அலசல்
Published:Updated:

டெல்லி டென்ஷன்... போயஸ் கார்டன் சந்திப்பு... சர்ச்சை உரை... ‘தமிழ்நா(ட்)டு’க்கு எதிரான ஆளுநர்!

ஆர்.என்.ரவி
பிரீமியம் ஸ்டோரி
News
ஆர்.என்.ரவி

தன் உரையில், ‘கோவிட் பெருந்தொற்றின் இரண்டாவது, மூன்றாவது அலைகளை வெற்றிகரமாக எதிர்கொண்ட இந்த அரசு’ என்றிருந்ததை, மத்திய அரசுக்கும் புகழ் சேர்க்கும் விதமாக மாற்றிப் பேசினார் ஆளுநர் ரவி.

ஆளுநர்களுக்கும், தமிழ்நாட்டு முதலமைச்சர்களுக்கும் இடையிலான உரசல்கள், வார்த்தைப்போர்கள், ஈகோ யுத்தங்கள் புதிது அல்ல. ஆனால், ஒரு மாநிலம் தனக்கு அதிகாரபூர்வமாகச் சூட்டிக்கொண்ட பெயர்மீதே விமர்சனம் வைப்பது, அதை மாற்றி உச்சரிப்பது, அதை உச்சரிக்க மறுப்பது என்பது வரை சென்ற ஆளுநர் யாரும் இல்லை. அந்த வகையில், “ஆர்.என்.ரவி `தமிழ்நாடு’ என்கிற பெயருக்கு மட்டுமல்ல, பெரும்பான்மையான விஷயங்களில் தமிழ்நாட்டுக்கே எதிரானவராகச் செயல்படுகிறார்” என்று கொதிக்கிறார்கள் தி.மு.க-வினர்!

ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கப்படுவது வழக்கம். அந்த உரையை மாநில அரசு தயாரித்து வழங்குவதும், அதை ஆளுநர் வாசிப்பதும் மரபானது. அந்த மரபை உடைத்து, தன் இஷ்டத்துக்குச் சில வாக்கியங்களைச் சேர்த்தும், சில வார்த்தைகளைப் பெயர்களை நீக்கியும் உரையை வாசித்து சர்ச்சை வெடியைக் கொளுத்திப்போட்டிருக்கிறார் ஆளுநர் ரவி. தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளெல்லாம் ஆளுநரின் இந்தச் செயலுக்குக் கடும் கண்டனத்தைப் பதிவுசெய்திருக்கின்றன. ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தை அறிவித்திருக்கிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

ஓர் ஆளுநர், சபை முடியும் முன்பே, பாதியிலேயே வெளியேறியது தமிழ்நாட்டில் இதுவே முதன்முறை. போலவே, ‘‘மாநில அரசு தயாரித்த உரையில் இடம்பெறாத ஆளுநரின் சொந்தச் சொற்கள் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படும்” என அதிரடியாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் இதுவே முதன்முறை. ஆளுநர் - அரசின் முட்டல் மோதல்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே தொடரும் கதைதான் என்றாலும், ஏன் இந்த திடீர் `பரபர’ காட்சிகள் என்று விசாரணையில் இறங்கினோம்...

டெல்லி டென்ஷன்... போயஸ் கார்டன் சந்திப்பு... சர்ச்சை உரை...  ‘தமிழ்நா(ட்)டு’க்கு எதிரான ஆளுநர்!

ஆளுநர் ‘என்ட்ரி’... மாறிய உரை... சூடான சட்டமன்றம்!

ஜனவரி 9-ம் தேதி, ஆர்.என்.ரவி சட்டமன்றத்துக்கு வந்தபோது, செயின்ட் ஜார்ஜ் கோட்டையே தகிப்பில்தான் இருந்தது. சட்டமன்றத்தில் ஆளுநருக்கு எதிராகக் கோஷம் எழுப்பவிருக்கிறார்கள் என்கிற விஷயம் மத்திய உளவுத்துறை மூலம் பவனுக்குச் சொல்லப்பட்டு விட்டது. அதுபோலவே உரையில் சில திருத்தங்களை ஆளுநர் மேற்கொள்ளப்போகிறார் என்கிற தகவல் கோட்டைக்கும் சென்றுவிட்டது. சொல்லிவைத்தாற்போல, உரையை ஆளுநர் ரவி வாசிக்கத் தொடங்கியதும், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட தி.மு.க கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ-க்கள் அவையின் மையத்துக்கு வந்து ஆளுநருக்கு எதிராகக் கோஷமிட்டனர். அவர்களின் சத்தத்தை மீறிப் பேசவே தடுமாறினார் ஆளுநர். சற்று நேரத்தில், கோஷமிட்டபடி அவர்கள் ஆளுநரைக் கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.

தன் உரையில், ‘கோவிட் பெருந்தொற்றின் இரண்டாவது, மூன்றாவது அலைகளை வெற்றிகரமாக எதிர்கொண்ட இந்த அரசு’ என்றிருந்ததை, மத்திய அரசுக்கும் புகழ் சேர்க்கும் விதமாக மாற்றிப் பேசினார் ஆளுநர் ரவி. அப்போதே, அவையில் சலசலப்பு எழுந்தது. தமிழ்நாட்டின் பொருளாதாரச் சீர்திருத்தங்கள், பன்னாட்டு முதலீடுகள், சட்டம் - ஒழுங்கு தொடர்பான விஷயங்கள் உரையில் இடம்பெற்றிருந்தும், அவற்றை ஆளுநர் பேசவே இல்லை. கையிலிருந்த உரையின் பிரின்ட்அவுட்டையும், ஆளுநரின் பேச்சையும் மாறி மாறிப் பார்த்து டென்ஷனாகிக் கொண்டிருந்தார்கள் தி.மு.க-வினர்.

‘அம்பேத்கர், பெரியார், காமராஜர்...’ - புறக்கணித்த ஆளுநர்... டென்ஷனான முதல்வர்!

குறிப்பாக, “சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மத நல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகள், இவ்வரசின் அடித்தளமாக அமைந்துள்ளன. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி, பார் போற்றும் திராவிட மாடல் ஆட்சியை இந்த அரசு வழங்கிவருகிறது” என்று உரையில் இருந்த வரிகளை அப்படியே தாண்டிச் சென்றார் ஆளுநர். முதல்வர் அக்னிப் பார்வையுடன் ஆளுநரைப் பார்க்கவும், ஆளுநர் அருகில் அமர்ந்திருந்த சபாநாயகர் அப்பாவு-க்கு என்ன செய்வதெனப் புரியவில்லை.

சீனியர் அமைச்சர்கள் நேரு, துரைமுருகன் ஆகியோர் முதல்வரிடம் சென்று, ‘இரண்டு பத்தியையே படிக்காமல் விட்டுவிட்டார் ஆளுநர்’ என்றனர். எ.வ.வேலு, திண்டுக்கல் ஐ.பெரியசாமி, சேகர் பாபு, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், உதயநிதி ஸ்டாலின் என அமைச்சர்கள் பலரும் தங்களுக்குள் காரசாரமாகப் பேசிக்கொள்ள, அவையில் பலத்த சலசலப்பு எழுந்தது. ‘பெரியார், அண்ணா பெயரையெல்லாம் சொல்ல மாட்டாரா இவரு?’ என ஆளுநர் காதுபடவே காரத்தைக் கொட்டினார் பொன்முடி. அதற்குள் தன் உரையை வாசித்து முடித்திருந்தார் ஆளுநர். அடுத்ததாக, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அந்த உரை, தமிழ்நாடு அரசு அச்சடித்த முழு உரையாக இருந்தது.

டெல்லி டென்ஷன்... போயஸ் கார்டன் சந்திப்பு... சர்ச்சை உரை...  ‘தமிழ்நா(ட்)டு’க்கு எதிரான ஆளுநர்!

தேசியகீதம் புறக்கணிப்பு... மரபு மீறிய ஆளுநர்!

சபாநாயகர் வாசித்தவுடன், சபை நடவடிக்கைகள் முடிக்கப்பட்டு, தேசியகீதம் இசைக்கப்படுவதுதான் வழக்கம். ஆனால், திடீரென எழுந்த முதல்வர் ஸ்டாலின், “தமிழ்நாடு அரசு தயாரித்து, ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, அச்சிடப்பட்ட உரையை முறையாக, முழுமையாக ஆளுநர் படிக்காதது வருத்தமளிக்கிறது. இது சட்டமன்ற மரபுகளை மீறிய செயல். சட்டப்பேரவை விதி 17-ஐ தளர்த்தி, ஆளுநர் இணைத்து, விடுத்து படித்த பகுதிகள் அவைக்குறிப்பில் இடம்பெறாது. சபாநாயகர் படித்த தமிழ் உரை மட்டும் அவைக்குறிப்பில் இடம்பெறும். அதற்கான தீர்மானத்தை முன்மொழிகிறேன்” என்றார். அவர் பேசி முடிப்பதற்குள்ளாகவே, விருட்டென எழுந்து சபையிலிருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி. இதை யாரும் எதிர்பார்க்கவேயில்லை.

வழக்கமாக, வாசல் வரை சென்று, சபாநாயகர், முதல்வர், அமைச்சர்கள் ஆளுநரை வழியனுப்பி வைப்பார்கள். ஆனால், தேசியகீதம் இசைக்கப்படுவதற்கு முன்பாகவே மரபை மீறி ஆளுநர் அவையிலிருந்து வெளியேறியதால், அவரை வழியனுப்பவும் யாரும் செல்லவில்லை. ஆளுநர் வெளியேறியபோது, பெரும்பாலான அமைச்சர்கள் எழக்கூட இல்லை. அமைச்சர் பொன்முடி, ‘போ... போ...’ எனச் சைகையால் ஆளுநருடன் வந்தவர்களை வெளியேறச் சொன்னார். முதல்வர் பேச ஆரம்பித்தபோதே, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னாலேயே, பன்னீரும் அவர் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மூன்று பேரும் சபையிலிருந்து வெளியேறினர். அதன் பிறகு சபை நடவடிக்கைகள் வழக்கம்போலவே முடிவுற்றன. ஆனால், கோட்டைக்கு வெளியே பரபரப்பு பற்றிக்கொண்டது.

பா.ஜ.க தேசிய மகளிரணிச் செயலாளரும் எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசனிடம் ஆளுநரின் இந்த நடவடிக்கைகள் குறித்துக் கேட்டோம். “சட்டப்பேரவையில் தனது கூட்டணிக் கட்சிகளைத் தூண்டிவிட்டு, எதுவுமே தெரியாததுபோல உட்கார்ந்துகொண்டு தி.மு.க அரசு கேவலமான ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறது. மாநில அரசு எழுதிக்கொடுப்பதை ஆளுநர் வாசிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், ஆளுநரைத் தங்களின் புகழ்பாடக்கூடியவராகப் பயன்படுத்த நினைப்பதை எப்படி அவர் அனுமதிப்பார்... ஆளுநர் தங்களின் சித்தாந்தத்துக்கு எதிராகப் பேசுகிறார் என்பதற்காகவே அவரை அழைத்து அவமானப்படுத்திவிட்டார்கள். சில பெயர்களை, சில வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லையென்றால் முறைப்படி அதற்கு விளக்கம் கேட்டிருக்க வேண்டும். ஆனால், அதற்காக ஆளுநரை அவமானப்படுத்துவதுபோல நடந்துகொள்வதை ஏற்க முடியாது” என்றார் சூடாக.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

தமிழ்நா(ட்)டுக்கு எதிரான ஆளுநர்!

சபாநாயகர் அப்பாவுவிடம் பேசினோம். “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 175, 176-ன் படி சட்டப்பேரவையில் உரையாற்ற ஆளுநருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு அதிகாரம் வழங்கிய அம்பேத்கரின் பெயரையே அவர் உச்சரிக்கவில்லை என்பது வேதனையின் உச்சம். அவையில் ஆளுநர் வாசிக்கவேண்டிய உரையை நாங்கள் ஜனவரி 5-ம் தேதியே அனுப்பிவிட்டோம். அதை ஏற்றுக்கொண்டதாக ஜனவரி 7-ம் தேதி எங்களுக்கு ராஜ் பவனிலிருந்து கடிதம் வந்தது. ஆளுநர் உரையில் ஏதேனும் திருத்தமோ, மாற்றமோ செய்ய வேண்டுமென்றிருந்தால், அப்போதே அவர் அதைச் சொல்லியிருக்கலாம். ஆனால், ஒப்புதல் அளித்துவிட்டு, அதை அவையில் பேசாமல் இருப்பது முறையாகாது. குறிப்பாக, உரையில் இல்லாத சிலவற்றையும் ஆளுநர் பேசியிருக்கிறார். இது சட்டமன்ற விதி மீறலாகும். தேசியகீதத்துக்குக்கூட மரியாதை செய்யாமல் அவர் வெளிநடப்பு செய்தது, உண்மையிலேயே எனக்கு மிகப்பெரிய வருத்தம். அவர் வெளிநடப்பு செய்தாலும், திட்டமிட்டபடி சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும்” என்றார்.

“சபை மரபை மீறினார் முதல்வர்!”

ராஜ் பவன் வட்டாரங்களில் பேசினோம். “முதல்வர் தன் உரையில் பேச வேண்டியதையெல்லாம், ஆளுநர் உரையில் கொடுத்து பேசவைக்க முடியாது. சட்டம் - ஒழுங்குப் பிரச்னைகள் குவிந்துகிடக்கின்றன. இந்த நிலையில் தமிழ்நாடு அமைதியின் சொர்க்கமாக இருக்கிறது என்றால் எப்படி... இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்ட மீனவர்கள், மாநில அரசின் முயற்சியால் மட்டுமே விடுவிக்கப்பட்டிருப்பதாக இருக்கும் வரிகளை எப்படி ஏற்க முடியும்... கடந்த ஒன்றரை ஆண்டுகளில், மகாராஷ்டிரா 28 பில்லியன் டாலர், கர்நாடகா 25 பில்லியன் டாலர் முதலீடுகளை ஈர்த்திருக்கின்றன. இந்தச் சூழலில், 2.5 பில்லியன் டாலர் முதலீடுகளை மட்டுமே ஈர்த்த தமிழக அரசை எப்படிப் பெருமையாகப் பேச முடியும்... ஆளுநர் பேசும்போது எதிர்த்து கோஷமிட்ட சபை உறுப்பினர்களை சபாநாயகர் கட்டுப்படுத்தவே இல்லை. ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசித்த பிறகு, தேசியகீதம் இசைக்கப்பட வேண்டும். அமர்வு அத்துடன் ஒத்திவைக்கப்பட வேண்டும். ஆனால், சபை மரபை மீறி, ஆளுநருக்கு எதிராக முதல்வர் தீர்மானம் கொண்டுவந்தார். இதை எப்படி ஏற்பது?” என்றனர்.

அப்பாவு
அப்பாவு

“ஆளுநர் செய்தது முற்றிலும் தவறு!”

“ஆளுநருக்கென்று தனித்த அதிகாரம் இருக்கலாம். கருத்துகள் இருக்கலாம். ஆனால், ஒரு மாநிலத்தின் பெயரையே விமர்சிப்பதற்கு அவருக்கு யார் உரிமை கொடுத்தது... அதிலென்ன அறம் இருக்கிறது... இந்தியச் சுதந்திரப் போராட்டம் முதல் இன்றைய இந்திய ஜனநாயக அரசியல் கட்டமைப்பை உருவாக்கியது வரையிலான பணிகளில் வியர்வை சிந்திய தலைவர்களான அம்பேத்கர், பெரியார், காமராஜர், அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோரின் பெயர்களை உச்சரிக்காமல் தவிர்த்ததை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு குறித்து அரசு எழுதிக் கொடுத்ததை வாசிக்காமல் ஆளுநர் கடந்துபோனது மரபல்ல. எந்த பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் சட்டம் - ஒழுங்குப் பிரச்னை இல்லை... அங்கெல்லாம் ஆளுநர்கள் இப்படித்தான் விமர்சித்து எடிட் செய்து வாசிக்கிறார்களா... மாநில அரசின் சாதனைகளாகச் சொல்லப்படும் இடங்களிலெல்லாம் மத்திய அரசின் பெயரைப் புகழ்பாடுவது மட்டும் ஆளுநருக்கு இனிக்கிறதா... சட்டப்பேரவையின் மாண்புக்குப் பொறுப்பானவரே அதை அவமதிப்பதை எப்படி நியாயப்படுத்த முடியும்... ஆளுநர் முற்றிலும் தவறாக நடந்துகொண்டிருக்கிறார்” என்று கொதிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

இதுவரை பனிப்போராக இருந்த ஆளுநர்

- ஆளுங்கட்சி மோதல், நேரடியாகக் களத்துக்கு வந்திருக்கிறது. ஆளுநரின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் முடிவில் இருக்கிறது அறிவாலயம். அதேநேரத்தில், தனது உரையின் சில பகுதிகளைச் சட்டமன்றம் நீக்கியிருப்பதால், அதை முன்வைத்து சட்டரீதியாக தி.மு.க அரசுக்குக் குடைச்சல் கொடுக்கும் வேலையில் இறங்கியிருக்கிறாராம் ஆளுநர். இனி, தமிழ்நாட்டிலும் கேரள, மேற்கு வங்க, தெலங்கானா பாணி அதிரடிக் காட்சிகள் அரங்கேறலாம்!

டெல்லி டென்ஷன்... போயஸ் கார்டன் சந்திப்பு!

இவ்வளவு களேபரங்கள் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க, அதன் பின்னணியே வேறு என்கிறார்கள் விவரமறிந்த கமலாலய சீனியர்கள்...

நம்மிடம் பேசியவர்கள், “தொடர்ச்சியாக ஆடியோ, வீடியோ, வாட்ச், பத்திரிகையாளர்களுடன் மோதல் என தமிழக பா.ஜ.க சர்ச்சையில் சிக்கி விழிக்கும் செய்தியால் செம டென்ஷனானது டெல்லி. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமனம், மண்டல் நிர்வாகிகள் கூட்டம் என உருப்படியான எதிலும் அண்ணாமலை ஆர்வம் காட்டவில்லை. தமிழக பா.ஜ.க மீதான விமர்சனங்களை மடைமாற்ற டெல்லி ஆலோசனைப்படி ‘தமிழகம் - தமிழ்நாடு’ விவகாரத்தைக் கையிலெடுத்தார் ஆளுநர். டெல்லி எதிர்பார்த்தபடியே விவகாரம் ரூட் மாறியது. இதன் அடுத்தகட்டமாக, ஒரு புதிய திட்டம் தீட்டப்பட்டது. அதற்காக, சென்னை போயஸ் கார்டனிலுள்ள ஒரு முக்கிய நபரின் இல்லத்தில் ஆளுநர் ரவி, அண்ணாமலை, மயிலாப்பூர் பிரமுகர், டெல்லியைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஆகியோர் சந்தித்தனர். டெல்லியிலிருந்து வீடியோ கான்ஃபரன்ஸ் வழியாக, இரண்டு பா.ஜ.க சீனியர்களும் சந்திப்பில் கலந்துகொண்டனர். மயிலாப்பூர் பிரமுகருக்கும், அண்ணாமலைக்கும் இடையேயான பனிப்போரை முடித்துவைத்து சமாதானம் ஏற்படுத்துவது குறித்தும் இந்தச் சந்திப்பில் பேசப்பட்டது. தமிழக பா.ஜ.க-வின் வளர்ச்சி குறித்து சில வியூகங்களும் வகுக்கப்பட்டன. மேலும், தி.மு.க அரசின் மீதான முக்கிய விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் அலசப்பட்டன. தி.மு.க அரசின் நிதித் திண்டாட்டம், சட்டம் - ஒழுங்குப் பிரச்னை, ஊழல் குற்றச்சாட்டுகள், திராவிட மாடல் தொடர்பான விவகாரங்களைக் கையிலெடுப்பதெனப் பேசப்பட்டது. சட்டமன்றத்தில் நடந்து முடிந்திருக்கும் களேபரங்களின் பின்னணியில், போயஸ் கார்டன் சந்திப்பின் திட்டமிடல்களுக்கும் பங்கிருக்கிறது. இது ஆரம்பம்தான்” என்றனர் விரிவாக.

****

இவர்கள் என்ன சொல்கிறார்கள்?

“ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்டுச் செயல்படுகிறார் ஆளுநர் ரவி. பா.ஜ.க ஆளாத மாநிலங்களில்தான், ஆளுநர்கள் இந்த வேலையைப் பார்க்கிறார்கள். டெல்லியின் ஆட்களாக உளவு பார்ப்பது, குழப்பங்களை ஏற்படுத்துவது என அமைதியைச் சீர்குலைக்க முயல்கிறார்கள். பா.ஜ.க திட்டமிட்டு இதைச் செய்கிறது. இங்கே வந்து ‘தமிழகம்’ என்று சர்ச்சையாகப் பேசுவதெல்லாம் சேட்டைதானே... அதிகார அத்துமீறலில் ஈடுபடும் இவருக்கு 180 ஏக்கரில் வீடு, சம்பளத்துக்குப் பணியாட்களெல்லாம் எதற்கு... `ஆளுநர் உரையில் தன் விருப்பப்படி அவர் பேசலாம்’ என்கிறார்கள். `அது மரபு’ என்கிறார்கள். பார்க்கச் சகிக்காத அந்த மரபைக் காறித்தான் துப்ப வேண்டும்!” - சீமான், ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி

“ஆளுநர், அரசியலமைப்பு உட்பட எல்லாச் சட்டவிதிகளையும் மீறியிருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது. மாநில அரசு எழுதிக்கொடுக்கும் உரையில், கூடுதல் பாயின்ட்டைச் சேர்க்கவோ, நீக்கவோ அவருக்கு உரிமையே இல்லை. இது மரபு கிடையாது. இதுதான் சட்டம். ஆளுநருக்கு எதிராக கோஷமிட, எங்களை யாரும் தூண்டவில்லை. தமிழ்நாட்டின் உரிமைக்காகச் சட்டமன்றத்தில் குரல் கொடுத்தோம்.” - கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், சி.பி.எம்

டெல்லி டென்ஷன்... போயஸ் கார்டன் சந்திப்பு... சர்ச்சை உரை...  ‘தமிழ்நா(ட்)டு’க்கு எதிரான ஆளுநர்!

“எங்களின் முன்னோடிகளான பெரியார், அண்ணா பெயரை ஆளுநர் தவிர்த்ததை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. எங்களின் உயிரான அண்ணா கொண்டுவந்த ‘தமிழ்நாடு’ என்ற பெயரை மாற்ற வேண்டும் என ஆளுநர் ரவி பேசியதை ஒருபோதும் ஏற்க முடியாது. அதேபோல சட்டப்பேரவையில் மாநில அரசு எழுதிக்கொடுத்ததை மாற்றிப் பேசியதையும் ஏற்க முடியாது. ஆனால், சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் ஆளுநர் நடந்துகொண்டது சரிதான். அதேபோல `திராவிடம்’ என்ற சொல்லுக்கு இழுக்கு ஏற்படும் வகையில் தி.மு.க அரசு நடந்துகொள்ளும்போது, இந்த ஆட்சியை எப்படி, `திராவிட மாடல் ஆட்சி’ என அவர் சொல்லுவார்?” - ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க

“ஆளுநர் ரவி ஆர்.எஸ்.எஸ் ஆளாக நடக்கிறாரே தவிர, அரசியலமைப்பின்படி நடந்துகொள்ளவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் எழுதிக்கொடுத்ததை மரபை மீறி ஆளுநர் மாற்றிப் பேசியிருக்கிறார். ஆனாலும், அவர் பேசி முடிக்கும் வரை முதலமைச்சர் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. பின், ஆளுநரின் தவறைச் சுட்டிக்காட்டி தேசவிரோதமாக அவர் நடந்துகொண்டது அவைக்குறிப்பில் ஏறிவிடாமல் இருக்க, முதல்வர் உடனடியாகத் தீர்மானம் கொண்டுவந்தார். இதில் தேசத்தின் மானமும் மரியாதையும் காப்பாற்றப்பட்டிருக்கின்றன. தவிர, முதல்வர் மரபை மீறவில்லை. ஒற்றை ஓட்டுக்கூட வாங்காத ஆளுநர் ரவி, ஏழு கோடி மக்களுக்கும் எதிராக இருக்கிறார். ஆளுநர் பதவியை ரத்துசெய்வதும், ஒன்றிய அரசு ரவியைத் திரும்பப் பெறுவதும்தான் இதற்குத் தீர்வு!” - இராஜீவ் காந்தி, மாணவரணித் தலைவர், தி.மு.க