Published:Updated:

"ஆளுநர் Vs அரசு மோதல்" அதிகரிப்பு - ஆயுதமாகப் பயன்படுத்துகிறதா மோடி அரசு?!

பிரதமர் மோடி

இந்தியாவில் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர்களை ஆயுதமாகக்கொண்டு, மோடி அரசு நெருக்கடி கொடுத்துவருவதாக விமர்சனம் வைக்கப்படுகிறது.

"ஆளுநர் Vs அரசு மோதல்" அதிகரிப்பு - ஆயுதமாகப் பயன்படுத்துகிறதா மோடி அரசு?!

இந்தியாவில் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர்களை ஆயுதமாகக்கொண்டு, மோடி அரசு நெருக்கடி கொடுத்துவருவதாக விமர்சனம் வைக்கப்படுகிறது.

Published:Updated:
பிரதமர் மோடி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி-யுமான ராகுல் காந்தி, 'பாரத் ஜோடோ யாத்ரா' என்ற பெயரில் நாடு முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டுவருகிறார். அப்போது பொதுக்கூட்டங்களிலும் பேசிவருகிறார். அவ்வாறு சமீபத்தில் நீலகிரி மாவட்டம், கூடலூரில் பேசிய அவர், "எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களைவைத்து பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் தலையீடு செய்துவருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் ஆட்சியை பா.ஜ.க-வால் நியமிக்கப்படும் ஆளுநர்கள் குறுக்கீடு செய்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" என்று பேசியிருந்தார். 

இதற்குக் காரணம் தமிழகம், கேரளா, புதுவை, தெலங்கானா, மேற்கு வங்கம், டெல்லி ஆகிய பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில், 'ஆளுநர்களுக்கும், அந்த மாநில அரசுகளுக்கும்' இடையே தொடர்ந்து நடந்துவரும் மோதல் போக்கே காரணமாகும் என அரசியல் நோக்கர்கள் விமர்சித்து வருகின்றனர். அதாவது, தமிழகத்தைப் பொறுத்தவரை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் போக்கு நீண்ட நாள்களாக நிலவிவருகிறது. 

ஸ்டாலின்
ஸ்டாலின்
Photo: Twitter / MKStalin

இதற்கு, தமிழக அரசின் 'நீட்' விலக்கு மசோதா உள்ளிட்ட மசோதாக்களைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்காமல் கிடப்பில் வைத்துக்கொண்டது, மும்மொழி கல்விக் கொள்கை, பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன சட்டம் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள மோதல் போக்கே உதாரணங்கள்.  இதையடுத்து ஆளுநரைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள் என மத்திய அரசுக்கு தி.மு.க., வி.சி.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள்  உள்ளிட்டவை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

புதுவையில் முன்பு நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி இருந்தது. அப்போது பாஜக-வால் துணைநிலை ஆளுநராக கிரண் பேடி நியமிக்கப்பட்டார். அப்போது அங்கு தினம்தோறும் பிரச்னைகள் எழுந்துவந்தன. மேலும் நாராயணசாமி - கிரண் பேடிக்கு இடையேயான மோதல் தொடர்பான செய்திகளே அப்போதைய தலைப்புச் செய்திகளாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.  பிறகு புதுவையில் துணைநிலை ஆளுநராகக் கூடுதல் பொறுப்பாகத் தமிழிசை செளந்தரராஜன் நியமிக்கப்பட்டார். தற்போது அங்கு பாஜக கூட்டணியிலான ஆட்சி நடக்கிறது. சமீபகாலமாக சர்ச்சைகள் சற்று குறைந்திருக்கின்றன. மேலும் முன்னர், மேற்கு வங்கத்தில் ஆளுநராக இருந்த ஜெகதீஷ் தன்கருக்கும், (இந்திய குடியரசுத் துணைத் தலைவர்) அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே மோதல் வெடித்தது. 

தமிழிசை
தமிழிசை

அப்போது அவர் அரசியலமைப்பு சட்டத்தின் 174-வது பிரிவின்படி தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, மேற்கு வங்க மாநிலச் சட்டசபையை முடக்கிவைத்தார். அந்தக் கூட்டத்தொடரில் ஆளுநருக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவர மம்தா பானர்ஜி அரசு பரிசீலனை செய்திருந்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்துதான் அந்த மாநிலத்தில் சட்டசபை கூடுவதையே ஆளுநராக இருந்த ஜெகதீஷ் தன்கர் நிறுத்திவைத்தார். இது ஒட்டுமொத்த இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ட்விட்டரில் ஆளுநரை மம்தா பிளாக் செய்ததும் குறிப்பிடத்தக்கது. தற்போது ஜெகதீஷ் தன்கர் குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். இதேபோல் தெலங்கானாவில் ஆளுநராக இருக்கும் தமிழிசைக்கும் (கூடுதல் பொறுப்பாக, புதுவைக்குத் துணைநிலை ஆளுநராக நியமனம்) அந்த மாநிலத்தின் முதல்வராக இருக்கும் சந்திரசேகர ராவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

சந்திரசேகர ராவ்
சந்திரசேகர ராவ்

இதற்கு, தமிழிசை நடத்திய மக்கள் குறைதீர் கூட்டமே காரணம் எனக் கூறப்பட்டது. இதையடுத்து தெலங்கானா சட்டசபை கூட்டத்தொடரில் தமிழிசையை ஆளுங்கட்சி புறக்கணித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதேபோல் கேரள மாநிலத்திலும் பிரச்னை வெடித்திருக்கிறது. அந்த மாநிலத்தில் 13 மாநில பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர்களை நியமிப்பதில் ஆளுநரின் அதிகாரங்களைக் குறைக்கும் பல்கலைக்கழகச் சட்டத் திருத்த மசோதாவில் கையெழுத்திடுமாறு உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து கூறியிருந்தார்.

இதையடுத்து ஆளுநர் ஆரிப் முகமது கான் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்துக்காக அமைக்கப்பட்டிருக்கும் தேர்வுக்குழுவின் நியமனக்குழுவுக்கு செனட் கூட்டத்தை நடத்துவதற்கான தனது வழிகாட்டுலுக்கு இணங்காததற்காகப் பல்கலைக்கழக செனட்டின் 15 உறுப்பினர்களை நீக்கிவிட்டார். இதனால் அந்த மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறு பிரச்னைகள் இருக்கும் இடங்களிலெல்லாம் பா.ஜ.க ஆட்சி செய்யவில்லை. இதனால்தான் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர்களை ஆயுதமாகக்கொண்டு, மோடி அரசு நெருக்கடி கொடுத்துவருவதாக  அரசியல் நோக்கர்கள் விமர்சித்துவருகின்றனர். 

ஆனால், பாஜக தரப்பினரோ ஆளுநர்கள் தங்களின் கடமையை மட்டுமே செய்வதாகவும், தங்களுக்கு அரசியலமைப்பு வழங்கியிருக்கும் அதிகார வரம்புக்குள் மட்டுமே செயல்படுவதாகவும் கூறிவருகின்றனர். மேலும், மக்களை நேரடியாகச் சந்தித்துக் குறைகளைக் கேட்பது ஜனநாயகத்தில் அடிப்படையான விஷயம்தான் என்றும், அது எப்படி மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிடுவது ஆகும் என்றும் கேள்வி எழுப்புகிறார்கள். பல்கலைக்கழக விவகாரங்களைப் பொறுத்தவரையில் ஆளுநர், `வேந்தர்’ என்ற முறையில் மட்டுமே செயல்படுவதாகவும் கூறுகிறார்கள்.

அவர்கள் இவ்வாறு விளக்கமளித்தாலும், பாஜக ஆளும் மாநிலங்களில் இவ்வாறான முரண்கள் ஏற்படாமல் இருப்பதும் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது!