தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்ற பிறகு சர்ச்சைப் பேச்சுகளுக்குப் பஞ்சம் இருந்ததே இல்லை, செல்லுமிடமெங்கும் மாநில சுயாட்சிக்கு எதிரான கருத்துகளையும் அடிப்படை உண்மையற்ற கருத்துகளையும் பேசியதாக ஆளும் தரப்பு உட்பட பெரும்பாலான அரசியல் கட்சிகள் கடும் விமர்சனத்தை முன்வைத்துவருகின்றன. ஆளுநர் பதவியில் இருப்பவர்கள் இதற்கு முன் இப்படியான தொடர் நிகழ்வுகளில் பங்கேற்றதில்லை எனவும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பொது நிகழ்ச்சிகள், மாணவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் என எதையும் விட்டுவைப்பதில்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஆளுநர் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும், சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடுவதுமாக இருப்பதன் பின்னணி குறித்து அலசினோம்.
நம்முடன் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், ``சர்ச்சைக்குரிய கருத்துகளை முன்வைத்து செய்திகளில் தினசரி வரும்படி பேசிவருகிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. முன்பெல்லாம் ஆளுநர்கள் சுதந்திரம் தினம், குடியரசு தின நிகழ்வுகளிலும், பள்ளிக் கல்லூரிகளிலும், பட்டமளிப்பு விழாக்களிலும் கலந்துகொள்வார்கள். பொதுவாக ஆளுநர்களின் பேச்சு நாட்டின் எதிர்காலம் குறித்தும், நாட்டின் வளர்ச்சி குறித்தும், கல்வி கற்பதன் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தும் வகையில் இருக்கும். ஆனால், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சு வேறுமாதிரியாக இருக்கிறது.

ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டங்களுக்குச் சென்று பேசவில்லை, தாமாகக் கூட்டத்தைக் கூட்டிப் பேசுகிறார் என்பது கவனிக்கத்தக்கது. கூட்டத்தைக் கூட்டுவதற்கே ஒரு குழுவை வைத்திருப்பதாகவும் தெரிகிறது. ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள், மாணவர்கள், தொழிலதிபர்களை ஆளுநர் தனது மாளிகைக்கு அழைத்துப் பேசுகிறார். இது அவருக்குத் தேவையற்ற விவகாரம். அவரொன்றும் அரசியல்வாதி இல்லையே. தான் நடத்தும் கூட்டமாக இருக்கட்டும் அல்லது பங்கேற்கும் கூட்டமாகட்டும், எங்கு சென்றாலும் மாநில அரசை விமர்சிப்பது, மாநில அரசுக்கு எதிர் நிலைப்பாட்டிலுள்ள திட்டங்கள் குறித்துப் பேசுவதையே வாடிக்கையாகக்கொண்டிருக்கிறார்.
தமிழகத்தில் பா.ஜ.க-வுக்கு நேர் எதிரான கொள்கைகொண்ட அரசாங்கம் செயல்படுகிறது. ஆகவே, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைச் செயல்படவிடாமல் தடுப்பதே ஆளுநர் ஆர்.என்.ரவியின் நோக்கம். அதை நிரூபிக்கும் விதமாக அவரது பேச்சுகள் இருக்கின்றன.
தி.மு.க அரசின்மீது மக்கள் நம்பிக்கை இழக்கவே இவ்வாறு பேசிவருகிறார். ஆனால், இவரது பேச்சுகள் அனைத்தும் பா.ஜ.க-வுக்கே பாதகம் ஏற்படுத்தும் விதமாக அமையப்போகின்றன. ஆளுநர் இவ்வாறாகப் பேசி மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி வருவதை மக்கள் விரும்பவில்லை.

ஆளுநரின் செயல்பாடுகளுக்குப் பின்னால் பா.ஜ.க இருக்கிறது என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். சர்ச்சைகளைக் கிளப்பவே ஆளுநர் ஆர்.என்.ரவியை அனுப்பியிருக்கிறார்கள். அவரது பேச்சுகள் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தையொட்டியதாகவே இருக்கின்றன. ஆளுநரின் தற்போதைய செயல்பாடுகள் அனைத்தும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் அசைன்மென்ட். மேலும், இது போன்ற சர்ச்சைப் பேச்சுகளை அவர் நிறுத்தப்போவதாகத் தெரியவில்லை, தொடரத்தான் போகிறார். இவரின் செயல்பாடுகள் அனைத்தும் 2024-ல் பா.ஜ.க-வுக்கு பாதகமாக அமையும்” என்றார்.

”தினசரி யாரையாவது சந்தித்துப் பேசுவது, உள்ளரங்கில் நடைபெறும் கூட்டத்தில் பேசுவதையே முக்கியப் பணியாக வைத்திருக்கிறார். மேடைதோறும் முழங்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது பணியை முறையாக மேற்கொள்கிறாரா என்றால் இல்லை. மாநில அரசு அனுப்பிய பல மசோதாக்களைக் கிடப்பில் போட்டிருக்கிறார் அவர். மாநில அரசு ஒரு சட்டத்தை இயற்றுகிறது என்றால், ஏனோ தானோ என இயற்றிவிடாது என்பது ஆளுநருக்குப் புரிய வேண்டும்.
நீண்டகாலம் எடுத்துக்கொண்டு, மாநில அரசின் பெரும் அழுத்தத்துக்குப் பிறகே ஆன்லைன் ரம்மிக்கான தடை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறார். ஆளுநர் ஒவ்வொரு மசோதாவுக்கும் ஒப்புதல் தர மாநில அரசைப் போராட வைப்பது நியாமில்லை. சட்ட மசோதாக்கள் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் மேற்பார்வையில் இயற்றப்பட்டு, சட்டத்துறை முன்னோடிகளின் பார்வைக்கு அனுப்பப்பட்டு... பின்னரே சட்டமன்றத்தில் தாக்கலாகிறது என்பதை தமிழக ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விருப்பு வெறுப்புகளைக் கடந்தவராக இருப்பது அவசியம். எல்லோருக்கும் தனிப்பட்ட அரசியல் விருப்பங்கள் இருப்பது இயல்பென்றாலும், தான் வகிக்கும் பதவிக்கும் உரித்தான விஷயங்களைப் பேசலாம். மேலும், பதவியேற்பின்போது எடுத்துக்கொண்ட பிரமாணத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயம். அரசியல் பேசி சர்ச்சைகளை எழுப்பாமலும், மக்கள் நலன் சார்ந்த மசோதாக்களை நிறுத்திவைத்து அதிர்வுகளைக் கிளப்பாமலும் அவர் பணியாற்றிட வேண்டும்" என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.