அரசியல்
அலசல்
Published:Updated:

கேரள அரசியல் தீபாவளி - ஆளுநர் vs முதல்வர்

பினராயி விஜயன்
பிரீமியம் ஸ்டோரி
News
பினராயி விஜயன்

உ.பி-யில் உள்ளவர்களுக்கு கேரளத்தின் விஷயங்களைப் புரிந்துகொள்ள முடியாது” என நேரடியாக ஆளுநரைக் காட்டமாக விமர்சித்தார்.

‘‘அறிவு இல்லாதவர் கேரளத்தை ஆட்சி செய்கிறார்’’ என்று கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானும், ‘கவர்னர் ஆரிப் முகமது கான் பருப்பு இங்கு வேகாது’’ என்று கேரள முதல்வர் பினராயி விஜயனும் மாறி மாறி வெளிப்படையாகவே அடித்துக்கொள்கிறார்கள்!

கேரளாவில் கவர்னருக்கும் முதல்வருக்குமான மோதல் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. அண்மையில், ‘கேரளா வின் ஒன்பது பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனங்களில் யு.ஜி.சி விதிமுறைகள் கடைப்பிடிக்கப் படவில்லை’ எனக் கூறியதுடன், ‘24-10-2022 அன்று காலை 11:30 மணிக்கு முன்பு துணைவேந்தர்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும்’ என்றும் உத்தரவு பிறப்பித்தார் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான். நீதிமன்றமோ, ‘துணைவேந்தர்கள் இப்போதைக்குப் பதவி விலகத் தேவையில்லை’ என்று உத்தரவிட்டிருக்கிறது.

ஆரிப் முகமது கான்
ஆரிப் முகமது கான்

ஆனால், தீபாவளி தினத்தன்று கேரள அரசியலில் பெரும் பூகம்பத்தை உருவாக்கியிருக்கிறது இந்த விவகாரம். அன்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்த ஆளுநர் ஆரிப் முகமது கான், “அறிவு இல்லாதவர் கேரளத்தை ஆட்சி செய்கிறார். செப்படி வித்தை காட்டும் முதல்வருக்கு நான் பிப்படி வித்தை காட்டுவேன். பயமுறுத்தும் வேலை என்னிடம் வேண்டாம்” என்றார் ஆக்ரோஷமாக.

கோபமடைந்த முதல்வர் பினராயி விஜயன், “மோசமான புத்தியுடன் பல்கலைக்கழகங்களை நசுக்கும் யுத்தத்தை கவர்னர் நடத்துகிறார். சமூகத்தில் பலவிதமான ஆட்களை நாம் பார்க்கிறோம். அது போன்ற ஓர் ஆளாக கவர்னர் ஆகிவிட்டாரோ என ஒரு சந்தேகம் இருக்கிறது. அதை நானோ, அரசாங்கமோ நினைத்தால் சரிசெய்ய முடியாது. அவருடன் சம்பந்தப்பட்டவர்கள் நல்ல முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரிப் முகமது கான் கவர்னர் பொறுப்பை நிர்வகித்தால் போதும். தோண்டல், குத்தல் வேலைகளெல்லாம் இங்கு வேண்டாம். அந்த பருப்பு இங்கு வேகாது” என்று பாய்ந்து பதிலடி கொடுத்தார்.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

இதையடுத்து, ஆளுநருக்கு எதிராகப் போராட்டம், உருவபொம்மை எரிப்பு என கேரள அரசியல் களத்தில் அனல் வீசியது. அந்த நேரத்தில், கேரள நிதியமைச்சர் பாலகோபால், “உ.பி-யில் உள்ளவர்களுக்கு கேரளத்தின் விஷயங்களைப் புரிந்துகொள்ள முடியாது” என நேரடியாக ஆளுநரைக் காட்டமாக விமர்சித்தார். ‘தன்னை வெளிப்படையாக விமர்சித்த நிதியமைச்சர் பாலகோபாலின் அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும்’ என முதல்வருக்குக் கடிதம் அனுப்பினார் ஆளுநர். உடனே, “தனிப்பட்ட முறையில் அமைச்சர் யாரையும் விமர்சிக்கவில்லை. எனவே, அவரது பதவியைப் பறிக்க முடியாது” என பதிலடி கொடுத்திருக்கிறார் முதல்வர் பினராயி விஜயன்.

இந்த மோதலின் வெப்பம் இன்னும் அதிகரிக்கும் என்றே தோன்றுகிறது!