Published:Updated:

`மத்திய அரசின் கருத்துப்படியே ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நடக்க வேண்டும்'- ஆளுநரின் அறிவுரைகள் சரியா?!

ஆளுநர் ஆர்.என்.ரவி

`மத்திய அரசின் கருத்துப்படியே ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நடந்துகொள்ள வேண்டும்’ எனத் தெரிவித்து அடுத்த பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறார், ஆளுநர் ரவி. அவர் கூறியது சரிதானா என்ற கேள்வி எழுகிறது.

`மத்திய அரசின் கருத்துப்படியே ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நடக்க வேண்டும்'- ஆளுநரின் அறிவுரைகள் சரியா?!

`மத்திய அரசின் கருத்துப்படியே ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நடந்துகொள்ள வேண்டும்’ எனத் தெரிவித்து அடுத்த பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறார், ஆளுநர் ரவி. அவர் கூறியது சரிதானா என்ற கேள்வி எழுகிறது.

Published:Updated:
ஆளுநர் ஆர்.என்.ரவி

கலந்துரையாடல் நிகழ்ச்சி!

சென்னை, கிண்டியிலிருக்கும் ஆளுநர் மாளிகையில் இந்திய குடிமைப் பணிக்கான நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளும் வகையில், 'எண்ணித் துணிக' என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி கடந்த ஜனவரி 10-ம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 60 பேர் கலந்துகொண்டனர். அவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் கேள்விகளை எழுப்பி ஆலோசனை பெற்றுக்கொண்டனர்.

மத்திய அரசு
மத்திய அரசு

குறிப்பாக, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நிலவும் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான முரண்கள் குறித்தும், மாநிலப் பிரச்னைகள் குறித்த கேள்விகளுக்குப் பதில் அளிப்பது குறித்தும், தேசநலன், மனித உரிமைகள், மொழிப் பிரச்னைகளை அரசு நிர்வாகத்தில் உயர்பதவியில் இருக்கும் அதிகாரிகள் எவ்வாறு கையாளுவது என்பது குறித்தும் மூன்று மணி நேரத்துக்கு மேல் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

``சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும்!"

இதில் உரையாற்றிய ஆளுநர் ரவி, "நேர்முகத் தேர்வில் உங்களது திறமை முக்கியம் இல்லை. உங்களை எப்படி நீங்கள் வெளிப்படுத்திக்கொள்ளப் போகிறீர்கள் என்பதற்கான தேர்வுதான் நேர்முகத் தேர்வு. இதில் நல்ல ஆற்றலுடன், துடிப்புடன் இருக்க வேண்டும். சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும். கேள்விகளுக்கான பதிலைச் சுருக்கமாகக் கூற வேண்டும்.

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி

ஒரு கேள்விக்கு விடை தெரியாவிட்டால், தயங்காமல் `தெரியாது’ என்று கூறலாம். அதில் தவறில்லை. எந்தக் கேள்விக்கும் அவசரமாக பதில் அளிக்க வேண்டாம். நிதானமாகவே பதில் அளியுங்கள்.

``மத்திய அரசின் கருத்துப்படி..."

அதிகாரிகள் என்பவர்கள் வேறு. சமூக ஆர்வலர்கள் என்பது வேறு. மத்திய அரசுப் பணிகளுக்கு அதிகாரிகள்தான் தேவை. மனித உரிமை ஆர்வலர்களோ, தனிமனித சுதந்திரம் பேசுபவர்களோ தேவையில்லை. அதிகாரிகள் என்பவர்கள் அதிகாரிகளாகவே இருக்க வேண்டும். சமூக ஆர்வலர்களாக இருக்கக் கூடாது. அதிகாரிகள் உண்மைகளின் அடிப்படையிலும், ஆதாரங்களின்படியுமே செயல்பட வேண்டும்.

தமிழகம் Vs ஆளுநர்
தமிழகம் Vs ஆளுநர்

ஒரு சமூக ஆர்வலரைப்போல மற்றவர்களின் எண்ணங்களை வெளிப்படுத்தும் வகையில் செயல்படக் கூடாது. மத்திய, மாநில அரசுகளுக்கிடையே கருத்து வேறுபாடு இருக்கும்போது, மத்திய அரசின் கருத்துப்படியே அனைத்து மாநிலங்களிலும் குடிமைப் பணி அதிகாரிகள் நடந்துகொள்ள வேண்டும்.

"அரசியலாக்கும்போதுதான் பிரச்னை..."

`மத்திய அரசுப் பணிக்கு வருவதற்கு ஏன் விரும்புகிறீர்கள்?’ என நேர்முகத் தேர்வில் கேள்வி கேட்கப்பட்டால், `மக்களுக்குச் சேவை செய்ய’ என்று எல்லோரையும்போல பதில் சொல்லாமல் 'சேவைக்காக மட்டும் மத்திய அரசுப் பணிக்கு வரவில்லை. மத்திய அரசுப் பணி என்பது சமூக கௌரவத்தையும், ஊதியத்தையும் தருவதாலும் இந்தப் பணியை நான் விரும்புகிறேன்' என நேர்மையாக பதில் சொல்லுங்கள். நிர்வாகரீதியாக மத்திய அரசை `ஒன்றிய அரசு’ என்று அழைப்பதில் தவறில்லை.

ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு

ஆனால், அதை அரசியலாக்கும்போதுதான் பிரச்னை எழுகிறது. அவமதிக்கும் வகையில் ஒன்றிய அரசு என்று தமிழ்நாட்டில் சிலர் மொழிபெயர்த்து அழைப்பதுதான் பிரச்னையை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டைத் தவிர, பிற மாநிலங்களில், `ஒன்றிய அரசு’ என்று கூறி யாரும் பிரச்னையை ஏற்படுத்துவதில்லை. தமிழ்நாட்டில் மட்டும் அரசியல் காரணங்களுக்காக இப்படியான பிரச்னைகள் ஏற்படுத்தப்படுகின்றன.

``தமிழ் உயர்ந்த செம்மொழி..."

ஜல்லிக்கட்டு பல ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் நடந்துவருகிறது. எனவே, கலாசாரம் சார்ந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளைத் தமிழகத்தில் தடைசெய்ய வேண்டும் என்று கூற முடியாது. அதேநேரம் விலங்குகளுக்கும் பாதிப்பு இல்லாமல், வீரர்களுக்கும் பாதிப்பும் இல்லாமல் நடத்தப்பட வேண்டும் என்று நேர்முகத் தேர்வில் ஜல்லிக்கட்டு குறித்து கேள்வி எழுப்பினால் பதில் அளிக்கலாம்.

தமிழ்
தமிழ்

அனைவருமே பல மொழிகளைக் கற்றுக்கொள்ள முன்வர வேண்டும். தமிழ் உயர்ந்த செம்மொழி. தமிழ் குறித்த பெருமிதம் தமிழக மக்களுக்கு அதிகமாக இருக்கிறது. தமிழக அரசு இருமொழிக் கொள்கையைப் பின்பற்றுகிறது. தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றி மேலும் ஒரு மொழியைக் கற்றுத் தரலாம். அது, தமிழக மாணவர்களுக்கு உதவும். குறிப்பாக மத்திய அரசுப் பணிக்கு செல்லும் தமிழக மாணவர்களுக்கு உதவும்.

``சட்டப்படியே போராட்டம்..."

ஓர் இந்திய மொழியைக் கூடுதலாக கற்றுக்கொள்வது அனைவருக்கும் பயன் தரும். அதேநேரம் இந்தியாவில் அதிகம் பேசப்படும் ஒரே மொழி இந்திதான். எனவே, இந்தியைக் கற்றுக்கொள்வது மாணவர்களுக்குப் பெரிய அளவில் உதவும். இந்தியைக் கட்டாயமாகப் படிக்க வேண்டும் என நான் கூறவில்லை.

மத்திய அரசு
மத்திய அரசு

ஆனால், இந்தியைப் படிப்பது அனைத்து மாநில மாணவர்களுக்கும் உதவும். தமிழ்நாட்டு மக்கள் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டவர்களாக இருக்கலாம். ஆனால், சட்டம் கொடுத்திருக்கும் உரிமைகளின்படியே போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் போராட்டங்கள் நடைபெறுவது இல்லை. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலுமே போராட்டம் நடக்கிறது" என்றார்.

``நடுநிலையோடு இருக்க வேண்டும்!"

இது குறித்து நம்மிடம் பேசிய அரசியல் ஆய்வாளர் துரைகருணா, "ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இந்திய ஆட்சிப்பணியில்தான் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் மாநில அரசின் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டவுடன், அந்தந்த மாநில அரசுகளின் செயல்பாடுகளில்தான் கவனம் செலுத்துவார்கள். ஒரு பிரச்னை வரும்போது மத்திய, மாநில அரசுகளுக்கிடையே நடுநிலையோடு அவர்கள் இருக்க வேண்டும்.

துரை கருணா
துரை கருணா

அதுதான் சரியான பார்வையாக இருக்கும். மாநில அரசு சொல்வதைக் கேட்காதீர்கள், மத்திய அரசு சொல்வதைக் கேட்க வேண்டும் என்று கூறுவது சரியான அணுகுமுறை கிடையாது.

தேவையற்றவைதான்!

காலம் காலமாக திமுக தொடங்கிய இத்தனை ஆண்டுகளாக `இந்தியப் பேரரசு’, `மத்திய அரசு’, `மைய அரசு’, `நடுவண் அரசு’ என்றுதான் சொல்வார்கள். திடீரென `ஒன்றிய அரசு’ என்று சொல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டது ஏன்... அதனால்தான், 'யூனியன் கவர்ன்மென்ட்’ என்பதை `ஒன்றிய அரசு’ என்று சொல்வதில் தவறு இல்லை. அரசியல் உள்நோக்கம் இருக்குமேயென்றால் அதுதான் தவறு' என்று ஆளுநர் தெரிவித்திருக்கிறார். அதேபோல் `திராவிட மாடல்’ என்றும் யாரும் சொல்லவில்லை.

திராவிடக் கட்சிகள் நடத்தியது எல்லாமே திராவிட மாடல் ஆட்சிதான். ஆனால், `திராவிட மாடல் ஆட்சி’ என்றும், `ஒன்றிய அரசு’ என்றும் அடையாளப்படுத்துவதைத்தான் ஆளுநர் மற்றும் பாஜக-வினர் விமர்சனம் செய்கிறார்கள். இவ்வாறு அழைப்பது தேவையற்றதுதான். இதுவரை திராவிடக் கட்சித் தலைவர்கள் பின்பற்றிவந்த நடைமுறைகளிலிருந்து மாறுபட வேண்டியதில்லை" என்றார்.