
பா.ஜ.க-வை சேர்ந்த எம்.பி உதயன்ராஜே, `சத்ரபதி சிவாஜி மகாராஜா எல்லா மதங்களுக்குமான தலைவராக இருக்கிறார்.
`ஆளுநரை வீட்டுக்கு அனுப்புங்கள்’ என்ற கோஷம் பா.ஜ.க ஆளாத மாநிலங்களில்தான் ஓங்கி ஒலிக்கும். ஆனால், பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெறும் மகாராஷ்டிராவில், `எங்களுக்கு இந்த ஆளுநர் தேவையில்லை. அவரைத் திரும்பப் பெறுங்கள்’ என்று ஆளும் தரப்பினரே போர்க்கோலம் பூண்டிருக்கிறார்கள்.
2019-ம் ஆண்டு முதல் மகாராஷ்டிராவின் ஆளுநராக இருக்கும் பகத் சிங் கோஷ்யாரி, கடந்த மாதம் நடந்த விழா ஒன்றில் பேசியபோது, ``மகாராஷ்டிர மக்களுக்கு சத்ரபதி சிவாஜி பழங்கால ஹீரோ ஆகிவிட்டார். இப்போது உள்ளவர்களுக்கு அம்பேத்கரும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும்தான் ஹீரோக்கள்’’ என்று கூறினார். இதற்கு ஆளும் பா.ஜ.க., சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. சிவசேனா (உத்தவ்) தரப்பு, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆளுநருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கின. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆளுநருக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்தச் சம்பவம் சூடுபிடித்திருந்த நேரத்தில் திடீரென டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார் கோஷ்யாரி. ``டெல்லியிலிருந்து திரும்பிய பிறகு கோஷ்யாரி, தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வார்’’ என்று பா.ஜ.க-வைச் சேர்ந்த தலைவர்கள் சிலர் கூறிவந்தனர். ஆனால், இந்தத் தகவலை ஆளுநர் மாளிகை முற்றிலுமாக மறுக்க, ஆளுநருக்கு எதிரான போராட்டங்கள் மேலும் வலுத்தன. டிசம்பர் 13-ம் தேதி அன்று புனே நகர் முழுவதும் ஆளுநருக்கு எதிராக பந்த் நடைபெற்றது.
பா.ஜ.க-வை சேர்ந்த எம்.பி உதயன்ராஜே, `சத்ரபதி சிவாஜி மகாராஜா எல்லா மதங்களுக்குமான தலைவராக இருக்கிறார். அவரை அவமதித்த ஆளுநர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். மகாராஷ்டிராவிலுள்ள பிரதான கட்சிகளின் கோரிக்கையும் இதுவாகவே இருக்கிறது. இந்த நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குக் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார் கோஷ்யாரி. அதில், `2016-ம் ஆண்டே அரசியலிலிருந்து விலக முடிவெடுத்த நான், பிரதமர் மோடியும் நீங்களும் என்மீது வைத்த அன்பு, நம்பிக்கை காரணமாகத்தான் ஆளுநர் பதவியை ஏற்றுக்கொண்டேன். நான் தெரியாமல் ஏதாவது தவறு செய்திருந்தால், மன்னிப்புக் கேட்கத் தயங்க மாட்டேன். ஆனால், சிவாஜி மகாராஜா போன்ற ஒருவரை நான் ஒருநாளும் அவமதிக்க நினைக்க மாட்டேன். இந்த விவகாரத்தில் என்னை வழிநடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
முன்னதாக, `குஜராத்திகள், ராஜஸ்தானிகள் மும்பையிலிருந்து வெளியேறிவிட்டால், இது பணமில்லாத நகரமாக மாறிவிடும்’ என்று பேசி மராத்தியர்களின் வெறுப்பைச் சம்பாதித்துக்கொண்டார் கோஷ்யாரி. மேலும், சமூக சீர்திருத்தவாதிகளான சாவித்ரிபாய், ஜோதிராவ் பூலே ஆகியோரின் திருமணம் குறித்து இவர் பேசியதும் சர்ச்சையானது. தற்போது மீண்டும் பெரும் சர்ச்சையில் சிக்கியிருப்பதால், கூடிய விரைவில் அவரது ஆளுநர் பதவி காலியாகலாம்!