Published:Updated:

`தேவகவுடா யாரையும் வளர விடமாட்டார்!’ - உச்சத்தை எட்டிய காங்கிரஸ் - ம.ஜ.த பனிப்போர்

சத்யா கோபாலன்

‘கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் எங்களிடம் பேசுவதில்லை, கூட்டணி தொடர்பாக சோனியாதான் முடிவெடுக்க வேண்டும்’ என தேவகவுடா தெரிவித்துள்ளார்.

Siddaramaiah -  Deve Gowda
Siddaramaiah - Deve Gowda ( Twitter/@krishnabgowda )

கர்நாடகாவில் நடந்து வந்த காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி ஆட்சி 14 மாதங்களில் நிறைவுக்கு வந்தது. ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததால் முன்னாள் முதல்வர் குமாரசாமி, பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் தன் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்தபடியாக தற்போது அம்மாநிலத்தில் அதிக பெரும்பான்மையுடன் பா.ஜ.கவின் எடியூரப்பா முதல்வராகப் பதவியேற்றுள்ளார்.

Deve Gowda
Deve Gowda
ANI

இந்நிலையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் நிறுவனர் ஹெச்.டி தேவகவுடா, கர்நாடகாவில் ஆட்சி கலைந்ததற்கு சித்தராமையாதான் காரணம் எனப் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு இது பற்றிப் பேசிய அவர், ”கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சி அமைக்கக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காகத்தான் காங்கிரஸ் எங்களுடன் கூட்டணி வைத்தது. இது தொடர்பாகச் சோனியா காந்தியோ, ராகுல் காந்தியோ சித்தராமையாவிடம் ஆலோசிக்கவில்லை.

முதலிலிருந்தே குமாரசாமியை, சித்தராமையாவுக்கு பிடிக்கவில்லை. அவரை பொறுத்தவரை எடியூரப்பா முதல்வராகவேண்டும், தான் எதிர்க்கட்சி தலைவராக வேண்டும் என்பதில் தான் அதிக விருப்பம் காட்டினார். கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி கலைக்கப்பட்டதுக்கு சித்தராமையாதான் காரணம்” எனக் காட்டமாகப் பேசியிருந்தார்.

Siddaramaiah
Siddaramaiah
Twitter/@siddaramaiah

இவரின் கருத்துக்குப் பதில் அளித்துள்ள சித்தராமையா, “தேவகவுடா என்மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அவர் தவறான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். கவுடா, யாரையும் வளர விடமாட்டார். அவர்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களைக் கூட ம.ஜ.த வளரவிடாது. நானும் ம.ஜ.தவில் இருந்தவன் தான் அவர்களின் சதித் திட்டங்கள் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்.

எடி 4.0... இப்போது என்ன செய்யக் காத்திருக்கிறார் எடியூரப்பா?!

எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களின் நம்பிக்கையைப் பெற முந்தைய அரசு தவறிவிட்டது. இதனால் காங்கிரஸ்-ம.ஜ.த கூட்டணி பலவீனமடைந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார். சித்தராமையா, காங்கிரஸில் இணைவதற்கு முன்னதாக ம.ஜ.தவில் இருந்தார். 2004-ம் ஆண்டு கட்சி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக அந்த கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

HD Kumaraswamy
HD Kumaraswamy
ANI

இந்நிலையில் சித்தராமையாவின் கருத்துக்கு முன்னாள் முதல்வர் குமாரசாமியும் எதிர்க் கருத்து தெரிவித்துள்ளார். “சித்தராமையாவின் குற்றச்சாட்டுகளுக்குத் தகுந்த நேரத்தில் பதில் அளிப்பேன். அதற்கு இப்போது சரியான நேரம் இல்லை. இந்த நேரத்தில் அரசியல் சூழ்நிலைகள் சரியாக இல்லை. அனைத்து மதசார்பற்ற கட்சி தொண்டர்களும் ஒற்றுமையாக இணைந்து போராடவேண்டிய நேரம் இது. இப்போது அரசியல் உறவுகளை முறித்துக்கொள்ளும் பேச்சுகள் சரியானது இல்லை” என தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் - ம.ஜ.த தலைவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருவதால் கூட்டணி முறியும் நிலையில் உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.