Published:Updated:

`தமிழ்நாடு’... விவாதத்தின் பின்னணியும், பெயர் உருவான கதையும்!

தமிழ்நாடு அரசு

`தமிழ்நாடு’ என்ற பெயர் சிலப்பதிகாரத்திலேயே இடம்பெற்றிருக்கிறது. தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்ததற்குப் பிறகு, `தமிழ்நாடு' என்று பெயர் சூட்டப்பட்டது.

`தமிழ்நாடு’... விவாதத்தின் பின்னணியும், பெயர் உருவான கதையும்!

`தமிழ்நாடு’ என்ற பெயர் சிலப்பதிகாரத்திலேயே இடம்பெற்றிருக்கிறது. தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்ததற்குப் பிறகு, `தமிழ்நாடு' என்று பெயர் சூட்டப்பட்டது.

Published:Updated:
தமிழ்நாடு அரசு

`தமிழ்நாடு என்பதற்கு பதிலாக `தமிழகம்’ என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்’ என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது பெரும் சர்ச்சையாகியிருக்கிறது.

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி

சென்னையிலுள்ள ஆளுநர் மாளிகையில், காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ``துரதிர்ஷ்டவசமாக, தமிழகத்தைப் பின்னோக்கி இழுக்கும் அரசியல் நடக்கிறது. அது நாம் திராவிடர்கள் என்று பிரபலப்படுத்துகிறது. திராவிட கருத்தாக்கம் கடந்த அரை நூற்றாண்டாகக் கட்டமைக்கப்பட்டு மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுவருகிறது. நாம் தேசத்தின் அங்கம் அல்ல, நாம் தேசத்தின் ஒருங்கிணைந்த பகுதி என்று சொல்லிவருகிறார்கள்.

நாடு முழுவதும் எதை முன்னெடுத்தாலும், அதற்கு தமிழ்நாடு மட்டும் மறுப்பு தெரிவிக்கும். இது வாடிக்கையாகிவிட்டது. இவ்வாறாக நிறைய தவறான, மோசமாகக் கட்டுக்கதைகளை உருவாக்கியிருக்கிறார்கள். இவற்றை உடைக்க வேண்டும். உண்மை மேலோங்க வேண்டும்” என்று ஆர்.என்.ரவி பேசினார். திராவிடம் குறித்து அவர் பேசிய கருத்துகளுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

மேலும், ஆளுநர் தனது பேச்சில், “தமிழ்நாடு என்பது பாரதத்தின் ஆன்மா. பாரதத்தின் அடையாளம். சொல்லப்போனால், தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்" என்று குறிப்பிட்டார். அதையடுத்து, தமிழ்நாடு, தமிழகம் என்பது தொடர்பான விவாதங்கள் சமூக வலைதளங்களில் பரபரக்கின்றன.

ஆர்.என்.ரவியின் பேச்சைக் கண்டித்து தி.மு.க-வின் நாடாளுமன்ற மக்களவைக்குழுத் தலைவரான டி.ஆர்.பாலு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். “இது என்றும் ‘தமிழ்நாடு’தான்” என்று தி.மு.க நாடாளுமன்றஉறுப்பினர் கனிமொழியும், “அரசியல், பண்பாட்டின் தனித்துவ அடையாளம் ‘தமிழ்நாடு’ என்று அமைச்சர் உதயநிதியும் ட்வீட் செய்திருக்கிறார்கள். ட்விட்டரில் #TamilNadu #Thamizhagam என்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்ட் செய்யப்பட்டன.

கனிமொழி
கனிமொழி

தமிழ்நாடு என்ற பெயருக்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு. அது சிலப்பதிகாரத்திலிருந்து தொடங்குகிறது. தமிழ்நாடு என்ற பெயர் சிலப்பதிகாரத்தில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது என்கிறார்கள் தமிழறிஞர்கள். ’இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இது நீ கருதினை ஆயின்’ என்று சேரன் செங்குட்டுவனை சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் புகழ்ந்திருக்கிறார்.

மெட்ராஸ், மதராஸ், சென்னை என்ற பெயர்களால் தமிழ்நாடு குறிப்பிடப்பட்டுவந்தது. இது மாற்றப்பட வேண்டும் என்றும், தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சி, தமிழரசுக் கழகம் உட்பட பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் தமிழ்நாடு என்ற பெயர் வைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினர். இந்தக் கோரிக்கைக்காக, காங்கிரஸ்காரரான சங்கரலிங்கம் விருதுநகரில் உண்ணாவிரதம் இருந்தார். அவர், 72 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தார். அது, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

தமிழ்நாடு என்று பெயரைச் சூட்ட பக்தவச்சலம் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆகவே, உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்கனார், ‘நான் இறந்துவிட்டால் என் உடலை கம்யூனிஸ்ட்டுகளிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதன்படி, அவரது உடல் கம்யூனிஸ்ட்டுகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

சங்கரலிங்கனார்
சங்கரலிங்கனார்

சங்கரலிங்கனார் மரணத்துக்குப் பிறகு, தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. 1967-ம் ஆண்டு அண்ணா தலைமையில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, ‘தமிழ்நாடு’ என்று மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பின்னர், அந்தத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான பூபேஷ் குப்தா, ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டப்பட வேண்டும் என்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதா ஒன்றைத் தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தனை ஆண்டுக்காலத்துக்குப் பிறகு, தமிழ்நாடு என்ற பெயர் ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சு மூலம் மீண்டும் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது. ‘தமிழ்நாடு என்பது பாரதத்தின் ஆன்மா. பாரதத்தின் அடையாளம். சொல்லப்போனால் தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்’ என்று தற்போது ஆர்.என்.ரவி பேசியிருக்கிறார். தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்றுதான் தி.மு.க-வினரும் அதன் கூட்டணிக் கட்சியினரும், ஆதரவாளர்களும் குறிப்பிட்டுவருகிறார்கள். அதற்கு பதிலடி கொடுப்பதற்காகவே, ஆர்.என்.ரவி இந்த விவகாரத்தைக் கொளுத்திப்போட்டாரா என்பது தெரியவில்லை.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தமிழ்நாடு, தமிழகம் என்ற இரண்டு பெயர்களும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுத்தான்வருகின்றன. முதல்வர், அமைச்சர்கள் உட்பட பலரும் ‘தமிழக அரசு’ என்று தங்கள் மேடைப்பேச்சுகளில் குறிப்பிட்டாலும், ‘தமிழ்நாடு’ என்பதுதான் அதிகாரபூர்வமாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது. அதைக் கேள்விக்குறியாக்குவது மாதிரி ஆளுநர் பேசியிருக்கிறார். அவரது இந்தக் கருத்து சிறிய சலசலப்போடு கடந்துவிடக்கூடிய ஒன்றாகவே இருக்கும் என்பதுதான் யதார்த்தம்.