பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியின் இயக்கத்தில் கடந்த 11-ம் தேதி வெளியாகி, திரையரங்கங்களில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ். காஷ்மீரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்துக்கு நாடு முழுவதும் ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர வந்துகொண்டிருக்கிறது. இதில், அனுபம் கெர், பல்லவி ஜோஷ், பாஷா சும்ப்லி, தர்ஷன் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். உத்தரப்பிரதேசம், திரிபுரா, கோவா, ஹரியானா, உத்தரகாண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்தப் படத்துக்குக் கேளிக்கை வரிவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 90-களில் காஷ்மீரைச் சேர்ந்த இந்து மக்கள் எதிர்கொண்ட சம்பவங்களை அப்படியே கண்முன்னே கொண்டு வந்துள்ளது எனச் சிலர் கூறிவருகின்றனர். இது குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துகளை முன்வைத்துவருகின்றனர்.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா இந்தப் படத்துக்கு மாநிலங்கள் வரிச்சலுகை வழங்கியது குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாகப் பேசிய அவர், `` `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ ஒரு பிரசார படம். மாநிலத்தில் உள்ள இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் ஆன்மாவில் சோகத்தை ஏற்படுத்தும் படம். மக்களின் மனதில் வெறுப்புணர்ச்சியைத் தூண்டி, எங்களை மேலும் வெறுக்க வைப்பதற்கே இந்தப் படத்துக்கு வரிச்சலுகை வழங்கப்படுகிறது. 1990-களில் காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு மட்டுமில்லாமல், சீக்கியர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கும் என்ன நடந்தது என்பதைப் பற்றி விசாரிக்க உண்மையான ஆணையம் அமைக்கப்பட வேண்டும்'' என்றார்.
