Published:Updated:

ஒமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தியை சிறைவைக்க அரசு கூறியுள்ள காரணங்கள் என்னென்ன?

முன்னாள் காஷ்மீர் முதல்வர்கள்
முன்னாள் காஷ்மீர் முதல்வர்கள்

6 மாதங்கள் சிறைக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஒமர் அப்துல்லா மற்றும் மெஹ்பூபா முப்தி மீது தற்போது பொது பாதுகாப்புச் சட்டம் போடப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்த்தை மத்திய அரசு நீக்கி 6 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அப்போது விதிக்கப்பட்ட இணையக் கட்டுப்பாடுகள் தற்போது வரை முழுமையாக தளர்த்தப்படவில்லை. அப்போது சிறை வைக்கப்பட்ட அரசியல் தலைவர்கள் தற்போது வரை முழுமையாக விடுவிக்கப்படவில்லை. பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி உள்ளிட்ட முன்னாள் முதல்வர்களின் சிறைவாசம் தற்போது வரை தொடர்கிறது.

காஷ்மீர்
காஷ்மீர்

காஷ்மீர் வழக்குகளை விசாரிக்காமல் உச்சநீதிமன்றம் தொடர்ந்து ஒத்திவைத்தே வருகிறது. இணையக் கட்டுப்பாடுகள் மீதான வழக்கிலும் மத்திய அரசு எதிர்பார்த்த நிவாரணத்தை அளிக்கவில்லை. அரசியல் தலைவர்கள் சிறைவைக்கப்பட்டது பற்றிய வழக்கையும் உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவில்லை. இந்த நிலையில், காஷ்மீர் அரசியல்வாதிகள் ஒவ்வொருவராக விடுவிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், பிரதான தலைவர்களின் விடுதலை பற்றி எந்தவிதமான பதிலும் இல்லை.

கடந்த செப்டம்பர் மாதம் பரூக் அப்துல்லா மீது பொது பாதுகாப்புச் சட்டம் விதிக்கப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் ஒருவரை விசாரணை இல்லாமலேயே அரசு 2 ஆண்டுகள் வரை சிறைவைக்க முடியும். இந்தச் சட்டம் அடுத்தடுத்து வந்த அரசுகளால் தொடர்ந்து தவறாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்கிற குற்றச்சாட்டும் இருக்கிறது.

பரூக் அப்துல்லா
பரூக் அப்துல்லா

நாடாளுமன்ற உறுப்பினரான பரூக் அப்துல்லா தற்போதுவரை சிறை வைக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், கடந்த வாரம் ஒமர் அப்துல்லா மற்றும் மெஹ்பூபா முப்தியின் 6 மாத கால சிறைவாசம் முடிவுக்கு வந்தது. வேறு எந்தப் புகாரும் எழுப்பப்படவில்லையெனில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் மீதும் பொது பாதுகாப்புச் சட்டம் போடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், அவர்களை சிறை வைப்பதற்கான குற்றப்பத்திரிகையில் அரசு தெரிவித்துள்ள காரணங்கள் தற்போது தெரியவந்துள்ளது. இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காஷ்மீர் டு கன்னியாகுமரி... ஆபரேஷன் ‘பிளாக்‌ஷீப்’ - தலைமறைவான குடும்பங்கள்! - வலை வீசும் என்.ஐ.ஏ

ஒமர் அப்துல்லா மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில், ``ஒமர் அப்துல்லா எந்தவொரு காரணத்துக்காகவும் மக்கள் திரளை ஒருங்கிணைத்திட முடியும். தீவிரவாதமும், தேர்தல் புறக்கணிப்பும் உச்சத்தில் இருந்த காலகட்டத்திலுமே இவரால் மக்களைச் சம்மதிக்க வைத்து தேர்தலில் வாக்களிக்க வரவைக்க முடிந்தது. மக்களின் கோபத்தை மிகவும் வன்முறையான போராட்டமாக மாற்ற முயன்றார்.”

உமர் - மெஹ்பூபா
உமர் - மெஹ்பூபா

``ஒமர் அப்துல்லா மைய நீரோட்ட அரசியல்வாதியாக இருந்தாலும் அரசியல் என்கிற போர்வையில் இந்திய ஒன்றியத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு திட்டம் தீட்டி வந்தார். வெகுமக்களின் ஆதரவோடு இத்தகைய நடவடிக்கைகளை வெற்றிகரமாகச் செய்துவந்தார். காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து தரும் 370, 35ஏ பிரிவு நீக்கப்பட்டபோது மக்களின் ஆதரவைப் பெற இவர் மிகவும் தவறான வழிகளைக் கையாண்டு மத்திய அரசுக்கு எதிராக மக்களைத் திருப்ப முயன்றார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை பி.ஜே.பி கூட்டணியில் இருந்துவந்த மெஹ்பூபா முப்தியின் குற்றப்பத்திரிகையில், ``மெஹ்பூபா முப்தி ஆபத்தான நயவஞ்சகமான சூழ்ச்சிகளுக்கு அறியப்பட்டவர். இவர் பிரிவினைவாதத்தைத் தூண்டுகிறார் என்பது பல உளவுத் துறை அறிக்கைகளின் மூலமும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர் கட்சியான பி.டி.பி-யின் கொடியில் இருக்கிற பச்சை நிறம் தீவிரவாத பின்புலம் கொண்டதாக இருக்கிறது. வன்முறையைத் தூண்டும் விதத்திலான கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்” என்றுள்ளது. மேலும், பிரிவு 370 நீக்கப்பட்டதற்கு எதிராக எந்தக் கருத்தும் தெரிவிக்க மாட்டேன் என்கிற பத்திரத்தில் மெஹ்பூபா முப்தி கையெழுத்திட மறுத்ததும் அவர் சிறைவைக்கப்பட்டதற்கு ஒரு காரணமாகச் சொல்லப்பட்டுள்ளது.

ட்வீட்
ட்வீட்

ஒமர் அப்துல்லா சிறை வைக்கப்படுவதற்கு முன்பு அவர் இறுதியாக வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவுகளில், ``வன்முறை என்பது தவறானவர்களுக்கே நன்மையில் முடியும். சட்டத்தை யாரும் கையில் எடுத்துவிடாமல் அமைதி காக்கவும். இந்திய அரசும் வகுப்புக் கலவரங்கள் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.

மெஹ்பூபா முப்தி மீதான குற்றச்சாட்டுகளையும் அவருடைய மகள் இல்திஜா முப்தி கடுமையாகக் கண்டித்துள்ளார். மெஹ்பூபா முப்தியின் ட்விட்டர் பக்கம் மூலம் இதைத் தெரிவித்துள்ளார்.

பின் செல்ல