Election bannerElection banner
Published:Updated:

பதறும் பாஜக., காணவில்லை காங்கிரஸ், மையம்கொள்ளுமா மய்யம்?! - கோவை தெற்குத் தொகுதி நிலவரம்

கோவை
கோவை

ஆரம்பத்தில், கமல் வருகை குறிப்பிட்ட சதவிகித வாக்குகளை மட்டுமே பிரிக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், அடுத்தடுத்து நடந்த அரசியல் திருப்பங்களும், கமலுக்குப் பெருகிவரும் ஆதரவும் கோவை தெற்குத் தொகுதி கள நிலவரத்தை மாற்றியிருக்கிறது.

த்அ.தி.மு.க., தி.மு.க நேரடியாகப் போட்டியில்லை. ஆனாலும், கோவை தெற்குத் தொகுதியில் நாள்தோறும் அனல்பறக்கும்விதமாக அரசியல் களம் சூடுபிடித்துக்கொண்டிருக்கிறது. இரண்டு திராவிடக் கட்சிகளும் கூட்டணியிலுள்ள தங்களது தேசியக் கட்சிகளுக்கு இந்தத் தொகுதியை ஒதுக்கின. அதன்படி அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க சார்பில் வானதி சீனிவாசன், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் மயூரா ஜெயக்குமார் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

கோவை
கோவை
கோவை தெற்கு தொகுதி மட்டுமல்ல..! - கமல்ஹாசன் போடும் கொங்கு ஸ்கெட்ச்

இருவரும் வெற்றிக்கான கணக்கீடுகளில் மூழ்கியிருந்தபோது, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் பல இடங்களில் இருமுனைப் போட்டி தீவிரமாக இருந்தாலும், இங்கு மும்முனைப் போட்டி வெறித்தனமாக இருக்கிறது. கமல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால், வானதி சீனிவாசன் களப்பணிகளில் இன்னும் வேகம்காட்டுகிறார். ஆளுங்கட்சி மீதான அதிருப்திகளே தன்னைக் கரைசேர்த்துவிடும் என மயூரா ஜெயக்குமார் நம்புகிறார்.

கோவை தெற்கு விகடன் சர்வே
கோவை தெற்கு விகடன் சர்வே

ஆரம்பத்தில், கமல் வருகை குறிப்பிட்ட சதவிகித வாக்குகளை மட்டுமே பிரிக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், அடுத்தடுத்து நடந்த அரசியல் திருப்பங்களும், கமலுக்குப் பெருகிவரும் ஆதரவும் கோவை தெற்குத் தொகுதி கள நிலவரத்தை மாற்றியிருக்கிறது. மூன்று வேட்பாளர்களின் செயல்பாடுகளை இங்கு காணலாம்.

கடந்த 2016 சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் தனித்து போட்டியிட்ட வானதி சீனிவாசன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். தோல்வியடைந்தாலும் தொகுதிக்குள் தொடர்ந்து பல்வேறு மக்கள் பணிகளில் ஈடுபட்டிருந்தார். தேர்தல் நெருங்க, நெருங்க களப்பணிகளில் இன்னும் வேகம் காட்டினார். ஒருகட்டத்தில் தொகுதியைவிட்டு நகராமல் இடைவிடாமல் பிரசாரத்தில் இறங்கினார்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

இதனால், அவரது தொண்டை பாதிக்கப்பட்டு வானதி சோர்வடைந்தார். தொகுதிக்குள் கணிசமாக இருக்கும் சிறுபான்மை மக்களும்கூட, பா.ஜ.க-வாக இருந்தாலும் வானதி பரவாயில்லை என்று சொல்கிற அளவுக்கு அவரது செயல்பாடுகள் இருந்தது உண்மை.

தனது பவரைப் பயன்படுத்தி மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், பா.ஜ.க தேசிய இளைஞரணித் தலைவர் எம்.பி தேஜஸ்வி, நடிகர்கள் ராதாரவி, நமீதா, கலா மாஸ்டர் என்று பிரபலங்களை இறக்கி பரப்புரை வியூகம் அமைத்தார். இதனால், மற்ற வேட்பாளர்களுக்கு வானதி கடுமையான போட்டியை கொடுத்துக்கொண்டிருந்தார். ஆனால், அது மார்ச் 31-ம் தேதிக்கு முன்புதான். 31-ம் தேதிக்குப் பிறகு கள நிலவரத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

வானதி, யோகி
வானதி, யோகி

சென்சிடிவ் நகரமான கோவையில், பா.ஜ.க பைக் பேரணியில் டவுன்ஹால் பகுதியில் மசூதி அருகே கோஷம் போட்டது, கடையை அடைக்கச் சொல்லி வியாபாரிகளை மிரட்டியது, கல்வீச்சு சம்பவங்கள் ஆகியவை ஒருவித பதற்றத்தை ஏற்படுத்திவிட்டன.

இதையடுத்து, வானதி சீனிவாசன் மற்றும் அந்தச் சம்பவத்துக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி புகார் அளிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் சிறுபான்மை மக்களை மட்டுமல்லாமல், அமைதியை விரும்பும் கோவை மக்கள் பலரையும் யோசிக்கவைத்திருக்கிறது. மேலும், சம்பவம் நடந்த உடனேயே காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் சம்பவ இடத்துக்குச் சென்று வியாபாரிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

அதேபோல, கமல்ஹாசனும் அன்றைய தினமே பாதிக்கப்பட்ட செருப்புக் கடைக்குச் சென்று, செருப்பு வாங்கி தனது ஆதரவைத் தெரிவித்து ஸ்கோர் செய்துவிட்டார்.

வானதி சீனிவாசன் மற்றும் அவர் கணவர் மீது சமூக வலைதளங்களில் பரவும் குற்றச்சாட்டு வீடியோவும் அவர்களுக்குத் தலைவலியை கொடுத்துள்ளன. இந்த காரணங்களால், வானதி தரப்பில் பதற்றம் அடைந்துள்ளனர். சிறு சம்பவத்தை வேண்டுமென்றே பெரிதாக்குகின்றனர் என்றும், இஸ்லாமியர்கள்தான் முதலில் கோஷம் எழுப்பினர் என்றும் பா.ஜ.க சொல்லும் விளக்கங்களை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்
பைக் பேரணி, வெறுக்கத்தக்க கோஷம், கல்வீச்சு - யோகி ஆதித்யநாத் கோவை வருகை ரிப்போர்ட்!

கமல் மற்றும் மயூரா சென்ற அதே கடைக்கு அமைச்சர் வேலுமணி சென்று சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். ஆனால் வானதியோ, பா.ஜ.க-வினரோ அதைச் செய்யவில்லை. தொகுதியில் அ.தி.மு.க மூலம் அவர்களது வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கலாம் என்பதுதான் பா.ஜ.க-வின் கடைசி அஸ்திரமாகப் பேசப்பட்டுவருகிறது.

கடந்த 2016 சட்டசபைத் தேர்தலில், இதே தொகுதயில் தி.மு.க கூட்டணியில் இரண்டாவது இடம் பிடித்தார் காங்கிரஸ் மயூரா ஜெயக்குமார். அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணி மீதான அதிருப்தி, தொகுதிக்குள் கணிசமான உள்ள சிறுபான்மை மக்கள் வாக்குகள் மூலம் இந்த முறை எப்படியும் வெற்றி பெற்றுவிடலாம் என்று மயூரா போராடி இந்தத் தொகுதியை வாங்கினார்.

மயூரா ஜெயக்குமார்
மயூரா ஜெயக்குமார்

ஆனால், கமல் என்ட்ரியால் மயூராவும் அப்செட் ஆகியுள்ளார். ``கடந்த தேர்தலிலேயே மூன்று ஸ்வீட் பாக்ஸ்கள் வரை செலவு செய்து தோற்றுவிட்டேன். கடனாகிவிட்டதால், இந்தமுறை நான் செலவு செய்ய மாட்டேன்” என அவர் முடிவெடுத்துவிட்டார்போல.

இதனால், தொகுதிக்குள் பிரசாரத்துக்கு தலைகாட்டுவதே அரிதிலும் அரிதுதான். ``மயூராவைக் கண்டா வர சொல்லுங்க. எல்லாரும் கஷ்டப்பட்டு ஜெயிக்க முயற்சி பண்ணுவாங்க. இவர்தான் கஷ்டப்பட்டு தோக்க முயற்சி பண்றார்” எனக் கூட்டணி கட்சிகளே அவரைக் கலாய்க்கத் தொடங்கிவிட்டன.

மயூரா ஜெயக்குமார்
மயூரா ஜெயக்குமார்

காசு இறக்காததால், தி.மு.க கூட்டணிக் கட்சிகளும் தெற்குத் தொகுதியைக் கைகழுவிவிட்டனர். தி.மு.க ஆதரவு அமைப்புகள்தான் களத்தில் ஆக்டிவ்வாக வேலை செய்துகொண்டிருக்கின்றனர்.

பேரணியில் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாகச் சந்தித்ததைத் தவிர மயூராவின் செயல்பாடுகள் எதுவும் கவனத்தை ஈர்க்கும் வகையில் இல்லை.

வானதி, மயூரா இருவருமே கமல் செய்வதைப்போல ரேஸ்கோர்ஸில் நடப்பது, உடற்பயிற்சி செய்வது, ஆட்டோவில் செல்வது, காபி வித் வானதி, லஞ்ச் வித் வானதி என்று கமலை எதிர்கொள்ள அவரது ஃபார்முலாவையே பின்பற்றியதை மக்கள் பெரிய அளவுக்கு ரசிக்கவில்லை என்றே சொல்லப்படுகிறது.

முக்கியமாக, துக்கடா விமர்சனத்துக்குக் கொதித்த வானதி சீனிவாசன், நடிகர் ராதாரவி கமலைக் கடுமையாக விமர்சித்தபோது தடுக்கவில்லை. மேலும், ``கமல் லிப் சர்வீஸ்தான் செய்கிறார். அதற்கு இரண்டு அர்த்தம் உள்ளது” என்ற வானதியின் விமர்சனத்தையும் மக்கள் ரசிக்கவில்லை என்றே தெரிகிறது.

இரண்டு தேசியக் கட்சிகள், கடந்தமுறை தமிழகத்தில் நமக்கு அதிக வாக்குகள் கிடைத்த பகுதி என்று கமல் போட்ட கணக்குகள் இப்போதுவரை தவறவில்லை. அம்மன்குளம் பகுதியில் நீண்ட நாள்களாக இருந்த சாக்கடைப் பிரச்னையை கமல் நேரில் சென்று பார்வையிட்டார். அடுத்த நாளே அந்தப் பிரச்னை சரிசெய்யப்பட்டுவிட்டது. அதிகாரிகள் அவசர அவசரமாகப் பதறிச் செய்த காரியம் கமல் ஸ்கோர் செய்வதற்கு வழிவகுத்துவிட்டது.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

மக்கள் கூட்டத்தில் கமலின் அறுவை சிகிச்சை செய்த காலை யாரோ மிதிக்க, அதே காலில் ஹோட்டல் லிஃப்டிலும் அடிபட்டுவிட்டது. மருத்துவர்கள் ஓய்வெடுக்கச் சொல்ல, கமல் அதற்கு நோ சொல்லி வாக்கிங் ஸ்டிக்குடன் பிரசாரம் செய்துவருகிறார்.

பா.ஜ.க-வில் பெரிய புள்ளிகளை இறக்கி பிரசாரம் செய்ய கமல்ஹாசனோ, ``யாரையும் இறக்கி, அதுவே சர்ச்சையை உருவாக்கிவிடக் கூடாது” எனச் சொல்லி, தன்னை மட்டுமே மையமாக வைத்து வியூகம் அமைத்திருக்கிறார். அவ்வபோது சரத்குமார், சுஹாசினி, ஶ்ரீபிரியா ஆகியோர் தலையைக் காட்டிச் சென்றிருக்கிறார்கள்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

பிரசாரத்துக்காக மற்ற பகுதிகளுக்குச் சென்றாலும் தெற்குத் தொகுதியிலும் கமல் முழுவதுமாக கவனம் செலுத்திவந்தார். கோவையில் இருந்தபடி மற்ற பகுதிகளுக்குச் சென்றால், இங்கு முக்கியஸ்தர்களைப் பார்ப்பது, பிரசாரம் செய்வது போன்றவற்றில் பெரிய சிக்கல் ஏற்படவில்லை.

கமல் கட்சித் தலைவராக இருந்தாலும், அவரே இறங்கிப் பேசுவதை பல அமைப்பினரும், மக்களும் ஆரோக்கியமான விஷயமாகப் பார்க்கின்றனர். முதலில் அமைத்த அட்டவணைப்படி, கமல்ஹாசன் கடைசி மூன்று நாள்கள்தான் முழுவதும் தெற்குத் தொகுதியில் இருப்பதாக அமைக்கப்பட்டிருந்தது.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

ஆனால், தற்போது மாறும் அரசியல் சூழ்நிலைக்கேற்ப கிட்டத்தட்ட கடைசி ஐந்து நாள்கள் தெற்குத் தொகுதியில், வார்டுவாரியாக அனைத்துப் பகுதிகளுக்கும் செல்வதுபோல திட்டத்தை மாற்றிவிட்டனர். இப்படி, கள நிலவரங்களைத் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டு கமல் அடித்து ஆடிக்கொண்டிருக்கிறார்.

வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு நாள்களே இருப்பதால், மூன்று கட்சிகளும் இறுதிக்கட்ட பரப்புரையில் தீவிரம் காட்டிவருகின்றன. இதனால், மேலும் சில சம்பவங்களை எதிர்பார்க்கலாம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு