குழந்தைத் திருமணம்... சர்ச்சையை ஏற்படுத்திய ஆளுநரின் பேச்சு... மாணவர்களைத் தவறாக வழிநடத்தாதா?

மாநில அரசாங்கம் பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பல திட்டங்களைச் செய்துவருகிறது. புதுமைப்பெண் திட்டம் போன்ற திட்டங்களால் உயர்கல்வியைத் தொடரும் பெண்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த முயல்கிறது அரசு.
சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், `ஒரே பாரதம்... உன்னத பாரதம்' திட்டத்தின்கீழ் நடந்த கலாசாரப் பரிமாற்ற நிகழ்வுகளின் ஒரு பகுதியாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மாணவர்களிடம் சமீபத்தில் கலந்துரையாடினார்.
அதில், ``நான் குழந்தைத் திருமணம் செய்துகொண்டேன், என் மனைவி, கல்லூரிக்குச் செல்லவில்லை. ஆனால் எனக்குப் பக்கபலமாக இருந்தார்” என்றெல்லாம் பேசியுள்ளார். இதற்கு, அரசியல் பிரமுகர்களும் சமூகச் செயற்பாட்டாளர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் பேசியது குறித்து, அரசியல்கட்சிப் பிரதிநிதிகள் இங்கே பேசுகிறார்கள்...

மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி (தி.மு.க): ``மாநில அரசாங்கம் பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பல திட்டங்களைச் செய்துவருகிறது. புதுமைப்பெண் திட்டம் போன்ற திட்டங்களால் உயர்கல்வியைத் தொடரும் பெண்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த முயல்கிறது அரசு. இந்நிலையில், தான் குழந்தைத் திருமணம் செய்துகொண்டது நியாயம் என்பதுபோல் பேசியுள்ளார் ஆளுநர். இதை சனாதனத்தின் வெளிப்பாடாகவே பார்க்கமுடியும். ஆங்கிலேயர் காலத்திலேயே குழந்தைத் திருமணத் தடை விதிக்கப்பட்டது. அதற்குப் பிறகுதான் ஆளுநருக்குத் திருமணம் நடந்திருக்க வேண்டும். அந்த வகையில் இது சட்டப்படி தவறு. ஆனால், அதை நியாயப்படுத்தும் விதமாக அவர் பேச்சு இருக்கிறது. இன்றும் கிராமங்களில் பெண்களைப் படிக்க அனுப்பாமல் திருமணம் செய்துவைக்கும் குடும்பங்கள் இருக்கின்றன. பெண்களின் எதிர்கால வாழ்க்கைக்கு ஊறுவிளைவிப்பதாக இருக்கிறது ஆளுநரின் பேச்சு.”

அனைத்திந்திய மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கலைச்செல்வி (சி.பி.எம்): ``நவீன காலத்தில் பழைமை வாதத்தைத் தூக்கிப்பிடிக்கிறார் ஆளுநர். அரசால் தடை செய்யப்பட்டதை நியாயப்படுத்திப் பேசுவது குற்றமாகும். ஆளுநர்மீது வழக்குகூட தொடுக்கலாம்.''
சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி (காங்கிரஸ்): ``ஆளுநர், தனக்குக் குழந்தைத் திருமணம் நடந்ததாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். அதைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்.”
பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினரும் பேராசிரியருமான ராஜலஷ்மி: ``குழந்தைத் திருமணம் என்பது சட்டப்படி தவறு. உடலளவிலும் மனதளவிலும் திருமண வாழ்க்கைக்குத் தயாராகாதவர்களுக்குத் திருமணம் செய்துவைப்பது என்பது மிகப்பெரிய தவறு. ஒரு பெண்ணாக எனக்கு இதில் உடன்பாடில்லை. ஆளுநர் சொந்த அனுபவத்தைத்தான் வெளிப்படுத்துகிறார். அவர் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. அவரது கருத்து என்பது அவர் பிறந்து வளர்ந்து வந்த சூழ்நிலையின் வெளிப்பாடாகவே இருக்க முடியும்.''

குழந்தைத் திருமணங்களில் ஏராளமான கொடூர சம்பவங்கள் அன்றைய காலங்களில் நடந்தேறின. உச்சக்கட்ட மனித உரிமை மீறலான குழந்தைத் திருமணத்தை ஆங்கிலேய அரசு தடைசெய்தது. ஆனால், இன்றும்கூட குழந்தைத் திருமணங்கள் நடக்கத்தான் செய்கின்றன. இந்நிலையில், குழந்தைத் திருமணம் செய்துகொண்டதாக மட்டும் மாணவர்களிடம் பேசிய ஆளுநர், அதன் கொடூரங்களையும் சேர்த்துப் பேசியிருக்கவேண்டும். அப்படிச் செய்திருந்தால், அவர் என்ன நினைத்து மாணவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறாரோ அது நிறைவேறியிருக்கும். ஆனால், அதில் தனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்பதுபோலப் பேசியிருப்பது மாணவர்களிடம் தவறான உதாரணமாகப் பதியும் ஆபத்திருக்கிறது!