்களுக்குத் தோதான நபர்களை ஆளுநர் மூலமாகப் பணியமர்த்த பா.ஜ.க-வினர் திட்டமிடுகிறார்கள். இதற்கு ஒருபோதும் தி.மு.க உடன்படாது. இவையெல்லாம் ஒரு மாநிலத்தின் உரிமை சார்ந்த விஷயம். இதில் ஆளுநர் தலையிட்டால், அதற்கான எதிர்வினையை ராஜ்பவன் சந்தித்துத்தான் ஆக வேண்டும்” என்றார் கோபமாக.

உள்ளாட்சித்துறை குடைச்சல்... கொதிப்பில் தி.மு.க!

தி.மு.க இவ்வளவு தூரம் கொதிப்பதற்கு மாநில உரிமை விவகாரம் மட்டும் காரணமல்ல. உள்ளாட்சித்துறைக்குள் ராஜ்பவன் நடத்தும் விசாரணையும் ஒரு காரணம் என்கிறது விவரமறிந்த பா.ஜ.க வட்டாரம். நம்மிடையே பேசிய மூத்த பா.ஜ.க தலைவர் ஒருவர், “உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேவையான நிதியில், மத்திய அரசின் பங்களிப்பு கணிசமாக வருகிறது. ஸ்மார்ட் சிட்டி பணிகள் இந்தத் துறை மூலமாகவே செயல்படுத்தப்படுகின்றன. துறையின் அமைச்சராக கே.என்.நேரு-தான் இருக்கிறார். துறைக்குள் வரும் மத்திய அரசின் நிதியைக் கண்காணிப்பதன் மூலமாக தி.மு.க அரசுக்கு செக் வைப்பதுதான் ஆளுநர் மாளிகையின் திட்டம். தேவைப்பட்டால் சி.பி.ஐ மூலமாகக் குடைச்சலும் கொடுக்க முடியும்.

விரைவில், நகராட்சி அமைப்புகளுக்கு 5,000 மின்சார வாகனங்கள் வாங்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இவற்றில், சுமார் 2,000 வாகனங்களை அமைச்சர் ஒருவர் தொடர்புடைய நிறுவனத்துக்கு வழங்க ஏற்பாடுகள் நடப்பதாக ஆளுநருக்குப் புகார் சென்றுள்ளது. மீதியுள்ள 3,000 வாகனங்களை வாங்க முன்னணி நிறுவனங்கள் போட்டிபோடுகின்றன. இந்த விவகாரங்களையெல்லாம் உன்னிப்பாகக் கண்காணிக்கிறது ராஜ்பவன். டெண்டர் கிடைக்காத விரக்தியிலிருக்கும் சில நிறுவனங்கள் மூலமாக எதிர்ப்பைக் கிளப்பவும் பா.ஜ.க வட்டாரத்திலேயே முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. பொங்கல் பரிசுத்தொகுப்பில் தவறு நடந்திருப்பதாக முதல்வரே ஒப்புக் கொண்டிருக்கிறார். தவறிழைத்த நிறுவனங்களைக் கறுப்புப் பட்டியலில் சேர்க்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். துறை மேலிடத்தின் அனுசரணை இல்லாமல், ஒரு கடுகு பாக்கெட்டைக்கூட மாற்ற முடியாது என்பதுதான் யதார்த்தம். வெல்லம் விநியோகத்தில் இவ்வளவு பெரிய முறைகேடு நடந்திருக்கும்போது, அது அரசுக்குத் தெரியாதா? பரிசுத்தொகுப்பில் நடந்துள்ள இந்த ஊழலில், சில அதிகாரிகள், நிறுவனங்களை பலிகடாக்களாக்கி முடித்துவிடப் பார்க்கிறது தி.மு.க அரசு. இதை ஒப்பந்ததாரர்கள் எப்படிச் சகித்துக்கொண்டிருப்பார்கள்?

ஒப்பந்ததாரர்களிடம் தி.மு.க ஏற்படுத்தியிருக்கும் இந்த வீண் அச்ச உணர்வுதான் பா.ஜ.க-வுக்குக் கைகொடுக்கப் போகிறது. அரசின் டெண்டர் விவகாரங்களில் நடைபெறும் விஷயங்களை இனி அவர்களே வெளியே வந்து பேசப்போகிறார்கள். ராஜ்பவன் ஆட்டம் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. விரைவில் எதிர்வினைகளை நீங்கள் பார்க்கலாம்’’ என்றார்.

பவன் பாலிடிக்ஸ்... சூடாகும் தி.மு.க!

ஏன் தாமதம்?

‘வேலு நாச்சியார், கல்வி, தமிழ் மொழி’ என பா.ஜ.க-வுடன் தத்துவார்த்தரீதியாக தி.மு.க மோதிவந்த நிலையில், ராஜ்பவனின் இந்த ‘உள்ளாட்சி’ அட்டாக்கை ஆட்சி மேலிடம் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இதனால்தான், ‘ஐ.ஏ.எஸ் கேடர் விதிகள் 1954’-ல் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முயலும் விவகாரத்தில், மிகத் தாமதமாகத் தன் கருத்தை வெளியிட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என்கிறார்கள்.

“மத்திய அரசுக்கான 40 சதவிகித அதிகாரிகளை மாநிலங்கள் அனுப்புவதில்லை என்று மத்திய அரசு கூறுவது சரிதான். ஆனால், ஜூனியர் அளவிலான அதிகாரிகள் மத்திய அரசுப் பணிக்குச் செல்லும்போது, அங்கு அடிப்படை வசதிகள், பணி, மற்றும் பதவி உயர்வு எனப் பல பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள். அவற்றைத் தீர்ப்பதற்கு மத்திய அரசு இதுவரை சரியான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. மாநில அரசின் ஒப்புதல் இல்லாமலேயே தங்களுக்குத் தேவையான அதிகாரிகளை அழைத்துக் கொள்ளலாம் என்கிற இந்தத் திருத்தத்தில், மாநிலத்தைப் பாதிக்கக்கூடிய பல பிரச்னைகள் இருக்கின்றன. மாநில அரசுக்கு ஆதரவாக இருக்கும் அதிகாரிகள், மாநில அரசுக்கு நல்ல பெயர் உண்டாகும் வகையில் செயல்படும் அதிகாரிகள் ஆகியோரைப் பந்தாட முடியும். மத்திய அரசு நினைத்தால், எப்போது வேண்டுமானாலும், எந்த அதிகாரியை வேண்டுமானாலும் தூக்கியடிக்க முடியும் என்கிற அச்சத்தை உண்டாக்கி, மொத்த அதிகாரிகளையும் தன் கன்ட்ரோலில் எடுத்து மாநில அரசு இயந்திரத்தை பலவீனப்படுத்த நினைக்கிறது மத்திய அரசு. இவ்வளவு சீரியஸான விவகாரத்தில், பல மாநிலங்கள் கருத்து வெளியிட்ட பின்பும், மிக தாமதாகக் கெடுநாளுக்கு இரண்டு நாள் முன்பாக முதல்வர் கருத்து வெளியிட்டிருப்பது ஏன் என்றுதான் புரியவில்லை” என்றார் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் ஒருவர்.

நீட் விவகாரம், துணைவேந்தர் நியமனம், ஜெய்ஹிந்த் சர்ச்சை என்று அடுத்தடுத்து ராஜ்பவனுடன் மோதிவந்த தி.மு.க-வை, தன் பங்குக்குத் திருப்பியடிக்க ஆரம்பித்திருக்கிறார் ஆளுநர் ரவி. ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைக் கையிலெடுத்து, ராஜ்பவன் மூலமாக மாநில அரசுகளுக்குக் குடைச்சல் கொடுக்க ‘ஸ்கெட்ச்’ போடுகிறது மத்திய அரசு. இதில் ஒரு படி மேலே சென்று, தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்படும் நிதி விவகாரங்களை நோட்டம்விட ஆரம்பித்திருக்கிறது ராஜ்பவன். விரைவிலேயே, உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக தி.மு.க அரசைக் குடைந்தெடுக்கும் நடவடிக்கைகள் கிண்டியிலிருந்து புறப்பட்டாலும் ஆச்சர்யமில்லை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

ஆடு புலி ஆட்டத்தின் உச்சகட்டத்தை இனிமேல்தான் பார்க்கவிருக்கிறோம். பார்ப்போம்!