Published:Updated:

ஒரே மாதத்தில் ரூ.1.67 லட்சம் கோடி ஜி.எஸ்.டி வசூல்... குஷியில் மத்திய அரசு... குமுறும் தமிழக அரசு!

ஸ்டாலின், மோடி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின், மோடி

மாநிலங்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்கிற நடைமுறை வருகிற ஜூன் மாதத்துடன் முடிவடையவிருக்கிறது.

ஒரே மாதத்தில் ரூ.1.67 லட்சம் கோடி ஜி.எஸ்.டி வசூல்... குஷியில் மத்திய அரசு... குமுறும் தமிழக அரசு!

மாநிலங்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்கிற நடைமுறை வருகிற ஜூன் மாதத்துடன் முடிவடையவிருக்கிறது.

Published:Updated:
ஸ்டாலின், மோடி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின், மோடி

மத்திய அரசுக்கு, ஜி.எஸ்.டி வருவாய் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக வசூலாகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ.1.67 லட்சம் கோடி வசூலாகியிருக்கிறது. இதனால், மத்திய அரசு மகிழ்ச்சியில் திளைத்திருந்தாலும், ஜி.எஸ்.டி அமலாக்கத்துக்குப் பிறகு நிதி வறட்சியால் வாடிப்போயிருக்கும் மாநில அரசுகள், ஏக்கத்துடன் டெல்லியைப் பார்த்துக்கொண்டிருக்கின்றன!

நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையைக் கொண்டுவருவதற்காக, `ஜி.எஸ்.டி’ எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி 2017-ம் ஆண்டு, ஜூலை 1-ம் தேதி அமல்படுத்தப்பட்டது. இதனால், மாநிலங்களின் வரி வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஜி.எஸ்.டி அமலாக்கத்தால் ஏற்படும் நிதி இழப்பை ஈடுசெய்ய, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதாக மத்திய அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால், அந்த வாக்குறுதியை மத்திய அரசு முறையாகவும் முழுமையாகவும் நிறைவேற்றவில்லை என்று தமிழ்நாடு உட்பட பல மாநிலங்கள் குற்றம்சாட்டிவருகின்றன.

ஒரே மாதத்தில் ரூ.1.67 லட்சம் கோடி ஜி.எஸ்.டி வசூல்... குஷியில் மத்திய அரசு... குமுறும் தமிழக அரசு!

இழப்பீட்டுக் காலம் நீட்டிக்கப்படுமா?

மாநில அரசுகளுக்குக் கிடைத்துக்கொண்டிருந்த வரிகளில், பெரும்பாலானவை ஜி.எஸ்.டி மூலம் மத்திய அரசிடம் போய்விட்டதால் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி, ஆயத்தீர்வை, பத்திரப்பதிவு போன்ற ஒருசில வரி இனங்களை மட்டுமே வைத்துக்கொண்டு தமிழக அரசு சமாளித்துவருகிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக அரசின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்ட நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், “தமிழ்நாட்டுக்கு ரூ.20,033 கோடி ஜி.எஸ்.டி பாக்கியை மத்திய அரசு தரவேண்டியிருக்கிறது. மத்திய அரசிடமிருந்து வந்துகொண்டிருந்த வருவாய் 33 சதவிகிதம் குறைந்துள்ளது. வரியே இல்லாமல் அரசு எப்படி நடக்கும்?” என்று பொங்கினார். இந்த நிலையில், “நடப்பு நிதியாண்டில் ரூ.1.15 லட்சம் கோடி ஜி.எஸ்.டி இழப்பீடாக வழங்கப்பட்டிருக்கிறது” என்று கடந்த டிசம்பர் மாதம் தெரிவித்த மத்திய நிதியமைச்சகம், “தமிழ்நாட்டுக்கு ரூ.2,894 கோடி இழப்பீட்டுத் தொகை பாக்கி இருக்கிறது” என்று குறிப்பிட்டது.

மாநிலங்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்கிற நடைமுறை வருகிற ஜூன் மாதத்துடன் முடிவடையவிருக்கிறது. அதனால், வருவாய் பற்றாக்குறை கொண்ட மாநிலங்கள் இனி என்ன செய்வதென்று தெரியாமல் கையைப் பிசைந்துகொண்டிருக்கின்றன. இழப்பீட்டுக் காலத்தை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழ்நாடு உட்பட பல மாநிலங்கள் கோரிக்கை வைத்துள்ளன. இந்த (மே) மாதம் ஜி.எஸ்.டி கவுன்சில் கூடவிருக்கிறது. அதில், இந்த விவகாரம் குறித்து முடிவெடுத்தால்தான், அடுத்து நடைபெறவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தில் உரிய சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள முடியும். ஆனால், என்ன நடக்கப்போகிறது என்று தெரியவில்லை.

இதுபோக, டி.வி., ஹேண்ட் பேக், தோல் பொருள்கள், வாசனைப் பொருள்கள், அப்பளம், வெல்லம் உட்பட 143 பொருள்கள் மீதான ஜி.எஸ்.டி-யை உயர்த்த மத்திய அரசு உத்தேசித்துள்ளது. அவற்றில், 93 பொருள்களுக்கு தற்போது இருக்கும் 18 சதவிகிதத்திலிருந்து 28 சதவிகிதமாக ஜி.எஸ்.டி-யை உயர்த்த உத்தேசிக்கப்பட்டிருப்பதாகவும், இது குறித்து மாநில அரசுகளிடம் கருத்து கேட்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. ஜி.எஸ்.டி-யால் மாநில அரசுகள் பாதிக்கப்படுவது ஒருபுறமிருக்க, மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். ஏற்கெனவே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள், ஜி.எஸ்.டி உயர்த்தப்படுவதால் மேலும் சிரமங்களுக்கு ஆளாவார்கள். இந்த 143 பொருள்களில் கதவு, ஜன்னல், மின்சாதனங்கள் போன்ற பல பொருள்களும் அடக்கம். இந்தப் பொருள்களின் விலைகள் உயர்ந்தால் வீட்டு விலை உயரும் அபாயம் இருக்கிறது. சொந்தமாக வீடு கட்டுபவர்களும், வீடு வாங்குபவர்களும் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள்.

இந்த ஏப்ரலில் ரூ.1.67 லட்சம் கோடிக்கு ஜி.எஸ்.டி வசூலாகியிருக்கிறது. ஜி.எஸ்.டி வரி விகிதம் உயர்த்தப்பட்டால் மத்திய அரசின் வருவாய் மேலும் அதிகரிக்கும். வருவாய் உயர்ந்தாலும், மாநிலங்களுக்கான இழப்பீட்டுக் காலத்தை மத்திய அரசு நீட்டிக்குமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

“பொத்தாம் பொதுவாகக் குற்றம்சாட்டுவது தவறு!”

இது குறித்து பா.ஜ.க மாநிலச் செய்தித் தொடர்பாளரான நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். “ஜி.எஸ்.டி இழப்பீடு நிலுவை குறித்து, தமிழக அரசியல்வாதிகளும், தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனும் தவறான தகவல்களைத் தெரிவித்துவருகிறார்கள். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஜி.எஸ்.டி இழப்பீடு வழங்கப்படுகிறது. எனவே, எந்தெந்த மாதத்துக்கு வரவேண்டிய நிலுவைத் தொகை என்ற விவரத்துடன் அவர்கள் பேச வேண்டும். எந்த விவரங்களையும் குறிப்பிடாமல், பொத்தாம் பொதுவாகக் குற்றம்சாட்டுவது தவறு.

2021-2022 நிதியாண்டுக்கு ரூ.96,576 கோடி இழப்பீடு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ரூ.53,600 கோடி மட்டும் பாக்கி இருக்கிறது. உரிய காலத்தில் அது கொடுக்கப்படும். தற்போது ஜி.எஸ்.டி வருவாய் பெருகியிருக்கிறது என்பது உண்மை. இந்த மாதம் மிக அதிகமாக ஜி.எஸ்.டி வசூலாகியிருக்கிறது. இந்த நேரத்தில், இழப்பீட்டுக் காலத்தை நீட்டிப்பது குறித்து ஜி.எஸ்.டி கவுன்சில்தான் முடிவெடுக்க வேண்டும். இதற்கும் மத்திய அரசுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. 143 பொருள்களுக்கு ஜி.எஸ்.டி உயரப்போகிறது என்பது ஒரு தவறான தகவல்” என்றார் நாராயணன் திருப்பதி.

மாநில அரசின் சிரமங்களைப் புரிந்துகொண்டு மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும். இல்லையேல், பாதிக்கப்படப்போவது மக்கள்தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism