Published:Updated:

ராஜஸ்தான்: `6 பக்கக் காதல் கடிதம் எழுதியுள்ளார்!’ - ஆளுநரைக் கேலி செய்த முதல்வர்

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ( Photo: Twitter / Ashokgehlot51 )

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கும் சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டும் விஷயத்தில் தலையிடக்கோரி முதல்வர் அசோக் கெலாட் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் இடையேயான மோதல் தீவிரமாக நடந்து வருகிறது. முதல்வர் அசோக் கெலாட், சச்சின் பைலட் உள்ளிட்ட 19 சட்டமன்ற உறுப்பினர்களையும் தகுதி நீக்கம் செய்வதிலும் சட்டசபையைக் கூட்டி தனது பெரும்பான்மையை நிரூபிக்க முயற்சி செய்வதிலும் கவனம் செலுத்தி வருவதாகத் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால், சட்டசபையைக் கூட்டுவது தொடர்பாக அம்மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா தொடர்ந்து அமைதியாக இருந்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனால், அசோக் கெலாட் உள்ளிட்ட அவரது ஆதரவு உறுப்பினர்கள் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா மீது அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

சச்சின் பைலட், அசோக் கெலாட்
சச்சின் பைலட், அசோக் கெலாட்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கும் சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டும் விஷயத்தில் தலையிடக்கோரி முதல்வர் அசோக் கெலாட் கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டமன்ற கூட்டத்தை நடத்தக்கோரி அசோக் கெலாட், ஆளுநருக்கு அனுப்பிய முதல் பரிந்துரையை ஆளுநர் மிஸ்ரா நிராகரித்தார். சட்டசபை கூடுவதற்கான தேதி உள்ளிட்ட தரவுகள் இல்லாததைக் காரணம் காட்டி இதை நிராகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காரணங்களில் சச்சின் பைலட் பிரச்னையும் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து இரண்டாவது முறையாக அனுப்பிய பரிந்துரையையும் கல்ராஜ் மிஸ்ரா திருப்பி அனுப்பியுள்ளார். அதில், அசோக் கெலாட் ஜூலை 31-ம் தேதி சட்டசபையைக் கூட்ட வேண்டும் என்றும் கொரோனா வைரஸ் பரவல் மற்றும் பொருளாதாரம் தொடர்பான விவாதங்களை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், கொரோனா வைரஸ் பரவலைக் காரணம் காட்டி மூன்று வாரங்கள் சட்டமன்றக் கூட்டத்தை ஒத்திவைக்க மிஸ்ரா பரிந்துரைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அசோக் கெலாட்
அசோக் கெலாட்

அசோக் கெலாட், `கடந்த 70 ஆண்டுகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது இதுவே முதல்முறை' என தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் இந்தப் பிரச்னை தொடர்பாகப் பேசும்போது, ``ஆளுநர் நடந்துகொள்ளும் விதம் தொடர்பாக நேற்று பிரதமரிடம் பேசியுள்ளேன். ஆளுநர் மீண்டும் எங்களுக்கு ஆறு பக்க காதல் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமானது சட்டசபைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கும்போது கட்டாயமாக ஒப்புதல் அளிக்க வேண்டும்” எனக் கேலி தொனியில் கூறியுள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாகவும் மிஸ்ரா, அசோக் கெலாட்டிடம் கேள்வி எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. இதனால், ராஜஸ்தான் மாநில அரசியல்களம் தொடர்ந்து பரபரப்பாகவே இருந்து வருகிறது.

ராஜஸ்தான்:`அழகும் ஆங்கிலமும் மட்டும் போதாது!’ - சச்சின் பைலட்டை விமர்சித்த அசோக் கெலாட்
அடுத்த கட்டுரைக்கு