Published:Updated:

`முதல்வர் வாழ்த்து சொல்வது தன் விருப்பம்தானே தவிர, கட்டாயம் அல்ல!' - விளக்குகிறார் இராஜீவ் காந்தி

``தீபாவளி என்ற பெயரில், புராணக் கதைகளின் மூலம் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை இழிவு செய்து கட்டுக் கதைகளைப் பரப்பிக் கொண்டாடப்படும் விழாவுக்கு நாங்கள் வாழ்த்து சொல்வதில்லை என்பது எங்கள் இயக்கத்தின் கொள்கை முடிவு!'' என்கிறார் இராஜீவ் காந்தி.

தமிழக அரசியல் சூழலில், ஆளுநர் அதிகாரம், முல்லைப்பெரியாறு, புதிய கல்விக்கொள்கை, வாரிசு அரசியல், தீபாவளி வாழ்த்து எனத் தொடர்ச்சியாக தி.மு.க அரசுமீது விமர்சனங்கள் வைக்கப்பட்டுவருகின்றன.

இந்த நிலையில், தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் இராஜீவ் காந்தியிடம் பேசினேன்...

'' 'ஆளுநர் அதிகார வரம்பை மீறுகிறார்' என தி.மு.க கூட்டணிக் கட்சிகளே சுட்டிக்காட்டுகின்றன. ஆனால், தி.மு.க அமைதிகாக்கிறதே?''

''இல்லையில்லை... 'ஒன்றிய அரசு, மாநில உரிமைகளிலெல்லாம் தலையிடுகிறதே' என்ற கடந்தகால ஆட்சியை மனதில் வைத்துக்கொண்டுதான் தி.மு.க கூட்டணிக் கட்சியினர் எச்சரிக்கை உணர்வுடன் இது போன்ற கருத்துகளைத் தெரிவிக்கிறார்கள்.

இந்திய அரசமைப்பு ஆளுநருக்கு வழங்கியிருக்கும் அதிகாரத்தின்படி, மாநிலத்தின் எந்தவோர் அதிகாரிக்கும் தனிப்பட்ட முறையில் உத்தரவிட முடியாது. தமிழக ஆளுநரும் அப்படியான எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. அதற்கு தி.மு.க அரசும் ஒருபோதும் அனுமதிக்காது.''

ஆர்.என்.ரவி
ஆர்.என்.ரவி

'' 'புதிய கல்விக் கொள்கையைத் தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டும்' என்ற ஆளுநரின் விருப்பத்துக்கு ஏற்ப, திறனறிவுத் தேர்வு, இல்லம் தேடிக் கல்வி எனப் படிப்படியாகத் திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றனவே?''

''பல்கலைக்கழக வேந்தராக இருக்கக்கூடிய ஆளுநர், துணைவேந்தர்களோடு பேசுவதென்பது மரபுதான். ஆனால், கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது, அரசின் ஆலோசனை இன்றி ஆளுநரே நேரடியாகத் துணைவேந்தர்களை நியமனம் செய்ததுதான் தவறு. அதைக் கண்டித்துத்தான் தி.மு.க-வும் கறுப்புக்கொடி போராட்டமெல்லாம் நடத்தியது.

ஒன்றிய அரசின், புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஒட்டுமொத்தமாக ஏற்றுக்கொள்ளவில்லை. மாநிலக் கல்வி வளர்ச்சிக்குழு வடிவமைத்த பாடத்திட்டத்தைத்தான் நாம் உறுதியாக நடைமுறைப்படுத்திவருகிறோம். அதேசமயம், நாம் ஏற்கெனவே வலியுறுத்திக்கொண்டிருக்கிற தாய்மொழிக் கல்வியை, புதிய கல்விக் கொள்கையும் 8-ம் வகுப்பு வரை வலியுறுத்துகிறது. இதற்காகப் புதிய கல்விக் கொள்கையை நாம் ஏற்றுக்கொண்டதாகவோ அல்லது அதைத்தான் நாங்கள் செயல்படுத்த முனைகிறோம் என்றோ சொல்லிவிட முடியுமா?''

''முல்லைப்பெரியாறு அணை திறப்பு உள்நோக்கம்கொண்டது என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியனும் சொல்கிறாரே?''

''முல்லைப்பெரியாறு அணை குறித்த போதிய புரிதல் பி.ஆர்.பாண்டியனுக்கு இல்லை என்று நினைக்கிறேன். அதாவது முல்லைப்பெரியாறு அணை கேரளப் பகுதிக்குள்தான் இருக்கிறது. அணையின் பின்பகுதியில் 104-வது அடியில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையின் வழியே வெளியேறும் தண்ணீர்தான் வைகைநதியில் பாய்ந்தோடுகிறது. அணையின் நீர்மட்டம், 103-ஆகக் குறைந்துவிட்டால், வைகைநதிக்குத் தண்ணீர் கிடைக்காது. எனவேதான், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்று நாம் போராடிவருகிறோம். அதேசமயம், கேரள மாநிலமோ 'அணை பலவீனமாக உள்ளது' என்ற காரணத்தைச் சொல்லி அணையின் நீர்மட்டத்தைக் குறைக்கப்பார்க்கிறது.

இந்த நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அக்டோபர் மாதம் அளவுக்கு அதிகமாக இருந்த நீர் மட்டுமே அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர் கேரளாவுக்குள் பாய்ந்தோடியிருக்கிறது. இது இயல்பானது. ஆக, அணையின் இந்தத் தொழில்நுட்பத்தைப் புரிந்துகொண்டால் பிரச்னைகளே எழாது.''

கருணாநிதி
கருணாநிதி

''ஒரு குடும்பத்தை வாழவைப்பதற்காகவே தி.மு.க என்ற கட்சி, தொடர்ந்து ஊழல் செய்துவருகிறது என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சொல்கிறாரே?''

''தி.மு.க-வின் கருத்தியல் சித்தாந்தத்தை எதிர்கொள்ள முடியாதவர்கள் முன்வைக்கிற குற்றச்சாட்டுதான் இது. கருணாநிதியின் குடும்பத்தில் எத்தனையோ பேர் இருக்கின்றனர். ஆனாலும் சித்தாந்தமும் கொள்கையும் இருந்த காரணத்தாலேயே மு.க.ஸ்டாலின் தி.மு.க தலைவராக வர முடிந்தது. அவரையே முதல்வராகத் தீர்மானித்தது தமிழக மக்கள்தான்.

ஒன்றிய அரசின் கைகளில்தான் வருமான வரித்துறை இருக்கிறது. அவர்கள் சொல்வது உண்மையென்றால், 'யார், எவ்வளவு கொள்ளையடித்து சொத்துச் சேர்த்திருக்கிறார்கள்' என்ற பட்டியலை ஆதாரத்துடன் வெளியிடவேண்டியதுதானே? எனவே, இந்த வாதம் என்பதே ஏதாவது பொய்யைச் சொல்லி அவதூறு பரப்பும் நோக்கம்தானே தவிர... வேறு ஒன்றும் இல்லை!''

தேசிய திறனறியும் தேர்வு சர்ச்சை: `புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு தமிழகத்தில் புகுத்துகிறதா?!'

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

''கருணாநிதியின் வாரிசுகளில், தி.மு.க-வின் கொள்கை, சித்தாந்தங்களை உள்வாங்கியவர்கள் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் மட்டுமே என்கிறீர்களா?''

''அப்படியில்லை... தி.மு.க என்பது உட்கட்சி ஜனநாயகத்தை அடிப்படையாகக்கொண்ட ஓர் அரசியல் கட்சி. கட்சியின் கொள்கையையும் கோட்பாடுகளையும் உறுதியாக ஏற்றுக்கொண்டவரை மட்டுமே தங்கள் தலைவராகக் கட்சி ஏற்றுக்கொள்ளும். அந்தவகையில், கருணாநிதியின் மகன்களில், தி.மு.க-வின் கொள்கைகளில் திடமாக நிற்பவர் என்ற காரணத்தாலேயே, மு.க.ஸ்டாலினால் கட்சியின் தலைவராக ஆக முடிந்தது. அதுவே, தேர்தல் ஜனநாயகத்துக்குள் வரும்போது, 'கட்சியின் இந்த முடிவு சரியா, தவறா' என்பது குறித்து முடிவெடுக்கப்போகிறவர்கள் தமிழக மக்கள்தான்!''

கனிமொழி
கனிமொழி

''கொள்கை உறுதிகொண்ட கருணாநிதியின் மகள் கனிமொழிக்கும் கட்சியில் இதே அளவில் வாய்ப்பு தரப்படுகிறதா?''

''வாய்ப்பு கொடுக்கப்படுவதென்பது உட்கட்சி ஜனநாயகம். 'தமிழக பா.ஜ.க-வின் தலைவராக ஏன் அண்ணாமலையை நியமித்தனர்... ஏன் ஹெச்.ராஜாவுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்றெல்லாம் நான் கேட்க முடியுமா? வேண்டுமானால், பா.ஜ.க தொண்டர்கள் கேள்வி கேட்கலாமே தவிர, மக்களில் ஒருவராகக் கேள்வி கேட்க முடியாது.

தேர்தலின்போதே, 'இது குடும்பக் கட்சி' என்று எதிர்க்கட்சியினர் சொல்லிப் பார்த்தார்கள். ஆனால், தி.மு.க என்பது தமிழக மக்களுக்கான கட்சி என்ற உண்மையை மக்களே நிரூபித்துவிட்டார்கள்!''

முல்லைப்பெரியாறு அணை: `பாதுகாப்பில்லை என்றால் இடுக்கி மாவட்டத்தைத் தமிழகத்திடம் கொடுங்கள்!' - சீமான்

''அண்மையில், தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்படவிருந்த தீபாவளி இனிப்பு ஒப்பந்தம் குறித்து, பா.ஜ.க கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, அவசரம் அவசரமாக ஒப்பந்தம் ஆவினுக்கு மாற்றப்பட்டுவிட்டதே?''

''அரசு ஒப்பந்தத்தில் பங்கேற்கக்கூடிய உரிமை எல்லாக் குடிமகன்களுக்கும் உண்டு. ஒப்பந்தச் சட்ட நடைமுறையும் இதைத்தான் வலியுறுத்துகிறது. இதன் அடிப்படையில்தான், போக்குவரத்துத்துறையில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தீபாவளி இனிப்புக்காக ஓப்பன் டெண்டர் விடப்பட்டது. இதில், யார் குறைந்த விலையில் டெண்டர் கோருகிறார்களோ அவர்களுக்குத்தான் ஒப்பந்தம் வழங்கப்படும். கடந்த அ.தி.மு.க ஆட்சியில், இந்த ஒப்பந்தம் யாருக்கு வழங்கப்பட்டது என்பதே தெரியாது. இந்த நிலையை மாற்றி, தி.மு.க-தான் வெளிப்படையாக ஒப்பந்தம் கோரியிருந்தோம்.

ஆனால், இதையே ஒரு விவாதமாக்கி, அரசுமீது ஒரு களங்கத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முனையும்போது, 'இந்த விமர்சனங்களுக்கு நாம் இடம் கொடுக்க வேண்டாம்' என்ற நல்லெண்ணத்தில் ஆவின் நிறுவனத்திலேயே இனிப்புகளை வாங்கிக்கொள்ளலாம் என்ற முடிவை முதல்வர் அறிவித்தார்.''

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

'' `தி.மு.க தலைவர் தீபாவளி வாழ்த்து சொல்ல வேண்டாம்; ஆனால், எல்லோருக்கும் பொதுவான முதல்வர் தீபாவளி வாழ்த்து சொல்ல வேண்டும்தானே...’ என்ற தமிழக பா.ஜ.க-வின் கேள்வி நியாயமானதுதானே?''

''இது நியாயமற்றது. விழாக்களுக்கு முதல்வர் வாழ்த்து சொல்வதென்பது தன் விருப்பத்தின் அடிப்படையிலானதுதானே தவிர, கட்டாயம் அல்ல. இறைக் கோட்பாட்டைப் பொறுத்தவரையில், 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பதுதான் தி.மு.க-வின் கொள்கை.

நாங்கள் அல்லாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்வதில்லை. மாறாக, வாழ்ந்து மறைந்த நபிகள் நாயகம் என்ற மனிதருக்கு வாழ்த்து சொல்கிறோம். அதேபோல், இயேசு நம்பிய கடவுளுக்கு நாங்கள் வாழ்த்து சொல்வதில்லை. ஆனால், இயேசு என்ற மனிதருக்கு வாழ்த்து சொல்கிறோம். இதே வரிசையில், வள்ளலார், விவேகானந்தர், முத்துக்குட்டி சுவாமிகள் என இந்தச் சமூகத்துக்காக தொண்டு செய்து வாழ்ந்து மறைந்த மனிதர்களுக்கு வாழ்த்து சொல்கிறோம். ஆனால், தீபாவளி என்ற பெயரில், புராணக் கதைகளின் மூலம் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை இழிவு செய்து கட்டுக் கதைகளைப் பரப்பிக் கொண்டாடப்படும் விழாவுக்கு நாங்கள் வாழ்த்து சொல்வதில்லை என்பது எங்கள் இயக்கத்தின் கொள்கை முடிவு!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு