Published:Updated:

விஷச்சாராய விவகாரத்தில் அறிக்கை கோரும் ஆளுநர்... திமுக அரசுக்கு நெருக்கடியா?!

ஸ்டாலின், ஆளுநர் ரவி

விஷச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் ரவி தமிழக அரசிடம் அறிக்கை கேட்டிருக்கிறார். இந்த விவகாரம் ஏற்கெனவே அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஆளுநரின் கடிதம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

Published:Updated:

விஷச்சாராய விவகாரத்தில் அறிக்கை கோரும் ஆளுநர்... திமுக அரசுக்கு நெருக்கடியா?!

விஷச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் ரவி தமிழக அரசிடம் அறிக்கை கேட்டிருக்கிறார். இந்த விவகாரம் ஏற்கெனவே அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஆளுநரின் கடிதம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

ஸ்டாலின், ஆளுநர் ரவி

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ம் தேதி கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அதில் இதுவரை 14 பேர் பரிதாபாக உயிரிழந்திருக்கின்றனர். அதேபோல செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த பெருங்கரனை, பேரம்பாக்கம் பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்த எட்டு பேர் இதுவரை உயிரிழந்திருக்கின்றனர். ஒரே வாரத்தில் கள்ளச்சாராயம் குடித்து சுமார் 22 பேர் பலியாகியிருப்பது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

ஸ்டாலின் நேரில் ஆறுதல்
ஸ்டாலின் நேரில் ஆறுதல்
டிவிட்டர்

`உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா 10 லட்சம் ரூபாயும், சிகிச்சை பெறுபவர்களுக்குத் தலா 50,000 ரூபாயும் வழங்கப்படும்' என முதலமைச்சர் அறிவித்தார். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று பார்த்து ஆறுதல் தெரிவித்தார். அதேபோல எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அரசியல்ரீதியாக இவ்விவகாரம் தி.மு.க அரசுக்குப் பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தியிருக்கிறது. “தி.மு.க ஆட்சியில் கள்ளச்சாராய வியாபாரிகள் பெருகிவிட்டனர். அவர்களைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது. ஆளுங்கட்சி பின்புலத்துடன்தான் போலி மதுபானம் விற்கப்பட்டிருக்கிறது. அதுதான் இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம்” என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை
அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை
டிவிட்டர்

கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்திய முதலமைச்சர், கள்ளச்சாராயம், போதைப்பொருள்களை விற்பனை செய்பவர்கள்மீது குண்டர் சட்டத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை அந்தத் தொழிலிலிருந்து விடுவித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இந்த வழக்கும் சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.

இந்த நிலையில், கள்ளச்சாராய மரண விவகாரத்தில் இதுவரை என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன... எத்தனை பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்... கள்ளச்சாராயம் எப்படி விற்கப்படுகிறது... கள்ளச்சாராயம் விற்கப்படவில்லையெனில், எப்படி ஒரே நாளில் இத்தனை பேர் கைதுசெய்யப்பட்டனர்... என்பது குறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு தலைமைச் செயலாளருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டிருக்கிறார்.

பிரியன்
பிரியன்

``தனக்கு அறிக்கை கேட்க உரிமை இருக்கிறது என காட்டிக்கொள்ளும் ஆளுநருக்கு, அரசு அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று தெரியவில்லையா?” என்று பத்திரிகையாளர் ப்ரியன் கேள்வி எழுப்புகிறார். இது தொடர்பாக நம்மிடம் பேசிய அவர், “சட்டப்பிரிவு 167-ன்படி அறிக்கை கேட்க ஆளுநருக்கு உரிமை இருக்கிறது. ஆனால், இதை வைத்து அவரால் ஒன்றும் செய்ய முடியாது. வேண்டுமானால் அவரது கருத்துகளை இணைத்து மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கலாம். ஆனால், கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறது.

2023-ல் இதுவரை 85,000 வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. 79 பேர் குண்டாஸில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். காவல்துறை நடவடிக்கை எடுத்தாலும் அதைவிட கள்ளச்சாராய புழக்கம் அதிகமாக இருக்கிறது என்பது உண்மைதான்.

ஸ்டாலின் - ரவி
ஸ்டாலின் - ரவி

நேர்மையான போலீஸ் அதிகாரிகள், மக்கள் ஒத்துழைப்பு இருந்தால்தான் கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியும். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்யலாம். ஏன் இத்தனை நாள்களாக நடவடிக்கை எடுக்கவில்லை, திடீரென இவ்வளவு பேரை எப்படிக் கைதுசெய்தீர்கள் என்றெல்லாம் ஆளுநர் கேட்க முடியாது. கேட்டிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. பிக்பாக்கெட் அடிப்பவர்கள் முதல் செயின் திருடர்கள் வரை ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பதிவுகள் இருக்கும். அந்தப் பதிவுகளைவைத்து காவல்துறை இப்போது கள்ளச்சாராய வழக்கில் கைது நடவடிக்கையை எடுத்திருக்கிறது. ஐ.பி.எஸ் படித்த ஆளுநருக்கு காவல் நிலையத்தின் இந்தச் சாதாரண நடவடிக்கைகூட தெரியவில்லை என்பது ஆச்சர்யமாக இருக்கிறது” என்றார்.

ஆளுநரின் இந்த நடவடிக்கை அரசியல்ரீதியாக என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து அரசியல் வல்லுநர் ரவீந்திரன் துரைசாமியிடம் பேசினோம். “அறிக்கை கேட்பதற்கு ஆளுநருக்கு சட்டரீதியாக உரிமை இருக்கிறது. அரசும் அறிக்கை அளித்துவிடும் என்றே கருதுகிறேன். தி.மு.க வீசக்கூடிய கரண்டியில் சாதம் இருக்கிறது என்பதால், மோதல்போக்கு இல்லாத அளவில்தான் இவ்விவகாரத்தைக் கையாள்கிறது. அதேசமயம் மாநில உரிமை சார்ந்த தங்கள் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்பதைக் காட்டிக்கொள்ளும் வகையிலும் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார்.

ரவீந்திரன் துரைசாமி
ரவீந்திரன் துரைசாமி

முந்தைய முதல்வர்கள் பாணியிலிருந்து ஸ்டாலின் மாறுபட்டு, இதை எப்படிக் கையாண்டால் ஆட்சிக்குப் பிரச்னைகள் குறைவாக வரும் என்பதையும் பார்ப்பார். மற்றபடி ஆளுநர் இந்த அறிக்கையை வைத்துக்கொண்டு எதுவும் செய்யமாட்டார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருப்பதால், தி.மு.க அரசுக்கு எதிரான நடவடிக்கைகள் எதையும் மத்திய அரசும் எடுக்காது. கீரியும் பாம்பும்போல சீறிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் சண்டை வராது” என்றார்.