Published:Updated:

`ஜி.எஸ்.டி முறைகேடு; கோடிக்கணக்கான ரூபாய் பணம்?' - செங்கல்பட்டு எம்.எல்.ஏ வீடு, அலுவலகங்களில் ரெய்டு

மறைமலைநகரில் உள்ள வீடு மற்றும் அலுவலகம், கூடுவாஞ்சேரியில் உள்ள அலுவலகம், ஆப்பூரில் உள்ள வீடு, ஆப்பூரில் உள்ள அவரின் சகோதரர் சந்தானம் என்பவரின் வீடு மற்றும் அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

வரலட்சுமி - மதுசூதனன்
வரலட்சுமி - மதுசூதனன்

செங்கல்பட்டு தி.மு.க எம்.எல்.ஏ வரலட்சுமி மதுசூதனன் வீடு மற்றும் அலுவலகங்களில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரித்துறையினர் இன்று காலையிலிருந்து சோதனை நடத்தி வருகின்றனர். 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத கோடிக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின்றன.

வரலட்சுமி மதுசூதனன், செங்கல்பட்டு எம்.எல்.ஏ
வரலட்சுமி மதுசூதனன், செங்கல்பட்டு எம்.எல்.ஏ

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த வரலட்சுமி, கடந்த 2016 சட்டமன்றத் தேர்தல் மூலம் செங்கல்பட்டு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரின் கணவர் மதுசூதனன் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பணியாளர்களை அனுப்பும் மேன் பவர் ஏஜென்சி தொழில் நடத்தி வருகிறார். இவரின் ஏஜென்சி மூலம் வேலை செய்துவரும் தொழிலாளர்களுக்கு முறையான ஜி.எஸ்.டி வரியை செலுத்தாமல் ஏமாற்றி வந்ததாக புகார் எழுந்தது. இவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரித்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். மறைமலைநகரில் உள்ள வீடு மற்றும் அலுவலகம், கூடுவாஞ்சேரியில் உள்ள அலுவலகம், ஆப்பூரில் உள்ள வீடு, ஆப்பூரில் உள்ள அவரின் சகோதரர் சந்தானம் என்பவரின் வீடு மற்றும் அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், அவரின் வீட்டில் சுமார் இரண்டு கோடிக்கும் மேலான பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

திடீர் ரெய்டு; 6-வது மாடியிலிருந்து கொட்டப்பட்ட பணம்! -கொல்கத்தாவை அதிரவைத்த தனியார் நிறுவனம்

மதுசூதனனுக்கு நெருக்கமாக இருந்த சிலரிடம் பேசினோம். ``2006 முதல் 2016 வரை ஆப்பூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர் வரலட்சுமி. பெயரளவில் இவர் தலைவர். மற்றபடி எல்லாமே அவரின் கணவர் மதுசூதனன்தான் `செயல்’ தலைவராக இருந்துவந்தார். ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் கம்பெனிகளுக்கு தன்னுடைய மேன் பவர் ஏஜென்சி மூலம் பணியாளர்களை அனுப்பியதன் மூலம் அசுர வளர்ச்சி கண்டார்.

மறைமலைநகரில் வரலட்சுமி மதுசூதனன் வீட்டில் ரெய்டு
மறைமலைநகரில் வரலட்சுமி மதுசூதனன் வீட்டில் ரெய்டு

கோடிக்கணக்கில் வருமானம் கொட்டியதால் உள்நாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் தன்னுடைய மேன் பவர் ஏஜென்சி மூலம் ஆட்களை அனுப்பி தொழிலை விரிவுபடுத்தினார். காஞ்சிபுரம் தி.மு.க வடக்கு மாவட்டச் செயலாளர் தா.மோ. அன்பரசன் மூலம் ஸ்டாலினின் அறிமுகம் கிடைத்தது. இதன் மூலம் கிடுகிடுவென கட்சியில் செல்வாக்கும் உயர்ந்தது. இரண்டு முறை தலைவராக இருந்த மனைவியை அமைச்சராகப் பார்க்க வேண்டும் என்ற கனவு உள்ளுக்குள் இருந்துவந்தது. இதற்காகவே கட்சி நிகழ்ச்சிகளுக்குத் தாராளமாக செலவு செய்வார். அரசியல் மட்டுமல்லாது தயாரிப்பாளராக திரைப்படத்துறையிலும் தடம் பதித்தார் மதுசூதனன்.

2016 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2015-ம் ஆண்டு `நமக்கு நாமே' என்ற பயணத்தைத் தொடங்கி தமிழகம் முழுவதும் தொண்டர்களைச் சந்தித்தார் ஸ்டாலின். அந்தப் பயணத்தின் நிறைவு விழாவை பிரமாண்டமாக கொண்டாட வேண்டும் என ஸ்டாலின் நினைத்தார். காஞ்சிபுரத்தில் மாநாடு நடத்த முடிவெடுக்கப்பட்டு 2016 பிப்ரவரியில் படப்பை அடுத்த ஆப்பூரில் கோலாகலமாக மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டுக்கான செலவை மதுசூதனனே ஏற்றுக்கொண்டார்.

அதிகாரிகள் ரெய்டு
அதிகாரிகள் ரெய்டு

300 ஏக்கரில் நடந்த அந்த மாநாட்டில் இரண்டு குளங்களை மதுசூதனன் தூர்த்துவிட்டதாக வழக்கு பதிவு செய்தார்கள். வழக்கிலிருந்து தப்பிக்க அப்போது சிலநாள்கள் தலைமறைவாக இருந்தார். 2016 தேர்தல் முடிவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தி.மு.க-வின் கையே ஓங்கி இருந்தது. செங்கல்பட்டு தொகுதியில் பெருவாரியான வாக்குகளைப் பெற்று வரலட்சுமி, சட்டமன்ற உறுப்பினரானார். அந்த அளவுக்கு தேர்தல் செலவுகளில் தாராளம் காட்டினார் மதுசூதனன். உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து செங்கல்பட்டு பகுதி தி.மு.க-வினருக்கு மதுசூதனன் மூலமாக பணம் பட்டுவாடா நடைபெறுவதாக இருந்ததாகத் தகவல்கள் பரவின. இந்த நிலையில்தான் இப்படியொரு ரெய்டு நடத்திருக்கிறது” என்கிறார்கள்.

இதுகுறித்து செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ வரலட்சுமியின் கணவர் மதுசூதனனிடம் பேசினோம். ``அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஆளும் கட்சியினர் செய்யும் வழக்கமான வேலைதான் இது. எங்களிடம் எந்தப் பணமும் கைப்பற்றப்படவில்லை.

ரெய்டு
ரெய்டு

நாங்கள் செய்யும் தொழிலுக்கு வரவு செலவு கணக்குகளை சரியாக பராமரித்து வருகிறோம். அ.தி.மு.க-வினருக்குத் தேர்தல் பயம் வந்துவிட்டது என்பது இதன்மூலம் தெளிவாகத் தெரிகிறது“ என்பதோடு முடித்துக்கொண்டார்.