Published:Updated:

ஆளுநரின் தேநீர் விருந்து: புறக்கணித்த கூட்டணிக் கட்சிகள்... ஆளும் திமுக ‘டீல்’ செய்தது சரியா?!

முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி

``தமிழருக்கான ஒரு பண்பாடும் இருக்கிறது. அதைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பு முதலமைச்சருக்கும் இருக்கிறதல்லவா! அதனால்தான் திமுக கலந்துகொண்டது. கூட்டணிக் கட்சிகள் எல்லோருக்கும் தனிப்பட்ட கருத்துகள் இருக்கின்றன” - பேரா.ஜெ.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

Published:Updated:

ஆளுநரின் தேநீர் விருந்து: புறக்கணித்த கூட்டணிக் கட்சிகள்... ஆளும் திமுக ‘டீல்’ செய்தது சரியா?!

``தமிழருக்கான ஒரு பண்பாடும் இருக்கிறது. அதைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பு முதலமைச்சருக்கும் இருக்கிறதல்லவா! அதனால்தான் திமுக கலந்துகொண்டது. கூட்டணிக் கட்சிகள் எல்லோருக்கும் தனிப்பட்ட கருத்துகள் இருக்கின்றன” - பேரா.ஜெ.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி

கடந்த ஒரு மாதமாகவே ஆளுங்கட்சியான திமுக-வுக்கும், ஆளுநர் ஆர்.என் ரவிக்குமான அரசியல், நிர்வாக மோதல்கள் உச்சமடைந்தன. காசி தமிழ்ச் சங்கம் விழாவுக்கு சென்று வந்தவர்களைப் பாராட்டிய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ரவி, ``தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்பதே பொருத்தமாக இருக்கும்” என்று தெரிவித்திருந்தார். இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மட்டுமல்ல, கட்சி சாராத பல்வேறு எழுத்தாளர்களும், சமூக அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து சட்டமன்றத்தில் அரசு தயாரித்துக் கொடுத்த உரையின் சில பகுதிகளை நீக்கியும், சில பகுதிகளைச் சேர்த்தும் வாசித்தார் என்று ஆளுநர்மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. தொடர்ந்து ஆளுநர் சட்டமன்றத்தில் இருந்தபோதே, அவர் பேசியதற்கு எதிரான தீர்மானத்தை வாசித்தார் முதல்வர் ஸ்டாலின். இதனால் ஆளுநர் ரவி வெளிநடப்பு செய்தார்.

அதன் பிறகு ஆளுநர் மாளிகை அனுப்பிய பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு இலச்சினை நீக்கப்பட்டு, இந்திய அரசின் இலச்சினை இடம்பெற்றது. திருவள்ளுவர் ஆண்டு என்பதும் தவிர்க்கப்பட்டது. இப்படித் தொடர்ந்து ஆளுநரின் நடவடிக்கைகள் பேசுபொருளான நிலையில், அவர்மீதான புகார்களை அடுக்கி முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை தமிழ்நாடு சட்ட அமைச்சர் ரகுபதி, திமுக தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் குடியரசுத் தலைவர் முர்முவிடம் கொடுத்தார்கள். இதையடுத்து டெல்லிக்குச் சென்று வந்தார் ஆளுநர். அதன் பிறகு ஆளுநர் - தமிழக அரசு உடனான உறவில் இலகுத்தன்மை உருவாகியிருப்பதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, பொன்முடி
அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, பொன்முடி

இந்த நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைப்பெறும் தேநீர் விருந்துக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள், நீதிபதிகள், அரசு உயரதிகாரிகள், கல்லூரி மாணவ-மாணவிகள், மத்திய அரசு விருது பெற்றோர், சாதனையாளர்கள் போன்றோருக்கு அழைப்பு விடுப்பது வழக்கம்.

அதில் பங்கேற்காமல் அரசியல் காரணங்களுக்காகப் புறக்கணிப்பதும் சமீபகால அரசியலில் நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு குடியரசு தின தேநீர் விருந்துக்கு ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் ஒன்றான விசிக தலைவர் திருமாவளவன் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாகத் தெரிவித்தார். மேலும் ஆளுநரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார். அதைத் தொடர்ந்து திமுக கூட்டணிக் கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக ஆகிய கட்சிகளும் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக அறிவித்தன.

நிலைமை இவ்வாறு இருக்க, தேநீர் விருந்தில் கலந்துகொள்ள வேண்டி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தொலைபேசியில் அழைப்பு விடுத்தார். மேலும், ஆளுநரின் செயலாளர் நேரில் வந்து முதலமைச்சருக்கு அழைப்பிதழை வழங்கினார். அவர்களுடனான சந்திப்புக்குப் பிறகு முதல்வர் தேநீர் விருந்தில் கலந்துகொள்ள ஒப்புக்கொண்டிருக்கிறார். இதையடுத்து தி.மு.க சார்பில் முதல் ஆளாக வந்திருந்தார் அமைச்சர் பொன்முடி.

பரிசு பெற்ற மாணவிகள்
பரிசு பெற்ற மாணவிகள்

அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் வந்திருந்தானர். அ.தி.மு.க தரப்பில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்றனர். புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி, ஜி.கே.வாசன், ஜான் பாண்டியன், பூவை ஜெகன் மூர்த்தி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும், பா.ஜ.க சார்பாக அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்களான சி.பி.ராதாகிருஷ்ணன், நாராயணன் திருப்பதி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டனர். திரைத்துறையிலிருந்து பின்னணிப் பாடகி பி.சுசீலா, கங்கை அமரன், ஐஷ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின்
ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின்

சரியாக முதல்வர் வந்த நேரத்திலேயே, அண்ணாமலையும் வந்ததால் நுழைவாயிலிலேயே இருவரும் கைகொடுத்து நலம் விசாரித்தனர். பிறகு ஆளுநர் மாளிகையிலுள்ள தர்பார் ஹாலில் முதல்வர், ஆளுநர், அமைச்சர் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பத்து நிமிடங்களுக்கு மேல் கலந்து பேசியதை அடுத்து நிகழ்வுக்காக அமைக்கப்பட்ட அரங்கத்துக்குள் வந்தனர். வந்தவர்கள், அனைவரது இடத்துக்கே சென்று வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்ட பிறகு, கலாஷேத்ரா குழுவினரின் பரதநாட்டிய நடனத்தைக் கண்டுகளித்தனர்.

பின், காலை குடியரசு தின விழாவில் சிறப்பாக நடன நிகழ்ச்சிகளை வழங்கிய ராணி மேரி கல்லூரி மாணவிகளுக்கும், அசோக் நகர் அரசு மேல் நிலைப் பள்ளி மாணவிகளுக்கும் முதல் பரிசுகள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து குடியரசு தின அணி வகுப்பில் முதல் பரிசு வென்ற தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி-யும், இரண்டாம் பரிசு வென்ற தீயணைப்புத்துறை டி.ஜி.பி-யும் பாராட்டுகளைப் பெற்றுக்கொண்டனர்.

பரிசு வென்ற டி.ஜி.பி
பரிசு வென்ற டி.ஜி.பி

உடன் உள்துறைச் செயலாளர் பணீந்தர் ரெட்டி இருந்தார். இதையடுத்து கொடிநாளுக்காக அதிக பணம் வசூலித்ததற்காக சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ், கோவை ஆணையர் பிரதாப், தகவல் தொலைத் தொடர்பு இயக்குநர் ஜெயசீலன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோருக்குக் கோப்பைகள் வழங்கப்பட்டன. இந்தச் சமயத்தில் புரோட்டோகால் பிரகாரம் மேடையில் போடப்பட்டிருந்த இருக்கையில், தன் இருக்கையில் சீனியாரிட்டி அடிப்படையில் ககன்தீப் சிங் பேடியை அமரும்படி செய்த ஆளுநரின் தனிச்செயலாளர் ஆனந்த் ராவ் வீ பட்டேலின் செயல் கவனம் பெற்றது.

ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் துரை முருகன்
ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் துரை முருகன்

நிகழ்வு முடிந்த பிறகு ஆளுநருடன் தேநீர் விருந்தில் பங்கேற்றார் முதல்வர் ஸ்டாலின். அந்த மேசையில் விருதுபெற்றோர், விவசாயத்தில் சாதனை புரிந்தோர் போன்றோரை அமரவைத்தார். ஆளுநர் மாளிகைத் தரப்பினரிடம் நிகழ்வு குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, ‘ஆளுநருக்கு ஒரு நூறு விவசாயிகளோடு மரத்தடியில் அமர்ந்து பேச வேண்டும். அவர்களுடன் உணவு அருந்த வேண்டும் என்று ஆசை. அதற்காகத்தான் இந்த முறை, ஆளுநர் அருகில் பெரும் பெரும் தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் அமர்ந்திருப்பதற்கு மாறாக விவசாயிகளோடும், எளியவர்களோடும் மேசையைப் பகிர்ந்துகொண்டார்’ என்றார்கள்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

இது தொடர்பாக, திமுக செய்தித் தொடர்பு இணைச்செயலாளர் பேரா.ஜெ.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், ``ஆளுநர் மாளிகை விழாவில் பங்கேற்கக் கூடாது என்று ஒருவேளை முடிவெடுத்தால், எதற்காக அந்த முடிவு எடுக்கப்பட்டது என்ற ஒன்று இருக்கிறது. ‘நான் தமிழ்நாடு என்று மாற்றிக்கொள்கிறேன், தமிழ்நாட்டின் இலச்சினையை பயன்படுத்துகிறேன்’ என்று ஆளுநர் தன்னை மாற்றிக்கொள்கிறார். அதைத் தாண்டி இரு முறை தனிப்பட்ட முறையில் முதல்வருக்கு போன் செய்து அழைக்கிறார். என்ன இருந்தாலும் நம் விருந்தினர் அவர். கொள்கைரீதியான பிரச்னைகளை நாம் முன்வைத்தோம். அதைப் புரிந்துகொண்டு மாறிவிட்டார். அதன் பிறகு தமிழருக்கான ஒரு பண்பாடும் இருக்கிறது. அதைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பு முதலமைச்சருக்கும் இருக்கிறதல்லவா... அதனால் திமுக கலந்துகொண்டது. கூட்டணிக் கட்சிகள் எல்லோருக்கும் தனிப்பட்ட கருத்துகள் இருக்கின்றன. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலையில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் என வெவ்வேறு நிலைப்பாடு இருந்தது. எனவே, ஆளுநர் தேநீர் விருந்து புறக்கணிப்பில் அவர்களது நிலைப்பாடு சரியானதாக இருந்திருக்கலாம். ஆனால், திமுக கொள்கையில் உறுதியாக இருக்கிறது” என்றார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, “விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள், திமுக என எல்லோருமே தனித்தனிக் கட்சிகள். கோட்பாட்டு அடிப்படையில் இணைந்து செயல்படுகிறோம். எங்களுக்குத் தனியாக முடிவெடுப்பதற்கு அதிகாரம் இருக்கிறது. அதேபோல் அவர்களுக்கும். எனவே, திமுக எடுத்த முடிவை விமர்சிக்க விரும்பவில்லை. நாங்கள் ஆளுநர் தொடர்பான விஷயங்களில் உறுதியாகவும் தெளிவாகவும் இருக்கிறோம். திமுக-தான் தோழமைக் கட்சிகளைத் தூண்டிவிடுகிறது, இயக்குகிறார்கள் என்கிற பரப்புரை இதன் மூலமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.

வன்னி அரசு
வன்னி அரசு

நாங்கள் எப்போதும் தனித்துத்தான் முடிவெடுப்போம். திமுக-வோ அல்லது அதன் தலைமையோ எப்போதும் எங்களை வழிநடத்துவதில்லை. ஆளுநர் பதவி ஏற்க வருவதற்கு முன்னரே அவரை எதிர்த்து அறிக்கை கொடுத்தவர் எங்கள் தலைவர். நாங்கள் எங்கள் அரசியல் பின்னணியில் செயல்படுகிறோம். விசிக-வைப் பொறுத்தவரை ஆளுநர் வெளியேற்றப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்” என்றார்.