Published:Updated:

தெலங்கானா: ``நான் பெண் என்பதாலேயே பாரபட்சம் காட்டுகிறார்கள்!” – கவர்னர் தமிழிசை

விழாவில் கவர்னர் தமிழிசை

“பழங்குடியினர் திருவிழாவில் பங்கேற்பதற்காக நான் ஹெலிகாப்டர் கேட்டபோதும் கடைசி நிமிடம் வரை தரவில்லை. அதனால் 8 மணி நேரம் சாலை மார்க்கமாகவே சென்றேன். இப்படி கவர்னர் மாளிகை பல முறை அவமானப்படுத்தப்பட்டிருக்கிறது.” – கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன்

தெலங்கானா: ``நான் பெண் என்பதாலேயே பாரபட்சம் காட்டுகிறார்கள்!” – கவர்னர் தமிழிசை

“பழங்குடியினர் திருவிழாவில் பங்கேற்பதற்காக நான் ஹெலிகாப்டர் கேட்டபோதும் கடைசி நிமிடம் வரை தரவில்லை. அதனால் 8 மணி நேரம் சாலை மார்க்கமாகவே சென்றேன். இப்படி கவர்னர் மாளிகை பல முறை அவமானப்படுத்தப்பட்டிருக்கிறது.” – கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன்

Published:Updated:
விழாவில் கவர்னர் தமிழிசை

தெலங்கானாவின் கவர்னராக பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி ‘தெலங்கானா மக்களுக்கான சேவையில்’ என்ற நிகழ்ச்சி தெலங்கானா ஆளுநர் மாளிகையில் இன்று நடைப்பெற்றது. அந்த நிகழ்ச்சியில், ”தன்னலமற்ற சேவையில் சுயத்தை மீண்டும் கடைப்பிடிப்பது” என்ற தலைப்பில் நூலை வெளியிட்டு பேசிய கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன், ”முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்களுக்கு பல முறை அழைப்பு விடுத்தும், அவர் கவர்னர் மாளிகைக்கு வர மறுக்கிறார். உண்மையான அன்புடன் மக்களுக்கு பணியாற்ற விரும்பினேன். ஆனால் அந்த முயற்சிக்கு பல தடைகள் ஏற்படுத்தப்பட்டன. எனது நடவடிக்கைகளில் எந்த தனிப்பட்ட காரணமும் கிடையாது. நான் ஆக்கபூர்வமானவளே தவிர சர்ச்சைக்குறிய நபர் அல்ல. சிறந்த நட்புணர்வு அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வாக இருக்கும். திருவனந்தபுரத்தில் நடந்த தென்மாநில கவுன்சில் கூட்டத்தில் சந்திரசேகர ராவ் கலந்துகொள்ளாதது தவறு.

விழாவில் நூல் வெளியிடும் கவர்னர் தமிழிசை
விழாவில் நூல் வெளியிடும் கவர்னர் தமிழிசை

நான் புதுச்சேரி கவர்னர் என்ற முறையில் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டேன். அந்த கூட்டத்தில் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்கள் சார்ந்த 75 சதவிகித பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. அனைத்து பிரச்னைகளையும் விவாதிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தயாராக இருந்தார். அனைத்து முதல்வர்களும் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். ஆனால், சந்திரசேகர ராவ் கலந்துகொள்ளவில்லை. கூட்டத்தில் கலந்துகொள்வதில் உங்களுக்கு என்ன பிரச்னை? குடியரசு தினத்தன்று தேசியக்கொடி ஏற்றவும், மாநில மக்களுக்கு உரையாற்றவும் எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மேற்கோள்காட்டி கவர்னர் மாளிகையிலேயே தேசியக்கொடியை ஏற்றும்படி அதிகாரிகள் தெரிவித்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அனைத்து மாநிலங்களிலும் குடியரசுதின அணிவகுப்பு நடந்த நிலையில், தெலங்கானா மாநிலத்தில் மட்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது ஆச்சர்யமாக உள்ளது. மக்களுக்கு உரையாற்றுவது தொடர்பாக அதிகாரிகளை அணுகிய போதும் எந்த பதிலும் இல்லை. இதனால், நானே உரை தயாரித்து அதனை பேசினேன். பேசுவதற்கு உரை தராவிட்டால் நான் ஏன் அமைதியாக இருக்க வேண்டும்? பேச எனக்கு உரிமை இல்லையா? அவர்கள் பேசுவதை மட்டும்தான் நான் பேச வேண்டுமா? முதல்வரோ அல்லது அந்தக் கட்சியின் எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் கவர்னர் மாளிகைக்கு வருவதில் என்ன தடை இருக்கிறது? கவர்னர் மாளிகை என்ன தீண்டத்தகாத இடமா? அரசியல்வாதியாக இருந்தபோது சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டேன். தற்போது கவர்னர் பதவி வகிக்கும் போதும் விமர்சிக்கப்படுகிறேன். நான் வலிமையானவள். மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்ற உறுதியை யாராலும் தடுக்க முடியாது.

ஆசியாவின் மிகப்பேரிய மலைகிராமத் திருவிழாவான, ’சம்மக்கா சாரலம்மா ஜாதரா’ என்ற தெலங்கானா மாநிலத்தில் கொண்டாடப்படும் பழங்குடியினர் திருவிழாவில் பங்கேற்பதற்காக ஹெலிகாப்டர் கேட்டபோதும் கடைசி நிமிடம் வரை தரவில்லை. அதனால் 8 மணி நேரம் சாலை மார்க்கமாகவே சென்றேன். இப்படி கவர்னர் மாளிகை பல முறை அவமானப்படுத்தப்பட்டிருக்கிறது. மாவட்டங்களுக்கு ஆய்வுக்கு செல்லும் போதும் கலெக்டர்கள் மற்றும் எஸ்.பி-க்கள் எந்தவித வழிமுறைகளையும் பின்பற்றுவது கிடையாது. அதற்கான உத்தரவுகள் எங்கிருந்து வருகிறது என எனக்கு தெரியாது. அவர்கள் வராதது குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை. மாநில அரசில் உள்ள சில பிரச்னைகளை எடுத்துக்கூறினேன். ஆனால் அதனை அவர்கள் கருத்தில் எடுத்து கொண்டார்களா இல்லையா என்பது தெரியாது. கவர்னர் எங்கும் செல்லக்கூடாது எனக்கூறுகின்றனர். ஆனால் கவர்னருக்கு எந்த எல்லைகளும் கிடையாது. மக்களுக்கு பணியாற்றுவதே எனது நோக்கம். நான் ஒரு பெண் என்பதாலேயே என்மீது தெலங்கானா மாநில அரசு பாரபட்சமாக நடந்து கொள்கிறது. ஒரு பெண் கவர்னர் எப்படி நடத்தப்பட்டார் என்பது மாநில வரலாற்றில் எழுதப்படும்” என்றார்.