Published:Updated:

`சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி; மாநில மொழிகளில் மீண்டும் தபால்துறைத் தேர்வு’ - மத்திய அரசு அறிவிப்பு

ராம் பிரசாத்

தபால்துறை தேர்வு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க எம்.பி-க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

ரவிசங்கர் பிரசாத்
ரவிசங்கர் பிரசாத்

தபால்துறை தேர்வுகளில் இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும் என அனைத்து மாநிலத் தலைமை அஞ்சலகங்களுக்கு சமீபத்தில் மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியது. வழக்கமாக தபால்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காகப் போட்டித் தேர்வில் அந்தந்த மாநில மொழிகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் கேள்விகள் கேட்கப்படும். இந்த நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு மாநில மொழிகளை புறக்கணிப்பதாக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

உயர்நீதிமன்ற மதுரை கிளை
உயர்நீதிமன்ற மதுரை கிளை

இந்த நிலையில்தான், கடந்த ஞாயிற்றுக்கிழமை தபால் அலுவலர், தபால் உதவியாளர் பணியிடங்களுக்குத் தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்கான வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருக்கும் என தபால்துறை அறிவிப்பு வெளியிட்டது. இதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. `தமிழ் வழியில் படித்த மாணவர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் தேர்வை எதிர்கொள்வது சிரமம். எனவே, இதற்குத் தடைவிதிக்க வேண்டும். முந்தைய நடைமுறைப்படி தேர்வை தமிழில் நடத்த வேண்டும்' என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை சனிக்கிழமையன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், தபால்துறை தேர்வை நடத்தலாம். ஆனால், தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என உத்தரவிட்டது. மத்திய அரசு பதில்மனு தாக்கல் செய்யவும் அந்த உத்தரவில் கூறப்பட்டது. தபால்துறை தேர்வு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க எம்.பி-க்கள் அமளியில் ஈடுபட்டனர். அவைத்தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவை சிறிது நேரம் முடங்கியது. அ.தி.மு.க எம்.பி-க்களுடன் இணைந்து தி.மு.க, சி.பி.ஐ, சி.பி.எம் கட்சி எம்.பி-க்களும் அமளியில் ஈடுபட்டனர். தி.மு.க எம்.பி-க்கள் வெளிநடப்பு செய்தனர்.

நவநீதகிருஷ்ணன்
நவநீதகிருஷ்ணன்

இந்த விவகாரம் தொடர்பாக ராஜ்யசபாவில் பேசிய அ.தி.மு.க எம்.பி நவநீதகிருஷ்ணன்,``கிராமப்புறங்களில் காலியாக உள்ள தபால்காரர், உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டுள்ளது. இந்த எழுத்துத் தேர்வின் வினாக்கள், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தன. தமிழில் கேள்விகள் இடம்பெறவில்லை. எனவே, இந்த தபால்துறை தேர்வை அரசு ரத்து செய்ய வேண்டும். தமிழ் மொழியில் புதிதாகத் தேர்வு நடத்தப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார். இதற்கிடையில் பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், `தபால் அலுவலர், தபால் உதவியாளர் பணியிடங்களுக்காக கடந்த ஜூலை 14-ம் தேதி நடத்தப்பட்ட தபால்துறை தேர்வு ரத்து செய்யப்படும். தமிழ் உட்பட அனைத்து மாநில மொழிகளிலும் புதிய தேர்வு நடத்தப்படும்'' எனத் தெரிவித்தார். இதையடுத்து அமைச்சருக்கு தமிழக எம்.பி-க்கள் நன்றி தெரிவித்தனர்.