Published:Updated:

எழுவர் விடுதலை: `துச்சமாக நினைக்கிறார் கவர்னர்... அதிகாரமில்லை’- கட்சிகள், வல்லுநர்கள் சொல்வதென்ன?

எழுவர் விடுதலை

`அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஏழு பேரையும் விடுதலை செய்தே ஆக வேண்டும். உச்ச நீதிமன்றமும் அதனால்தான் அழுத்தம் கொடுக்கிறது' என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது. ஆளுநர் தரப்பில், ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கே இருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது.

எழுவர் விடுதலை: `துச்சமாக நினைக்கிறார் கவர்னர்... அதிகாரமில்லை’- கட்சிகள், வல்லுநர்கள் சொல்வதென்ன?

`அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஏழு பேரையும் விடுதலை செய்தே ஆக வேண்டும். உச்ச நீதிமன்றமும் அதனால்தான் அழுத்தம் கொடுக்கிறது' என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது. ஆளுநர் தரப்பில், ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கே இருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது.

Published:Updated:
எழுவர் விடுதலை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் வாடும் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட ஏழு பேரும் விரைவில் விடுதலை செய்யப்படலாம் என தமிழ் உணர்வாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த வேளையில், ஆளுநர் எடுத்த முடிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

கடந்த 2018, செப்டம்பர் 9-ம் தேதி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேரையும் விடுதலை செய்வதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுநருக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், ஆளுநர் அந்த மனு மீது எந்த முடிவும் எடுக்காமல் இருந்தார். அது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார், தண்டனை அனுபவித்து வருபவர்களில் ஒருவரான பேரறிவாளன். ஆளுநர் தாமதம் செய்துவருவது குறித்து உச்ச நீதிமன்றமும் கேள்வி எழுப்பியது. தொடர்ந்து, எழுவர் விடுதலை தொடர்பான முழக்கங்கள் மீண்டும் தீவிரமடைந்தன.

கவர்னருடன் முதல்வர்
கவர்னருடன் முதல்வர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தநிலையில், கடந்த 21-ம் தேதி, பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, `தமிழக ஆளுநர் அடுத்த மூன்று அல்லது நான்கு நாள்களில் முடிவெடுப்பார்’ என மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். ஆனால், விடுதலை குறித்து தெளிவுபடுத்தக் கூறி பேரறிவாளன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதையடுத்து, ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்க ஒரு வாரகால அவகாசம் வழங்கி (ஜனவரி 29-ம் தேதிக்குள்), வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம். தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஆளுநரைச் சந்தித்தார். விரைவில் அவர் நல்ல முடிவை எடுப்பார் என்றும், ஏழு பேரும் விடுதலை செய்யப்பட நூறு சதவிகித வாய்ப்பிருப்பதாகவும் அ.தி.மு.க தரப்பில் சொல்லப்பட்டது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தவிர, வழக்கறிஞர்கள் தரப்பிலும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஏழு பேரையும் விடுதலை செய்தே ஆக வேண்டும். உச்ச நீதிமன்றமும் அதனால்தான் அழுத்தம் கொடுக்கிறது என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் தரப்பில், ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கே இருப்பதாகத் தற்போது கூறப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர். ``ஆளுநரின் மறுதலிப்பு என்பது பிரதமர் மோடி , உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் நிலைப்பாடுதான்'' என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இந்தநிலையில், இந்த விவகாரம் குறித்து தி.மு.க-வின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளரும், வழக்கறிஞருமான இராஜீவ் காந்தி பேசும்போது,

இராஜீவ் காந்தி
இராஜீவ் காந்தி
AKSHITHATEKKI

``மாநில அரசுக்கு எந்தவொரு தகவலையும் சொல்லாமல், நேற்று, ஏழு பேர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் கோரிக்கையை கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நிராகரித்திருக்கிறார். அதுவும், உச்ச நீதிமன்ற வழக்குக்காக அவர்கள் செய்திருக்கும் அஃபிடவிட்டில்தான் அது தெரியவந்திருக்கிறது. இது அப்பட்டமான மாநில அரசின் உரிமை மீறல். அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான ஒரு செயல்பாடு. சட்டப் பிரிவு 161-ன்படி மாநில அரசுக்குதான் உரிய அதிகாரம் இருக்கிறது என நீதிமன்றம் சொல்லி, அதன்படிதான் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஏற்கெனவே, நளினி விடுதலை வழக்கில் தி.மு.க அமைச்சரவை ஒரு முடிவை எடுக்கிறது. ஆனால், அப்போதைய கவர்னர் பாத்திமா பீவி அதை நிராகரிக்கிறார். அது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்தபோது,`கவர்னருக்கு தனித்த அதிகாரம் எதுவும் இல்லை. அரசாங்கத்தின் முடிவுக்குக் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும்’ என உத்தரவிடப்பட்டது. அந்த அடிப்படையில்தான் நளினிக்கு தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த 25-ம் தேதி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அஃபிடவிட்டில்தான் இந்த விஷயம் தெரியவந்திருக்கிறது. ஆனால், 29-ம் தேதி முதல்வர், கவர்னரைச் சந்தித்துவிட்டு வந்தார். நல்ல முடிவை ஆளுநர் எடுப்பார் என அமைச்சர் ஜெயக்குமார் வெளியில் வந்து பேட்டி கொடுத்தார். அப்போது கவர்னர், இந்த விஷயம் குறித்து முதல்வரிடம் சொல்லவில்லையா... மாநில அரசுக்கு எழுவர் விடுதலை குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் மட்டுமல்ல, நடவடிக்கை எடுக்கும் அதிகாரம்கூட கொடுக்கப்படவில்லை என்பது இதன் மூலம் தெரியவந்திருக்கிறது. தி.மு.க ஆட்சியில் ஏன் விடுதலை செய்யவில்லை என்கிற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் உணர்வாளர்களின் அந்தக் கேள்வியில் நியாயம் இருக்கலாம், ஆனால், அதையே வன்மமாக முன்வைக்க முடியாது. காரணம், அப்போதைய சூழல் என்பது வேறு. ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு, தி.மு.க-வினர், தி.க-வினர் வீடுகள் எல்லாம் இடிக்கப்பட்டன. அப்போது யாரும் இது குறித்துப் பேசவே முடியாது.

நளினி
நளினி

2009-க்குப் பிறகு ஏற்பட்ட மக்களின் தன்னெழுச்சியே இந்த அளவுக்குப் பேசுவதற்கான வாய்ப்பை உருவாக்கியிருக்கிறது. ஆனால், நளினியின் மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கும் ஒரு விஷயத்தையாவது தி.மு.க அரசு செய்தது. அதைக் காரணம் காட்டித்தான் மற்ற மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்தோம். தற்போதைய நெகிழ்வுத்தன்மைக்கு அச்சாரம் போட்டது தி.மு.க அரசுதான். தற்போதும் ஏழு தமிழர் விடுதலையை தி.மு.க ஆதரிக்கவே செய்கிறது. அதனால், தமிழக முதல்வர் தி.மு.க-வின் மீது குற்றம்சாட்டுவது அரசியல் லாபத்துக்காகத்தானே தவிர வேறொன்றும் இல்லை. தமிழக அரசு நினைத்தால், இப்போதும்கூட இரண்டாவது தீர்மானம் நிறைவேற்றி எழுவரையும் விடுதலை செய்ய முடியும்'' என்கிறார் அவர்.

இது குறித்து, அ.தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜிடம் பேசினோம்,

``எழுவர் விடுதலை தொடர்பாக அம்மா காட்டிய வழியில் கடுமையான சட்டப் போராட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடத்திவருகிறார். சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி கனர்னருக்கும் அனுப்பப்பட்டது. நீதிமன்றமும் கவர்னரே முடிவெடுக்கலாம் என அறிவித்தது. முதல்வர், கவர்னரை நேரடியாகச் சந்தித்து கோரிக்கையும் முன்வைத்தார். கவர்னர் நேற்றுதான் தனது முடிவை அறிவித்திருக்கிறார். அவரின் செயல்பாட்டில் களங்கம் கற்பிப்பதோ, உள்நோக்கம் கற்பிப்பதோ தவறு. அதனால், எழுவர் விடுதலையில் இதுவரை காலம் தாழ்த்தியது போதும். கவர்னரின் பரிந்துரையை ஜனாதிபதி உடனடியாக நிறைவேற்றிக் கொடுப்பார் என நம்புகிறோம். இல்லாவிட்டால், தமிழக அரசின் சார்பாக தீவிரமான சட்டப் போராட்டத்தின் மூலம் வெல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம். சட்டமன்றத்தில் மீண்டும் ஒரு தீர்மானம் நிறைவேற்றுவதற்கு வாய்ப்பிருக்கிறதா என்பதையும் முதல்வர் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பார்'' என்கிறார் அவர்.

கோவை செல்வராஜ்
கோவை செல்வராஜ்

முன்னாள் நீதியரசர் அரி பரந்தாமனிடம் பேசினோம்,

``கருணை மனுக்களை தீர்மானம் செய்யும் அதிகாரம் குறித்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒன்று 72, மற்றொன்று 161. அவற்றில்,72 மத்திய அரசின் அதிகாரம் பற்றியது. பிரிவு 161 மாநில அரசின் அதிகாரம் பற்றியது. இதில், கவர்னருக்கோ, குடியரசுத் தலைவருக்கோ முடிவு செய்யும் எந்த அதிகாரமும் இல்லை. ஆனால், மத்திய அரசிடமோ, மாநில அரசிடமோ தங்களின் கருத்துகளைச் சொல்லும் உரிமை இருக்கிறது. ஆனால், மத்திய, மாநில அரசுகளால் எடுக்கப்படும் முடிவுகள் கவர்னரின், குடியரசுத் தலைவரின் பெயரில் வெளிவரும். அதுதான் அரசு இயந்திரம் செயல்படும் முறை.

1999-ல் உச்ச நீதிமன்றம், நான்கு பேருக்கு தூக்கு தண்டனையும், மூன்று பேருக்கு ஆயுள் தண்டனையும், 19 பேரை விடுதலையும் கொடுத்தது. தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேரும் அப்போதைய கவர்னரான பாத்திமா பீவிக்கு கருணை மனுவை அனுப்பினர். தி.மு.க தலைவர் கருணாநிதி அந்த நேரத்தில் அரசியல் செய்தார். தான் எதுவும் செய்யாமல், பாத்திமா பீவியை நிராகரிக்கச் சொன்னார். அவரும் நிராகரித்துவிட்டார். உடனடியாக நான்கு பேரும் உயர் நீதிமன்றத்துக்குச் சென்றனர். நீதிமன்றம் ஒரே மாதத்தில் கவர்னரின் உத்தரவை ரத்து செய்தது. அப்போது, கேபினெட்தான் முடிவு செய்ய வேண்டும், கவர்னருக்கு அதிகாரம் இல்லை என உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். அதன் பயனாக நளினிக்கு மட்டும் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது. பின்னர், 2000-ம் ஆண்டில் மற்ற மூவரும் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனுக்கு கருணை மனுவை அனுப்பினர். அவர், இவர்களுடைய கருணை மனுவை மட்டுமல்லாமல், காலிஸ்தான் போராட்டத்தில் பங்கு பெற்றவர்களின் கருணை மனுக்களையும் மத்திய அரசுக்கு அனுப்பாமல் தன்னிடமே வைத்திருந்தார். அவரைத் தொடர்ந்து, வந்த அப்துல் கலாம், பிரதீபா பாட்டில் ஆகியோரும் கேபினெட்டுக்கு அனுப்பாமல் வைத்திருந்தனர்.

அரி பரந்தாமன்
அரி பரந்தாமன்

ஆனால், அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக கேபினெட்டுக்கு அனுப்பப்பட்டு அத்தனையும் நிராகரிக்கப்படுகன்றன. ஆனால், 2014-ல் சதாசிவம் தலைமையிலான அமர்வு, குடியரசுத் தலைவர்களின் தாமதத்தைக் காரணம் காட்டி தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. தாமதப்படுத்திய மூன்று குடியரசுத் தலைவர்களுக்குத்தான் அவர்கள் நன்றி சொல்ல வேண்டும்.

கருணாநிதி 2006-11-ல் விடுதலை செய்திருக்கலாம். ஆனால், செய்யவில்லை. அவர் 2000-ல் செய்த அதே அரசியலையே, ஜெயலலிதாவும் 2011-ல் செய்தார். தன்னுடைய வழக்குக்கு மிகப்பெரிய வழக்கறிஞர்களைவைத்து வாதாடிய ஜெயலலிதா, அரசியலமைப்புச் சட்டத்தின் (இறையாண்மை அதிகாரம்) கீழ் விடுதலை செய்யாமல், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்கீழ் விடுதலை செய்தார். காரணம், ஜெயலலிதாவுக்கு அப்போதைய காங்கிரஸ் அரசுக்கு தமிழகத்தில் நெருக்கடி கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே இருந்தது. அதேபோல, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசும் உடனடியாகத் தடை வாங்குகிறது. பின்னர் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது.

காங்கிரஸ் ஆட்சிக்குப் பிறகு, பா.ஜ.க இந்த வழக்கை மூர்க்கத்தனமாகக் கையாண்டது. நீதிமன்றமும் மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் விடுதலை செய்ய முடியாது எனத் தீர்ப்பளிக்கிறது. ஆனால், 161-ன்படி விடுதலை செய்தால் ஒப்புதல் தேவையில்லை எனவும் வழிகாட்டியது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா நினைத்திருந்தால் அப்போதே விடுதலை செய்திருக்கலாம். ஆனால், அவர் செய்யவில்லை. 2018-ல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கேபினெட் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால், தமிழக மக்களின் உனர்வுகளை மிகவும் துச்சமாகப் பார்த்த ஆளுநர், அந்தத் தீர்மானத்தின்மீது இரண்டு ஆண்டுகள், நான்கு மாதங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை. பிறகு, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி கால அவகாசம் கொடுத்த பிறகு, தற்போது மீண்டும் ஜனாதிபதிக்குத்தான் அதிகாரம் என நிராகரித்திருக்கிறார். ஆனால், குடியரசுத் தலைவருக்கான அதிகாரம் என்பதும் மத்திய அரசுக்கான அதிகாரம்தான். ஜெயலலிதா தற்போது முதல்வராக இருந்திருந்தால் கவர்னருக்கு நெருக்கடி கொடுத்திருப்பார். ஆனால், எடப்பாடி பழனிசாமி அரசு மத்திய அரசுக்கு பயந்து அமைதி காக்கிறது. 25-ம் தேதி ஆர்டர் போட்டிருக்கிறார் கவர்னர். ஆனால், 29-ம் தேதி முதல்வரைச் சந்தித்தபோது அது குறித்துச் சொல்லவில்லையென்றால் முதல்வரை அவர் மதிக்கவில்லை என்றே அர்த்தமாகிறது'' என்கிறார் அவர்.

நாராயணன்
நாராயணன்

இந்த விஷயத்தில் ஜனாதிபதி எடுக்க வேண்டிய முடிவு என்பது மத்திய அரசின் முடிவுதான் என முன்னாள் நீதியரசர்கள், வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர். எனில், மத்திய அரசு என்ன முடிவெடுக்கப்போகிறது... பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்,

``மத்தியப் புலனாய்வு நிறுவனங்கள் விசாரிக்கும் வழக்குகளில் முடிவெடுக்கும் முழு உரிமை மத்திய அரசுக்குத்தான் இருக்கிறது என ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு மிகத் தெளிவாகச் சொல்லிவிட்டது. இரண்டு வருடங்களுக்கு முன்பாக, 161-ன் கீழ் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியபோதே நாங்கள், இதில் ஆளுநருக்கு அதிகாரம் இல்லை எனத் தெளிவாகச் சொல்லிவிட்டோம். அப்படி ஒருவேளை இருந்திருந்தால் 2006-11 வரை, தி.மு.க அரசு இருந்தபோது, மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை மட்டுமே இருந்தநிலையில், ஏன் அவர்களை விடுவிக்கவில்லை. குறைந்தபட்சம் பரோலில்கூட ஏன் விடவில்லை என்பதை தி.மு.க கூட்டணிக் கட்சியினரோ, தமிழ்த் தேசியம் பேசுபவர்களோ ஏன் கேட்க மறுக்கிறார்கள். இந்த அரசைப் பொறுத்தவரை, 'இவர்களை விடுதலை செய்வது சர்வதேச அளவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் விடுவிக்க முடியாது' என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. அதுதான் எங்களின் நிலைப்பாடு. இந்தக் கோப்பு திரும்பவும் மத்திய அமைச்சரவைக்குச் செல்லும்போதுதான் என்ன முடிவெடுப்பார்கள் என்பது தெரியவரும்'' என்கிறார் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism