Published:Updated:

ஆளுநர் Vs திமுக - அடுத்தடுத்த பரபரப்பு நகர்வுகள் செல்லும் பாதை எது?

ஸ்டாலின், ஆளுநர் ரவி

தமிழகத்தில் ஆளும் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையிலான மோதல் அதிகரித்துக்கொண்டே வருவது ஏன்?

ஆளுநர் Vs திமுக - அடுத்தடுத்த பரபரப்பு நகர்வுகள் செல்லும் பாதை எது?

தமிழகத்தில் ஆளும் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையிலான மோதல் அதிகரித்துக்கொண்டே வருவது ஏன்?

Published:Updated:
ஸ்டாலின், ஆளுநர் ரவி

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், ஆளும் அரசுக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் தீவிரமாகிக்கொண்டே வருகிறது. தமிழக ஆளுநராக அவர் நியமிக்கப்படும்போதே விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. தொடர்ந்து, நீட் தேர்வு வந்த பிறகுதான் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்புகள் அதிகரித்திருப்பதாக அவர் தெரிவித்த கருத்துகள் கடுமையான சர்ச்சைகளை உண்டாக்கின. ''பெரியண்ணன் மனப்பான்மையோடு ஆளுநர் செயல்படுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இது நாகலாந்து அல்ல... தமிழ்நாடு'' என தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் கட்டுரை வெளியானது. அதைத் தொடர்ந்து தற்போது, 'இந்தியா ஓர் ஒப்பந்தப் பிரிவின் ஒன்றியம் அல்ல' என கோவையில் தென் மண்டல பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் பேசியதற்குக் கடுமையான மறுப்புக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறது முரசொலி.

டி.ஆர்.பாலு
டி.ஆர்.பாலு

தவிர, நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு, தமிழக அரசால் ஆளுநருக்கு அனுப்பப்பட்டு ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் மசோதாக்களைக் குறிப்பிட்டு, ஆளுநரின் செயல் வெட்கக்கேடானது எனக் கடுமையாக விமர்சித்துப் பேசியதோடு, ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என இரண்டாவது முறையாகக் கோரிக்கை வைத்திருக்கிறார். ஆளும் திமுக மட்டுமல்ல, 'இந்திய ஒன்றியம் குறித்து ஆளுநர் தெரிவித்திருக்கும் கருத்துகள் அரசியல் சாசனத்துக்கு எதிரானவை’ என்றும், `பல்கலைக்கழகத்தின் வேந்தர்களாக கல்வி அமைச்சர்களே பொறுப்பு வகிக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய வேண்டும்' எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தமிழகத்தில் ஆளும் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையிலான மோதல் அதிகரித்துக்கொண்டே வருவது ஏன்?

திமுக-வின் செய்தித் தொடர்பாளர் சிவ ஜெயராஜிடம் பேசினோம்.

``அண்ணா காலத்திலிருந்தே `ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை’ என்பதுதான் திமுக-வின் கொள்கை. அதிலும், மாநில சுயாட்சிக்கு பங்கம் விளைவிக்கப்படும் நேரங்களில் தீவிரமாக அந்த முழக்கத்தை முன்னெடுக்கிறோம். அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தி, நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத்தான் சட்டப்படி அதைச் செய்ய முடியும். ஆனால், கொள்கைரீதியான குரலை எப்போதும் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

சிவ ஜெயராஜ்
சிவ ஜெயராஜ்

நீட் விலக்கு மசோதாவைத் திருப்பி அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் இருந்தாலும், அது குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் தேவையற்றவை. அதற்குச் சட்டத்திலும் இடமில்லை. 200-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலோடு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக, `நீட் தேர்வு தேவை’ என்று அவர் பேசுவது ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிரான, அவர்களை அவமானப்படுத்துவதற்குச் சமமான செயல். அது போன்ற கருத்துகளை அவர் திரும்பப் பெற வேண்டும். அவர் உள்நோக்கத்தோடு செயல்படுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். சட்டத்தைப் பாதுக்காக்கவேண்டிய அவரே அதை மீறக் கூடாது.

``ஆளுநர் தேவையில்லை என்கிறார்கள். ஆனால் அவரிடமே கோரிக்கை வைக்கிறார்கள் என சிலர் விமர்சிக்கிறார்கள். ஆளுநர் தேவையில்லை என்பது எங்கள் கொள்கை. ஆனால், ஆளுநர் என ஒருவர் இருக்கும்போது அவரிடம் முறையிடுவதுதானே நடைமுறை. நாங்கள் ஒன்றும் லாவணிக் கச்சேரி பாடுவதற்காக அவரைச் சந்திக்கவில்லை. ஆதாரத்தோடும் தரவுகளோடும் முறையான கோரிக்கைகளுக்காகவும்தான் சந்திக்கிறோம்.''
சிவ ஜெயராஜ்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

துணைவேந்தர்கள் மாநாட்டில் அவர் தெரிவித்திருக்கும் கருத்துகளை உற்றுநோக்கும்போது, ஆளுநர் மாளிகையை ஆர்.எஸ்.எஸ் அலுவலகமாக மாற்றும் சூழ்நிலையை அவர் உருவாக்குகிறார் என்று தெரிகிறது. அதனால்தான், ஆளுநரே தேவையில்லை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம். ஆளுநர் மாளிகையைக் காட்டி மிரட்டும் வேலையெல்லாம் இங்கே எடுபடாது. இவரைவிடக் கடுமையான ஆளுநர்களையெல்லாம் பார்த்துவிட்டுத்தான் வந்திருக்கிறோம். திமுக-வின் வரலாறு தெரியாதவர்கள்தான் அப்படியான வேலைகளைச் செய்ய முற்படுகிறார்கள். அந்த முயற்சிகள் எங்களிடம் எடுபடாது.

தமிழக ஆளுநராக ரவி பொறுப்பேற்றதிலிருந்து முதல்வர் ஐந்தாறு முறைகளுக்கு மேல் அவரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். ஆளுநர் மாளிகையோடு, தமிழக அரசு சுமுகமான உறவைக் கடைப்பிடிக்கவே நினைக்கிறோம். ஆனால், அவர்கள்தான் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கிறார்கள். அது தொடர்ந்தால், தெலங்கானாவைப்போல தமிழ்நாட்டிலும் ஆளுநரைப் புறக்கணித்துவிட்டு சபை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் வரும்'' என்கிறார் அவர்.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

மேற்கண்ட விமர்சனங்கள் குறித்து, பாஜக-வின் செய்தித் தொடர்பாளர், நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்,

``ஒருபுறம் முதல்வர் ஆளுநரைச் சந்தித்து கோரிக்கை வைக்கிறார். மறுபுறம், டி.ஆர்.பாலு நாடாளுமன்றத்தில் ஆளுநரைக் கடுமையாகப் பேசுகிறார். உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின், உத்தரவின்பேரில்தான் நீட் தேர்வு நடைபெறுகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். நீட் விஷயத்தில் உண்மையிலேயே திமுக-வுக்கு அக்கறை இருந்தால், இந்த வழக்கில் தங்களை இணைத்துக்கொண்டு வாதங்களை ஏன் முன்வைக்கவில்லை . நீதிமன்றத்தில் இருக்கக்கூடிய ஒரு விஷயத்தை முன்வைத்து திட்டமிட்டு திமுக அரசியல் செய்கிறது என்பதைத்தான் இது காட்டுகிறது. இவர்களுடைய தவறுகளை மறைப்பதற்காக, இந்த ஆட்சியில் நடக்கக்கூடிய தவறுகளை தட்டிக்கேட்பதற்காக ஆளுநரைப் பற்றி இப்படிப் பேசுவது தவறு. துணைவேந்தர்கள் மாநாட்டில், இந்தியா என்கிற தேசம் குறித்து ஆளுநர் மிகத் தெளிவாகப் பேசியது இவர்களுக்குப் பிடிக்காததாலேயே இவர்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்று நான் கருதுகிறேன்'' என்கிறார் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism