Published:Updated:

ஆளுநர் Vs தி.மு.க அரசு - தொடரும் மோதல்!

முதல்வர் - ஆளுநர்
பிரீமியம் ஸ்டோரி
முதல்வர் - ஆளுநர்

ஒரு மசோதாவுக்கும் ஒப்புதல் இல்லை... திராவிட மாடலுக்கும் பதிலடி...

ஆளுநர் Vs தி.மு.க அரசு - தொடரும் மோதல்!

ஒரு மசோதாவுக்கும் ஒப்புதல் இல்லை... திராவிட மாடலுக்கும் பதிலடி...

Published:Updated:
முதல்வர் - ஆளுநர்
பிரீமியம் ஸ்டோரி
முதல்வர் - ஆளுநர்

தமிழகத்தில் தி.மு.க ஆட்சியாளர்களுக்கும், ஆளுநருக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், ‘தமிழ்நாட்டின் ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும்’ என்று நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி-க்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர். ஆனால், இதன்மீது விவாதம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, ‘ஒன்றிய அரசே... தமிழக ஆளுநரைத் திரும்பப் பெறு’ என்று கோஷமிட்டு வெளிநடப்பு செய்தார்கள். இந்த பிரச்னை எங்கே போய் முடியும்?

2021, செப்டம்பரில் தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற சொற்ப நாள்களிலேயே ஆளுநருக்கும் தமிழக ஆட்சியாளர்களுக்குமான மோதல் தொடங்கிவிட்டது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 11 மசோதாக்களில், 10 மசோதாக்களுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்காததால், கடும் அதிருப்தியில் இருக்கிறது தி.மு.க அரசு. குறிப்பாக, ‘நீட் தேர்வு விலக்கு’ மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், மீண்டும் அதே மசோதாவைத் தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பியும் எந்த ரெஸ்பான்ஸும் இல்லை. எழுவர் விடுதலை தொடர்பான ஆவணங்களை மட்டும் ஏப்ரல் 7 அன்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருக்கிறார் ஆளுநர். கூட்டுறவு சங்க திருத்த மசோதா மற்றும் பாரதியார் பல்கலைக்கழக திருத்த மசோதா ஆகியவற்றுக்கு ஆளுநர் தரப்பிலிருந்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

ஆளுநர் Vs தி.மு.க அரசு - தொடரும் மோதல்!

இதற்கெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தி.மு.க-வும் ‘முரசொலி’ நாளிதழில் நீட் தேர்வு விலக்கு மசோதா விவகாரத்தில், ‘கொக்கென்று நினைத்தாரோ தமிழக ஆளுநர் ரவி’ என்ற தலைப்பில் ஆளுநரைக் கடுமையாக விமர்சித்து தலையங்கம் எழுதியது. தி.மு.க-வின் ‘திராவிட மாடல்’ கருத்தாக்கம் வலுப்பெற்றபோது, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய ஆளுநர், “மாநிலரீதியாகச் சிந்திக்காமல், இந்தியா என்ற உணர்வுடன் சிந்திக்க வேண்டும். மாநில அளவிலான வளர்ச்சி, சமமான வளர்ச்சியை உருவாக்காது. அது நம் நாட்டுக்கும் சரியானதல்ல. ஏற்றத்தாழ்வுகள்தான் உருவாகும்” என்று பேசினார். இதையடுத்து, ‘திராவிட மாடல் பா.ஜ.க-வுக்குச் சிக்கலாக இருக்கிறது. அந்தப் பின்னணியில்தான் ஆளுநர் பேசுகிறார்’ என்று அவருக்கு பதிலடி கொடுத்தது ‘முரசொலி.’

இந்த மோதல் போக்கை தமிழக எதிர்க்கட்சியான அ.தி.மு.க அமைதியாக ரசித்துவருகிறது என்று கூறப்படும் நிலையில், இந்த விவகாரம் குறித்து அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரையிடம் கேட்டோம். “ஆளுநரின் அதிகாரங்கள் என்னென்ன, ஆளுநர் பதவி அவசியம்தானா என்றெல்லாம் தி.மு.க-வினர் கேள்வி எழுப்புவது ஒருபுறம் இருக்கட்டும்... இன்று ஆளுநரிடம் மோதும் தி.மு.க-வினர், கடந்தகாலங்களில் ஆளுநர்களிடம் எப்படியெல்லாம் ஒட்டிக்கொண்டிருந்தனர் என்பதை யோசிக்க வேண்டும். கே.கே.ஷா என்றோர் ஆளுநர் இருந்தார்... அவரை ‘கலைஞர் கருணாநிதி ஷா’ என்றுதான் அந்தக் காலகட்டத்தில் அழைத்தார்கள்... அந்த அளவுக்கு அவருடன் தி.மு.க-வினர் நெருக்கம் பாராட்டினர். எம்.ஜி.ஆர் ஆட்சியைக் கலைக்கக் கோரி இந்திரா காந்தியிடம் கெஞ்சிய கருணாநிதி, அன்றைய ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரியிடம் மொத்தமாகச் சரணடைந்தார். அதன் விளைவாகத்தான் எம்.ஜி.ஆர் அரசு கலைக்கப்பட்டது.

ஆனால், அ.தி.மு.க அப்படி அல்ல... ஆளுநர் சென்னா ரெட்டி, ‘அ.தி.மு.க அரசைக் கலைப்பேன்’ என்று மிரட்டியபோது, ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசை, நியமன பதவி வகிக்கும் ஆளுநரால் எப்படிக் கலைக்க முடியும்?’ என்று சென்னா ரெட்டிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அந்த வழக்கில் நான்தான் வக்கீல். அ.தி.மு.க ஆட்சியில் கேபிள் டி.வி-யைக் கையகப்படுத்த சட்ட மசோதா கொண்டுவந்தபோது, அதற்கு ஒப்புதல் கொடுக்கக் கூடாது என்று ஆளுநர் பர்னாலாவிடம் கருணாநிதி தன் பேரன் தயாநிதியுடன் சென்று மன்றாடியதை ‘இல்லை’ என்று தி.மு.க-வினர் மறுக்க முடியுமா? கருணாநிதியை விடுங்கள்... கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது எங்களுக்கு எதிராக ஆளுநர் மாளிகைக்கு அடிக்கடி காவடி எடுத்தவர்தான் ஸ்டாலின். தமிழக அரசின் திறமையற்ற நிர்வாகம், முதல்வர் குடும்பத்தினரின் துபாய் பயணம், சொத்துவரி உயர்வு... இவற்றால் மக்களிடம் ஏற்பட்டுள்ள அதிருப்திகளை மறைக்கவே ஆளுநரை எதிர்த்து நாடகமாடுகிறார்கள்” என்றார் ஆவேசமாக!

இன்பதுரை, நாராயணன் திருப்பதி, பரந்தாமன்
இன்பதுரை, நாராயணன் திருப்பதி, பரந்தாமன்

இதே கருத்தைக் கூறும் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி நம்மிடம், “ஆளுநர் பதவி என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் ஓர் அங்கம். சட்டத்தை மீறி அவரால் எதுவும் செய்ய முடியாது. ஆளுநர் அவரது அதிகார வரம்புக்கு உட்பட்டு முடிவெடுப்பது அவரது கடமை. தமிழக ஆளுநர் அதைச் சரியாகவே செய்துகொண்டிருக்கிறார். ஆனால், ஆளுநரை பொம்மை என்று நினைத்து அவரை அணுகினால், அதற்கான விளைவுகளை மாநில அரசு எதிர்கொள்ளத்தான் வேண்டும். ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று தி.மு.க-வினர் கேட்பது மிகவும் மலிவான அரசியல்” என்றார்.

இது குறித்து தி.மு.க எம்.எல்.ஏ-வும், அந்தக் கட்சியின் சட்டத்துறை இணைச் செயலாளருமான பரந்தாமனிடம் பேசினோம். “ஒரு மாநிலத்துக்கு ஆளுநர் தேவையா என்பதை இன்னும் அழுத்தமாகப் பேசவேண்டிய இடத்தில் இருக்கிறோம். ஒன்றிய அரசும் ஆளுநரும் தாங்கள் சொல்வதைத்தான் மாநில அரசு கேட்க வேண்டும் என்று நினைத்துச் செயல்படுவதே ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. தமிழக ஆளுநர் ரவி, மத்திய அரசுக்கு அனுப்பவேண்டியதை அனுப்புவதும் இல்லை. எடுக்கவேண்டிய முடிவுகளை எடுப்பதும் இல்லை. அப்படியிருக்கும்போது அவர் எதற்காக ஆளுநராக இங்கு தொடர வேண்டும்? இன்றைக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்கள்போல தமிழகத்தில் முன்னெப்போதும் ஏற்பட்டதில்லை. மரபை மீறிய, தனிப்பட்ட அரசியலை ராஜ்பவனுக்குள் நுழையவிட்ட ஆளுநர்கள் இதுவரை தமிழ்நாட்டுக்கு வாய்த்ததில்லை. அதனால்தான் ஆளுநர் ரவிக்கு எதிராகக் குரல் கொடுத்துவருகிறோம்” என்றார்.

மொத்தத்தில் இந்த மோதல் போக்கு மாநிலத்தின் வளர்ச்சிக்கு நல்லதல்ல!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism