அலசல்
சமூகம்
Published:Updated:

ஸ்டாலினின் ‘அரசியல் ரம்மி!’

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டாலின்

ஆட்சிக்கு வருவோம் என்று தெரியாத காலத்திலேயே, ‘நாட்டுக்கு ஆளுநர் தேவையில்லை’ எனச் சொன்ன கட்சி தி.மு.க. இந்தியாவின் பல மாநிலங்களில் ஏற்பட்ட குழப்பங்களுக் கெல்லாம் காரணமாக இருப்பவர்கள் ஆளுநர்கள்தான்.

ஒருவழியாக ‘ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதா’-வுக்கு ஒப்புதல் அளித்துவிட்டார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. “ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தால், அந்த மசோதா நிராகரிக்கப்பட்டது என்று அர்த்தம்” என்று சில நாள்களுக்கு முன்புதான் ஒரு நிகழ்வில் பேசிப் புயலைக் கிளப்பியிருந்தார் அவர். இந்த நிலையில், ‘திடீரென பல்டி அடித்து மசோதாவுக்கு ஒப்புதல் கொடுத்ததன் பின்னணி என்ன?’ என்று விசாரித்தால், “வேறொன்றும் இல்லை, தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த அதிரடித் தீர்மானமும், அனல் பேச்சுகளும்தான் பிரதான காரணம். மேலும், தெலங்கானாவின் கே.சி.ஆர்-போலவோ மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜிபோலவோ மொத்தமாக முறுக்கிக்கொண்டு நிற்கவில்லை முதல்வர் ஸ்டாலின். `இடம், பொருள், ஏவல்’ என்பார்களே அதுபோல... பிரச்னைகளை அரசியல் நாகரிகத்துடன் அணுகினார். முதல்வர் ஸ்டாலின் தன் அணுகுமுறையால் மோடியின் மனதிலேயே தாக்கத்தை ஏற்படுத்திவிட்டார். அதன் விளைவுதான் ஆளுநரின் ஒப்புதல்” என்கிறார்கள் தி.மு.க-வின் சீனியர் அமைச்சர்கள். ஏப்ரல் 8-ம் தேதி, சென்னை சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் புறப்பட்டுச் சென்ற அடுத்த 48 மணி நேரத்தில், தமிழகத்தில் பல காட்சிகள் அதிரடியாக மாறியிருக்கின்றன!

“திட்டமிட்டுச் சீண்டுகிறார் ஆளுநர்” - கொதித்த முதல்வர், ஸ்தம்பித்த பிரதமர்!

முதல்வருக்கு மிக நெருக்கமான மூத்த அமைச்சர் ஒருவரிடம் பேசினோம். “பிரதமர் மோடியின் சென்னை வருகையின்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில் மோடியும் முதல்வர் ஸ்டாலினும் நெருக்கமாக இருந்தது உண்மைதான். 2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், தி.மு.க-வோடு தேவையில்லாமல் உரசிக்கொள்ள பிரதமர் விரும்பவில்லை. இந்தச் சூழலை ராஜதந்திரமாகத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்டார் ஸ்டாலின். இன்முக வரவேற்பு, கலகலப்பான பேச்சு என்று பிரதமருடன் நெருக்கமாகவே இருந்தார் ஸ்டாலின். சென்னை புரோகிராம்களை முடித்துக்கொண்டு கிளம்பியபோது, விமான நிலையத்தில் முதல்வருடன் 20 நிமிடங்கள் தனித்துப் பேசினார் பிரதமர். சில தி.மு.க சீனியர்களும் உடன் இருந்தனர். தமிழகத்துக்கான 15 கோரிக்கைகள் அடங்கிய மனு பிரதமரிடம் அளிக்கப்பட்டது.

அப்போது, ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் குறித்து வருத்தத்தை வெளிப்படுத்தினார் முதல்வர். ‘ஒவ்வொரு முறை நீங்கள் தமிழகத்துக்கு வரும்போதும், நான் டெல்லிக்கு வரும்போதும், திட்டமிட்டே எங்களைச் சீண்டுகிறார் ஆளுநர். நம் சந்திப்பில் தர்மசங்கடமான சூழலை உருவாக்குகிறார். ஆளுநர் எதிர்ப்பு என்பதை எங்களால் தீவிரமாகக் கையிலெடுக்க முடியும். நாங்கள் எடுத்தவர்கள்தான். அதைச் செய்யவேண்டிய சூழலை உருவாக்கிவிடாதீர்கள். நீங்கள்தான் அவரைக் கண்டிக்க வேண்டும்’ என்று பிரதமரிடமே நேரடியாகப் போட்டு உடைத்துவிட்டார் ஸ்டாலின். எதிர்பார்க்காத வகையில் திடீரென இப்படிச் சொன்னதும், பிரதமருக்கு என்ன ரியாக்ட் செய்வதெனத் தெரியவில்லை. ஆனாலும், முதல்வரின் இந்த அணுகுமுறை பிரதமருக்குப் பிடித்தே இருந்தது.

ஸ்டாலின், ஆர்.என்.ரவி
ஸ்டாலின், ஆர்.என்.ரவி

‘அரசியல்ரீதியாக ராஜ் பவனோடு மட்டுமே மாநிலக் கட்சிகள் சண்டையிட்டுக் கொண்டிருக்க வேண்டும்’ என்பதுதான் பா.ஜ.க-வின் எண்ணம். தெலங்கானா, மேற்கு வங்கம், கேரளாவில் இதுதான் நடக்கிறது. பா.ஜ.க ஆளாத மற்ற மாநிலங்களிலும் இதுதான் நிலை. அந்தச் சூழ்ச்சி வலைக்குள், தமிழகம் சிக்கிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஆளுநரைக் கண்டித்துவைக்கச் சொன்னதன் மூலம், ‘உங்கள் சூழ்ச்சி வலை எங்களுக்குத் தெரியும்’ என்பதை மறைமுகமாக பிரதமரிடம் தெரியப்படுத்திவிட்டார். அதேநேரத்தில், பிரதமரிடம் தான் பேசியதை வெளிப்படுத்தி, ஆளுநர் ரவிக்கு ஒரு முக்கியத்துவம் கிடைப்பதில் முதல்வருக்கு விருப்பமில்லை. எனவேதான் மீடியாக்களிடம் அது குறித்து எதுவும் பேச வில்லை” என்றார்.

பிரதமர் புறப்பட்டுச் சென்ற அடுத்த நாள், ஆளுநரைக் கண்டித்து சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றுவதென ஆலோசிக்கப்பட்டிருக் கிறது. இதற்கான அடித்தளத்தைப் போட்டவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்தான் என்பதால், அவரோடு பேசியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனும் விவாதிக்கப்பட்டு, ஏப்ரல் 10-ம் தேதி ஆளுநரைக் கண்டித்து அரசினர் தனித் தீர்மானத்தைக் கொண்டுவருவது என முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

“ராஜினாமா பண்ணிட்டு போங்கோ...” - வெடித்துத் தீர்த்த துரைமுருகன்!

ஆளுநருக்கு எதிராக முதல்வர், ‘அரசினர் தனித் தீர்மானம்’ கொண்டுவந்த வேளையில், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரத்தை எழுப்பி, அவையிலிருந்து வெளியேறியது அ.தி.மு.க. தீர்மானம் மீதான விவாதம் தொடங்கிய நொடியிலிருந்து சட்டமன்றத்தில் பற்றிக்கொண்டது பரபரப்பு.

தீர்மானத்தை வரவேற்றுப் பேசிய அவையின் முன்னவரும், அமைச்சருமான துரைமுருகன், “ஆட்சிக்கு வருவோம் என்று தெரியாத காலத்திலேயே, ‘நாட்டுக்கு ஆளுநர் தேவையில்லை’ எனச் சொன்ன கட்சி தி.மு.க. இந்தியாவின் பல மாநிலங்களில் ஏற்பட்ட குழப்பங்களுக் கெல்லாம் காரணமாக இருப்பவர்கள் ஆளுநர்கள்தான். நம் ஆளுநரைப் பலமுறை நாங்கள் போய் பார்த்திருக்கிறோம். பேசியிருக்கிறோம். ஆனால், காரியம் ஒன்றும் நடக்கவில்லை. அவர் செய்யவில்லை யென்றாலும் பரவாயில்லை. வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க வேண்டும். ஒரு மசோதாவை மாநில அரசு இரண்டாவது முறையும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பினால், அதை எக்காரணம் கொண்டும் ஆளுநர் நிறுத்தக் கூடாது. இதுதான் சட்டம். இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிர்ப்பாக இருப்பவர்கள், ஆளுநராக மட்டுமன்றி நாட்டின் குடிமகனாக இருப்பதற்கே தகுதியற்றவர்கள். உங்களுக்கு ஒரு கட்சிக் கொள்கை இருந்தால், ராஜினாமா பண்ணிட்டு போங்கோ...” என வெடித்துத் தீர்த்துவிட்டார் துரைமுருகன்.

“விருப்ப நிதியில் விதிமீறல்கள்” - பற்றவைத்த பி.டி.ஆர்!

ஆளுநர் மாளிகையின் செலவுக் கணக்கு குறித்து நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதில்தான், ராஜ் பவனின் அஸ்திவாரத்தையே ஆட்டம்காண வைக்கும் வெடிகள் பற்றவைக்கப்பட்டன.

“ஆளுநருக்குத் தலைமைச் செயலகம், வீட்டுச் செலவு, விருப்ப நிதி ஆகிய பிரிவுகளின்கீழ் மூன்று வகையாக நிதி ஒதுக்கப்படுகிறது. அனைத்து மாநிலங்களிலும் இந்த நிதி, ஆளுநர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருப்ப நிதியை ஏழை, எளிய மக்களுக்கான மனிதநேய உதவிகளுக்குப் பயன்படுத்த வேண்டும். தமிழ்நாடு ஆளுநருக்கு இந்த விருப்ப நிதியாக ஆண்டுதோறும் 5 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த நிதியைச் செலவழிப்பதில்தான் தொடர்ந்து விதிமீறல்கள் நடைபெற்றிருக்கின்றன.

விருப்ப நிதியிலிருந்து 4 கோடி ரூபாயை `அக்‌ஷய பாத்ரா’வுக்கு வழங்கியதாகச் சொல்லி, ஆளுநரின் வீட்டுச் செலவுக்கான வங்கிக் கணக்குக்குப் பணம் மாற்றப்பட்டிருக்கிறது. இது நிச்சயமாக விதிமீறல். விருப்ப நிதியின்கீழ், தேநீர் விருந்துக்கு 30 லட்சம் ரூபாய், கலாசார விழாவுக்கு 3 லட்சம் ரூபாய் எனச் செலவிட்டிருக்கிறார்கள். இந்த விதிமீறல்களைத் தடுத்து நடவடிக்கை எடுப்போம். விதிமுறைக்கு உட்பட்டுத்தான் விருப்ப நிதி செலவிடப்பட வேண்டும் என்பதை இனி நாங்கள் உறுதிசெய்வோம்” என்றார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

“ஆளுநர் நண்பராக இல்லை!” - சீறிய ஸ்டாலின்!

முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, “இன்னும் நிதிநிலை அறிக்கை மற்றும் மானியக் கோரிக்கை தொடர்பான சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிவதற்குள், இப்படியொரு தீர்மானத்தை இரண்டாவது முறையாக நான் முன்மொழியவேண்டிய நிர்பந்தத்தை ஆளுநர் ஏற்படுத்தியிருக்கிறார். ‘ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநர் பதவியும் தேவையில்லை’ என்று பேரறிஞர் அண்ணா கூறியபோதிலும், அதை கலைஞர் வழிமொழிந்தபோதிலும், அந்தப் பதவி இருக்கும்வரை அதற்குரிய மரியாதையைக் கொடுக்க அவர்கள் தவறியதில்லை. அவர்களது வழியைப் பின்பற்றி நானும் அதிலிருந்து இம்மியளவும் விலகியதில்லை.

ஒன்றிய அரசு - மாநில அரசு உறவு பற்றி ஆராய நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற மாண்புமிகு உச்ச நீதிமன்ற நீதிபதி சர்க்காரியா தலைமையிலான கமிஷன், ‘ஆளுநர் என்பவர், பற்றற்ற அடையாளம் உள்ளவராக இருக்க வேண்டும்’ என்று பரிந்துரைத்தது. அரசியல் சட்டத்தை மறு ஆய்வு செய்ய 2000-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட நீதிபதி வெங்கடாசலய்யா அறிக்கையும் இதே கருத்தை வலியுறுத்தியது. இன்னும் சொல்லப்போனால், குடியரசுத் தலைவரைப் பதவி நீக்க ‘இம்பீச்மென்ட்’ அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு இருப்பதுபோல, ஆளுநர்களை நீக்க சட்டமன்றத்துக்கும் ‘இம்பீச்மென்ட்’ அதிகாரம் வழங்கலாமா என ஒரு கலந்தாலோசனையை அப்போது வெளியிட்டு, கருத்து கேட்கப்பட்டது.

‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், அந்த அரசு இருக்கும் மாநில மக்களுக்கும் வழிகாட்டுபவராகவும் நண்பராகவும் ஆளுநர் இருக்க வேண்டும்’ என்று எத்தனையோ உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் நமது ஆளுநர், தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் ‘நண்பராக’ இருப்பதற்குத் தயாராக இல்லை என்பதை அவர் பதவியேற்றதிலிருந்து செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் வெளிப்படுத்திவருகின்றன.

“அரசியல் சட்ட விசுவாசத்தை அரசியல் விசுவாசம் விழுங்கிவிட்டது!”

ஆளுநர் திறந்த மனதுடன் அரசுடன் விவாதிக்க வேண்டுமே தவிர, பொதுவெளியில் நிர்வாக நடவடிக்கைகளை விவாதிப்பது சரியல்ல. இந்த அரசின் கொள்கைகளை, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை, இந்தச் சட்டமன்றத்தின் இறையாண்மையை, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக நிறைவேற்றப்பட்டிருக்கும் மசோதாக்களைக் கொச்சைப்படுத்தி பொதுவெளியில் பேசுகிறார். அவர் ஆளுநர் என்ற நிலையைத் தாண்டி அரசியல்வாதியாகப் பேசுகிறார்.

ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்யும் மசோதாவை இந்த அவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய பிறகும், அதற்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார். அதற்கு மேல் சென்று, `Withhold என்றால் நிராகரிக்கப்பட்டதாகப் பொருள்’ என்று விதண்டாவாதமாகப் பேசுகிறார். சட்டத்தை உருவாக்கி நிறைவேற்றும் அதிகாரத்தை, மக்கள் பிரதிநிதிகள் அவையாக இருக்கக்கூடிய சட்டமன்றங்களுக்கு வழங்கிவிட்டு, அதற்கு ஒப்புதல் கையெழுத்து போடும் உரிமையை ஒரு நியமன ஆளுநருக்கு வழங்கியது மக்களாட்சி மாண்பு ஆகாது. அதனால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தும் முன்னெடுப்புகளை நாம் எடுக்க வேண்டும் எனக் கருதுகிறேன். ஆளுநருக்கு இருக்கவேண்டிய அரசியல் சட்ட விசுவாசத்தை, ‘அரசியல் விசுவாசம்’ அப்படியே விழுங்கிவிட்டது என்றே இந்த அவையில் பதிவுசெய்ய விரும்புகிறேன். ராஜ் பவனை, ‘அரசியல் பவனாக’ மாற்றிக்கொண்டி ருக்கிறார். வகுப்புவாத எண்ணம்கொண்ட சிலரின் ஊதுகுழலாக ஆளுநர் செயல்படுகிறார்” என விளாசி எடுத்துவிட்டார் ஸ்டாலின்.

ஸ்டாலினின் அரசியல் ரம்மி... ரிவர்ஸ் எடுத்த ராஜ்பவன்!

தி.மு.க அரசின் இந்தத் தாக்குதலை ராஜ் பவன் எதிர்பார்த்திருக்கவில்லை. ‘தனித் தீர்மானம் கொண்டுவரப்போகிறார்கள்’ என மத்திய உளவுத்துறை தகவல் அளித்திருந்த நிலையிலும், ராஜ் பவன் செலவு கணக்கையெல்லாம் தோண்டி எடுப்பார்களென ஆளுநர் மாளிகை கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை என்கிறார்கள் ஆளுநருக்கு நெருக்கமான சில அதிகாரிகள். நம்மிடம் பேசியவர்கள், “பிரதமரிடம் ஆளுநர் குறித்து முதல்வர் பேசியதிலிருந்தே, சட்டரீதியாகச் சில முன்னெடுப்புகளை ஆளுநருக்கு எதிராக தி.மு.க மேற்கொள்ளப்போவதை டெல்லி உணர்ந்துவிட்டது. தவிர, ராஜ் பவனின் கணக்கு வழக்குகளையெல்லாம் தோண்டியெடுத்து வெளியிட்டால், பெரிய சர்ச்சையாகிவிடும். தேர்தல் நேரத்தில் இது சிக்கலை வரவழைக்கும் என்பதால், ஆளுநர் ரவியை அமைதியாகப் போகச் சொல்லிவிட்டது டெல்லி. அதனால், தனது நிலைப்பாட்டில் ரிவர்ஸ் எடுத்து அவரும் ஒப்புதல் வழங்கிவிட்டார்” என்றனர்.

‘மரபுகளை மதிக்கிறவர்கள் நாங்கள். எங்களுக்குத் தேவையானதை ராஜதந்திரத்துடன் நிறைவேற்றிக்கொள்ளத் தெரியும்’ என்று தி.மு.க-வினர் சொல்வதற்கிணங்க, “சிரிக்கிற இடத்தில் சிரித்து, புரோட்டோகால்படி மதிக்க வேண்டிய இடத்தில் மதித்து, வெடிக்கவேண்டிய இடத்தில் வெடித்து... என ஒரு புதிய ஆட்டத்தை ஆடியிருக்கிறார் ஸ்டாலின். பிரதமரின் கையைத் தட்டிக்கொடுத்து, அவர் கையாலேயே ஆளுநருக்குக் கொட்டுவைத்து ஸ்டாலின் ஆடியது சுவாரஸ்யமான அரசியல் ரம்மிதான்” என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள். இன்று அரசியல் ஆட்டத்தில், ஸ்டாலின் ஜெயித்திருக்கிறார். டெல்லியும் ஆளுநரும் இறங்கி வந்திருக்கிறார்கள். ஆனால், `நீட்’ உள்ளிட்ட இன்னும் பல மசோதாக்கள் நிலுவையில் இருக்கின்றன; நாடாளுமன்றத் தேர்தல் இருக்கிறது... மத்திய அரசு Vs மாநில அரசு, ஆளுநர் Vs முதல்வர் மோதல்கள் நாளையே வேறு வடிவில் தொடங்கலாம்.

இந்த அரசியல் ரம்மியில் இன்னும் பல ரவுண்டுகள் இருக்கின்றன!

இவர்கள் என்ன சொல்கிறார்கள்?

“பொதுவாக ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் Legal Immunity உண்டு. ஆனால், பதவிப் பிரமாணம் எடுத்த உறுதிமொழியை மீறும்போது அந்த Legal Immunity செல்லுபடியாகாது. ஒருவேளை இதன் அடிப்படையில் தி.மு.க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால், அது மத்திய அரசுக்கு ஓர் இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தும். இதையறிந்து பிரதமர் அலுவலகமும், உள்துறை அமைச்சகமும் அரசியல் ஆலோசனைகள் வழங்கியிருக்கலாம். இத்தகைய அரசியல் விவகாரங்களுக்கு பயந்துதான் ஆளுநர், ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கும் முடிவை எடுத்திருக்கிறார்.” - தராசு ஷ்யாம், மூத்த பத்திரிகையாளர்.

தராசு ஷ்யாம், எஸ்.ஆர்.சேகர், எஸ்.எஸ்.சிவசங்கர்
தராசு ஷ்யாம், எஸ்.ஆர்.சேகர், எஸ்.எஸ்.சிவசங்கர்

“ஆளுநர் கடந்த முறை நிராகரித்ததற்கும், இந்த முறை ஒப்புதல் அளித்ததற்கும் சட்டரீதியான விவகாரங்கள் மட்டுமே காரணம். இந்த ஒப்புதலை அரசியல்ரீதியானதாக எடுத்துக்கொண்டு, `ஆளுநர் பயந்துவிட்டார், பணிந்துவிட்டார்’ என்று தி.மு.க கூறுவது ஏற்புடையது இல்லை. ஆளுநரையும் பா.ஜ.க-வையும் வில்லனாக்க தி.மு.க தொடர்ச்சியாக முயன்றுவருகிறது. ஆளுநர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து வெள்ளையறிக்கை வெளியிட தி.மு.க தயாரா?” - எஸ்.ஆர்.சேகர், மாநிலப் பொருளாளர், பா.ஜ.க.

“ஒட்டுமொத்த மக்களின் கருத்தைச் சட்டமன்றம் பிரதிபலித்தது. அதை, இப்போது ஆளுநர் ஏற்றுக்கொண்டிருப்பதை மக்கள் கருத்துக்கு அவர் தலை வணங்கியிருப்பதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை இந்தச் சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் ரம்மி சார்ந்த நிறுவனங்கள் நீதிமன்றத்துக்குப் போனாலும்கூட, எந்தவொரு சட்ட பாதிப்பும் ஏற்படாத வகையில் ஆலோசித்துத்தான் சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது!” - எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத்துறை அமைச்சர்.