Published:Updated:

ஆளுநர் ஆர்.என்.ரவி: தீவிரமாகும் எதிர்ப்பு... மாநில ஆளுநரைத் திரும்பப் பெறுவது சாத்தியமா?

முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்துகொண்டவிதம், அவருக்கெதிராகக் கடும் எதிர்ப்பைக் கிளப்பியிருக்கிறது.

ஆளுநர் ஆர்.என்.ரவி: தீவிரமாகும் எதிர்ப்பு... மாநில ஆளுநரைத் திரும்பப் பெறுவது சாத்தியமா?

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்துகொண்டவிதம், அவருக்கெதிராகக் கடும் எதிர்ப்பைக் கிளப்பியிருக்கிறது.

Published:Updated:
முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி

ஜனவரி 9-ம் தேதி தமிழ்நாடு சட்டசபைக் கூட்டம் தொடங்கியது. இதில் ஆளுநர் வாசித்த உரையில் அச்சிடப்பட்ட சில தகவல்கள் நீக்கப்பட்டும், சேர்க்கப்பட்டும் இருந்தன. குறிப்பாக, `தமிழ்நாடு’ எனக் குறிப்பிட்ட இடங்களில் `தமிழகம்’ எனவும், `திராவிட மாடல்’ என இரண்டு இடங்களில் கூறப்பட்டிருந்தது முற்றிலுமாக தவிர்க்கப்பட்டிருந்தது. அதேபோல் பெரியார், அண்ணா, காமராஜர், கருணாநிதி போன்ற தலைவர்களின் பெயர்கள் வாசிக்கப்பட்டவில்லை. மேலும், விவேகானந்தர் பிறந்தநாள், ஒளவையார் கவிதைகள் உரையில் கூடுதலாகச் சேர்க்கப்பட்டிருந்தன. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதனால் முதலமைச்சர் ஸ்டாலின், `அமைச்சரவை கூடி ஒப்புதல் வழங்கிய உரையை மாற்றி வாசித்த ஆளுநர் உரை அவைக்குறிப்பில் இடம்பெறாது’ எனத் தீர்மானம் கொண்டுவந்தார். இதற்கு தேசியகீதம் பாடுவதற்கு முன்பாகவே ஆளுநர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார்.

ஆளுநர் வெளிநடப்பு
ஆளுநர் வெளிநடப்பு

ஆளுநர் சர்ச்சைகளும் எதிர்ப்புகளும்!

தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என் ரவி பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தவண்ணம் இருக்கின்றன. குறிப்பாக, `தமிழ்நாடு’ எனச் சொல்வதற்கு பதிலாக, `தமிழகம்’ என்றே கூறலாம். ஒன்றிய வார்த்தைக்குப் பின்னால் இருக்கும் அரசியல், சனாதனம், மொழி குறித்த பேச்சு என அவர் பேசியது அனைத்தும் பெரும் விவாதமாகவே மாறியது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் - ஆளுநர் ஆர்.என்.ரவி
முதல்வர் மு.க.ஸ்டாலின் - ஆளுநர் ஆர்.என்.ரவி

இதனால், `தமிழ்நாடு ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும்’ என தி.மு.க., அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, சிபிஎம் சார்பாகக் குடியரசுத் தலைவரிடம் மனு கொடுக்கப்பட்டது. இந்தச் சர்ச்சைகளெல்லாம் அவைக்கு வெளியில் நடந்தன. ஆனால், ஆளுநர் தற்போது ஆளும் தி.மு.க அரசின் மீதான எதிர்ப்பைச் சட்டசபையிலே காட்டியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.

இது தொடர்பாகப் பேசிய தி.மு.க மாணவரணித் தலைவர் இராஜீவ் காந்தி, ``தமிழ்நாட்டில் ஜனநாயகரீதியாக வைக்கப்படும் கோரிக்கைக்கு, தமிழக ஆளுநர் அந்தப் பொறுப்புக்கு ஏற்றாற்போல செயல்படாமல் ஒரு கட்சியின் நபராகச் செயல்படுகிறார். இதனால், ஆளுநர் சட்டப்படி நடக்காமல் இருப்பதைக் கண்டித்து, அவர் பதவி விலக வேண்டும் என்பதே நாங்கள் வைக்கும் கோரிக்கை.

இது தொடர்பாக, மத்திய அரசிடமும், குடியரசுத் தலைவரிடமும் தி.மு.க சார்பாக மனு கொடுக்கப்பட்டது. அதற்கு மேலும் வலுசேர்க்கும்விதமாகத்தான் அவரின் சட்டசபைச் செயல்பாடுகள் இருக்கின்றன. நியமனப் பதவியில்வந்த ஆளுநர் தமிழ்நாட்டுடன் ஒத்து நடப்பதில்லை. இரு கைகளும் இணைந்து தட்டினால்தான் ஓசை வரும். ஆனால், மாநில அரசு மட்டுமே தட்டிக்கொண்டு இருப்பதில் எந்தப் பயனும் இல்லை.

இராஜீவ் காந்தி -
இராஜீவ் காந்தி -

பொங்கல் தேநீர் விருந்து அழைப்பில்கூட தமிழ்நாடு அரசின் சின்னம் ஆளுநரால் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து, 'ஒன்றியம்', `திராவிடம்’, என்ற அனைத்திலும் தமிழக அரசுக்கு எதிரான வாதத்தை மட்டுமே வைக்கிறார்.

தி.மு.க கொண்டுவரும் எந்தத் தீர்மானத்துக்கும் ஒப்புதல் வழங்கப்படுவதில்லை. மாநில அரசு 'அரசியலமைப்புக்கு' உட்பட்டு இயற்றிய 34 தீர்மானங்கள் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன. ஆனால், அவர் ஒப்புதல் அளிக்காமல் தொடர்வதில் உள்நோக்கம் இருக்கிறது. அது தி.மு.க அரசு செயல்படக் கூடாது என்பதே. எனவே, அவரை ஜனநாயகபூர்வமாக நீக்குவது பற்றித் தலைமை நிச்சயம் முடிவெடுக்கும்'' என்றார்.

கடந்த ஆண்டு இடம்பெற்றிருந்த தமிழக அரசின் சின்னம்
கடந்த ஆண்டு இடம்பெற்றிருந்த தமிழக அரசின் சின்னம்

இது தொடர்பாகப் பேசிய மூத்த பத்திரிகையாளர் ராதா கிருஷ்ணன், ``ஜனநாயகபூர்வமாக ஓர் ஆளுநரை நீக்க வேண்டுமா, இல்லையா என்பதை முடிவெடுக்கவேண்டியது மத்திய அரசுதான். ஆளுநர் ஒருவர், தன் அதிகார வரம்பை மீறியும், ஆளும் அரசு மற்றும் அரசியலைப்புச் சட்டத்துக்கு எதிராக நடந்தாகக் கூறி மத்திய அரசு ஆளுநர் பொறுப்பிலிருந்து நீக்கிய வரலாறு இந்தியாவில் இல்லை.

ராதா கிருஷ்ணன்
ராதா கிருஷ்ணன்

ஒருவேளை, மத்திய அரசுடன் சுமுகமான உறவு இருந்தால், இந்த நீக்க நடவடிக்கையை மேற்கொள்ளலாம். ஆனால், அப்படி இல்லாதபட்சத்தில் மாநில அரசால் மன்றாட மட்டுமே முடியும். அதேபோல், அரசின் நிர்வாகம் தொடர்பாகக் கருத்து கூறுகிறார் என்பதைச் சுட்டிக்காட்டலாம். ஆனால், அதற்காக அவர் ஆளுநர் பொறுப்பிலிருந்து மாற்றப்படுவார் என்று கூற முடியாது. குறிப்பாக, அவர் சட்டசபையிலிருந்து வெளியேறியதும் மரபை மீறிய செயல். அது சட்டம் அல்ல. அதை இத்தனை காலம் அனைவரும் மதித்து நடந்திருக்கிறார்கள். எனவே, இதையும் காரணம் காட்டி அவரை நீக்க முடியாது.

இதைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்றுதான் முதலமைச்சர் ஸ்டாலின் நினைக்கிறார். அதனால் அவருக்கு எதிரான கருத்தைப் பேச வேண்டாம் எனக் கூறியிருக்கிறார். காரணம், ஆளுநர் பேசும் சர்ச்சைப் பேச்சால் அவருக்குப் பயன் இருக்கிறதோ இல்லையோ திமுக-வுக்கு அதிக லாபம் இருக்கிறது என்பதே உண்மை" என்றார்.

கேரளா, மேற்கு வங்கம், தெலங்கானா போன்ற மாநிலங்களிலும்கூட ஆளுநர்-மாநில அரசுக்கான மோதல் போக்கு இருந்துவருகிறது. ஆனால், அதையெல்லாம் மத்திய அரசு கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. ஆனால் திமுக, ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்பதைத் தீவிரமாகப் பதிவுசெய்துவருகிறது.

தமிழக ஆளுநர் ரவி
தமிழக ஆளுநர் ரவி

அதற்காக சில முயற்சிகளையும் எடுத்துவருகிறது. அரசியல்ரீதியான அழுத்தத்தைத் தொடர்ந்து கொடுப்பதன் மூலம் அவர் மாற்றப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது.

இதற்கிடையே, தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, எம்.பி-க்கள் ஆ. ராசா, என்.ஆர் இளங்கோ, டி.ஆர் பாலு, வில்சன் உள்ளிட்ட தமிழக அரசின் பிரதிநிதிகள் ஆளுநர் விவகாரம் தொடர்பாக டெல்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை இன்று காலை சந்தித்தனர். இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி டி.ஆர்.பாலு, ``ஆளுநர் உரையின்போது சில வார்த்தைகளைத் தவிர்த்ததும் சேர்த்ததும் மரபு மீறிய செயல் என்று குடியரசுத் தலைவரிடம் தெரிவித்தோம். ஆளுநர் அவை மரபுகளை மீறிவிட்டார். தேசியகீதம் பாடும் முன்பே அவர் வெளியேறியது தமிழ்நாடு சட்டசபையையும், தமிழ்நாடு மக்களையும் அவமதிக்கும் செயல். எனவே, முதல்வர் ஸ்டாலின் கொடுத்திருக்கும் மனுவைப் படித்துப் பார்த்துவிட்டு உங்கள் முடிவை எடுங்கள் என்று குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தியிருக்கிறோம். இது தொடர்பாக அவர் பரிசீலிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்” என்றார்.

இவ்வாறு, கடுமையான எதிர்ப்பு கிளம்பி, அதை தி.மு.க சரியாகக் கையாளும்பட்சத்தில் ஆளுநரைத் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பிருப்பதாகவும் அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். அதேநேரத்தில் மத்திய அரசு, மாநில அரசின் மீதான இந்த அழுத்தத்தை விரும்பும்பட்சத்தில் அதற்கு உடனடியாக வாய்ப்பு இல்லை என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.