அலசல்
சமூகம்
Published:Updated:

ஆளுநர்களின் ஆடுபுலி ஆட்டம்... எப்படிச் சமாளிக்கிறார்கள் முதல்வர்கள்!

ஸ்டாலின், ஆர்.என்.ரவி
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டாலின், ஆர்.என்.ரவி

மத்திய அரசு, தங்களுக்கு ஆகாத கட்சிகள் ஆளுகிற மாநிலங்களில், ஆளுநர்கள் மூலமாகப் பல்வேறு குடைச்சல்களைக் கொடுத்துவருகிறது என்ற குற்றச்சாட்டு ஒவ்வொரு நாளும் எழுந்துகொண்டிருக்கிறது

தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களின் அரசுகளுக்கு எதிராக ஆளுநர்கள் ஆடிவரும் ஆடுபுலி ஆட்டத்தால், அந்த மாநிலங்களின் நிர்வாகமும், அரசியல் களமும் களேபரமாகியிருக்கின்றன. ஆளுநர்களின் இந்த சர்ச்சைக்குரிய விவகாரங்களை அந்தந்த மாநிலங்களின் முதல்வர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்... சமாளிக்கிறார்கள்?

ஆளுநர் அரசியல்

தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, ஜார்க்கண்ட், டெல்லி, பஞ்சாப் உட்பட பா.ஜ.க அல்லாத கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களில், ஆளுநர்களின் சர்ச்சைக்குரிய செயல்பாடுகளால் அந்தந்த மாநில அரசுகளின் நிர்வாகத்துக்குள் சலசலப்புகள் அதிகரித்திருக்கின்றன. பொதுவெளியில் ஆளுநர்களுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே நடைபெற்றுவரும் மோதல் அரசியல் தற்போது பரபரப்பின் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. இதனால், தங்களுக்குக் குடைச்சல் கொடுத்துவரும் ஆளுநர்களுக்கு எதிராகத் தீவிரமான முடிவுகளைச் சில மாநில அரசுகள் எடுக்கத் தொடங்கியிருக்கின்றன.

வி.கே.சக்சேனா - அரவிந்த் கெஜ்ரிவால்
வி.கே.சக்சேனா - அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில், மாநில அரசைத் தடம்புரளச் செய்யும் வகையில் மோசமாக நடந்துகொள்கிறார் என்று துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு. பஞ்சாப் மாநிலத்தில், ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்குச் செலவான ரூ.8 லட்சத்தைத் தருமாறு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தரப்பு பில் அனுப்ப, `அதையெல்லாம் தர முடியாது’ என்று பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு மறுத்துவிட்டது.

ஜார்க்கண்ட்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் அரசுக்கு எதிராக ஆளுநர் ரமேஷ் பைஸ் கடும் நெருக்கடிகளைக் கொடுத்துவருவதாகச் செய்திகள் வந்துகொண்டிருந்த நிலையில், தற்போது இரு தரப்புக்குமான மோதல் தீவிரமடைந்திருக்கிறது. தெலங்கானா மாநிலத்தில் ராஜ் பவனில் புகார்ப் பெட்டியை ஆளுநர் தமிழிசை வைத்ததிலிருந்து ஆளுநருக்கும், முதல்வர் சந்திரசேகர ராவுக்கும் இடையே மோதல் வெடித்தது. தற்போது, ‘தெலங்கானா அரசால் என் போன் ஒட்டுக்கேட்கப்படுகிறது’ என்று ஆளுநர் தமிழிசை புலம்பும் அளவுக்கு நிலைமை சீரியஸாகிவிட்டது.

மு.க.ஸ்டாலின் - ஆர்.என்.ரவி
மு.க.ஸ்டாலின் - ஆர்.என்.ரவி

ஆளுநர்களின் சித்து வேலைகள்!

மத்திய அரசு, தங்களுக்கு ஆகாத கட்சிகள் ஆளுகிற மாநிலங்களில், ஆளுநர்கள் மூலமாகப் பல்வேறு குடைச்சல்களைக் கொடுத்துவருகிறது என்ற குற்றச்சாட்டு ஒவ்வொரு நாளும் எழுந்துகொண்டிருக்கிறது. ஆளுநர்களை வைத்து ஆட்டம் காட்டும் அரசியலை பா.ஜ.க மட்டுமல்ல, இதற்கு முன்பு நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சியும் நீண்டகாலமாகச் செய்துகொண்டிருந்தது.

மாநில அரசுகளுக்குக் குடைச்சல்கள் கொடுப்பது மட்டுமல்ல, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை, பிரிவு-356 மூலமாகக் கலைக்கிற காரியத்தைச் சர்வ சாதாரணமாகச் செய்துவந்தது காங்கிரஸ் அரசு. எஸ்.ஆர்.பொம்மை வழக்கில், உச்ச நீதிமன்றம் போட்ட கடிவாளத்தால், மத்திய அரசால் மாநில அரசுகளைக் கலைக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும், ஆளுநர்கள் மூலமாக மத்திய அரசு பல குடைச்சல்கள் கொடுப்பது மட்டும் தீரவில்லை.

ஆரிஃப் முகமது - பினராயி விஜயன்
ஆரிஃப் முகமது - பினராயி விஜயன்

பொறுமை இழந்த ஸ்டாலின்!

தமிழகத்தில் முன்பு ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், மாவட்டம் மாவட்டமாகச் சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். அதை, அன்று எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. சர்ச்சைக்குரிய ஒரு விவகாரத்தில் தனது பெயர் அடிபட்ட பிறகு, அமைதியாகிவிட்டார் ஆளுநர். அவருக்குப் பிறகு ஆளுநராக வந்த ஆர்.என்.ரவியோ, `கல்விக் கொள்கை, மொழிக்கொள்கை, நீட் தேர்விலிருந்து விலக்கு என தி.மு.க அரசின் கொள்கை நிலைப்பாட்டுக்கு மாறான வகையிலேயே பேசுவதையும் செயல்படுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்’ என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட பல மசோதாக்களை, பல மாதங்களாகக் கிடப்பிலேயே போட்டுவைத்திருக்கிறார் ஆளுநர். இனிமேலும் அவரைச் சமாளிக்க முடியாது என்ற முடிவுக்கு வந்த தி.மு.க., தனது கூட்டணிக் கட்சி எம்.பி-க்களுடன் சேர்ந்து, ‘ஆளுநரைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள்’ என்று குடியரசுத் தலைவரிடம் முறையிட்டிருக்கிறது. இதற்கு முன்பு நாகாலாந்து மாநில ஆளுநராக ஆர்.என்.ரவி இருந்தபோது, அவரது பல நடவடிக்கைகள் விமர்சிக்கப்பட்டன. பெரும் சர்ச்சைகளுக்குப் பிறகே அங்கிருந்து தமிழ்நாட்டுக்கு மாற்றப்பட்டார் ஆர்.என்.ரவி. அதை வரவேற்று, நாகாலாந்து மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள். தற்போது, தமிழ்நாட்டில், ஆளுநருக்கு எதிரான மனநிலை தீவிரமடைந்திருக்கிறது.

ரமேஷ் பைஸ் - ஹேமந்த் சோரன்
ரமேஷ் பைஸ் - ஹேமந்த் சோரன்

‘துணிவிருந்தால் வந்து தாக்குங்கள்!’

ஆனால், ‘கேரளா ஆளுநர் ஆரிஃப் முகமது கானுடன் ஒப்பிடுகையில், ஆர்.என்.ரவி பரவாயில்லைங்க…’ என்கிறார்கள் கேரள அரசியல் விமர்சகர்கள்.. ‘கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் அச்சம் நிறைந்த ஆட்சி நடக்கிறது’ என்கிற அளவுக்கு இடது ஜனநாயக முன்னணி அரசை ஆளுநர் ஆரிஃப் முகமது கான் விமர்சித்துவருகிறார். ஆர்.எஸ்.எஸ்-ஸின் அரசியல் செயல்திட்டங்களைத் திணிக்க ஆளுநர் முயல்கிறார் என்று ஆளும் சி.பி.ஐ(எம்) விமர்சித்து வருகிறது. இந்த மோதலின் உச்சமாக, ‘மற்ற இடதுசாரி கட்சிகளைத் திரட்டிக் கொண்டு ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்துவோம். அதில், தி.மு.க எம்.பி திருச்சி சிவாவும் கலந்துகொள்வார்’ என்று சி.பி.ஐ(எம்) மாநிலச் செயலாளர் கோவிந்தன் மாஸ்டர் அறிவித்திருக்கிறார். அதற்கு, ‘உங்களுக்குத் துணிச்சல் இருந்தால், ஆளுநர் மாளிகைக்கு வந்து தாக்குதல் நடத்திப்பாருங்கள்’ என்று ஆரிஃப் முகமது கான் சவாலேவிட்டிருக்கிறார்.

எங்கே கொண்டுபோய்விடப் போகின்றனவோ இந்த மோதல்கள்?