Published:Updated:

`ஜி.எஸ்.டி ரெய்டில் சிக்கிய செங்கல்பட்டு எம்.எல்.ஏ!' - பகீர் கிளப்பும் கணவரின் பின்னணி

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது ஸ்டாலின் தலைமையில் ஆப்பூரில் நடைபெற்ற `நமக்கு நாமே' மாநாடு செலவு முழுவதையும் மதுசூதனனே ஏற்றுக் கொண்டதாகச் சொல்கின்றனர். இதன் காரணமாக தி.மு.க-வில் அவரின் செல்வாக்கு அதிகரிக்கத் தொடங்கியது.

வரலட்சுமி-மதுசூதனன்
வரலட்சுமி-மதுசூதனன்

செங்கல்பட்டு தி.மு.க எம்.எல்.ஏ வரலட்சுமி மதுசூதனன் வீட்டில் ஜி.எஸ்.டி நுண்ணறிவு மற்றும் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் ரெய்டு நடத்தி கணக்கில் வராத பல கோடி ரூபாய் மற்றும் ஆவணங்களைக் கைப்பற்றியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரெய்டு
ரெய்டு

செங்கல்பட்டு எம்.எல்.ஏ வரலட்சுமியின் கணவர் மதுசூதனன், உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்குப் பணியாளர்களை அனுப்பும் `மேன் பவர் கார்ப்பரேஷன்' என்ற ஏஜென்சியை நடத்தி வருகிறார். இந்த ஏஜென்சி முறையாக ஜி.எஸ்.டி வரியைச் செலுத்தாமல் ஏமாற்றி வந்ததாக எழுந்த புகாரையடுத்து இவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரித்துறை புலனாய்வு அதிகாரிகள் நேற்று காலை முதல் ஆய்வு நடத்தினர். மறைமலைநகரில் உள்ள மதுசூதனின் வீடு மற்றும் அலுவலகம், கூடுவாஞ்சேரியில் உள்ள அலுவலகம், ஆப்பூரில் உள்ள வீடு, ஆப்பூரில் உள்ள இவரின் சகோதரர் சந்தானம் என்பவரின் வீடு மற்றும் அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர்.

`ஜி.எஸ்.டி முறைகேடு; கோடிக்கணக்கான ரூபாய் பணம்?' - செங்கல்பட்டு எம்.எல்.ஏ வீடு, அலுவலகங்களில் ரெய்டு

சோதனையின்போது கணக்கில் வராத பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. மேலும், வரிஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. எவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் தகவல்களைத் தர மறுத்துவிட்டனர். இந்த ரெய்டு குறித்து நேற்று காலையிலேயே தகவல் கசியத் தொடங்கியது. உளவுப் பிரிவினரும் காவல்துறை அதிகாரிகளும் அங்கே சென்றனர்.

வரலட்சுமியின் வீடு
வரலட்சுமியின் வீடு

கடந்த 2-ம் தேதி உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க-வினர் சிலருக்கு மதுசூதனன் செலவு செய்ய இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.

மதுசூதனன் குறித்து நம்மிடம் பேசிய காஞ்சிபுரம் உடன்பிறப்புகள் சிலர், ``செங்கல்பட்டு அருகே உள்ள ஆப்பூரில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் மதுசூதனன். செங்கல்பட்டு அரசு கலைக் கல்லூரியில் படித்தவர். அங்கு தனியார் நர்சிங் ஹோமில் வரலட்சுமி என்பவர் நர்ஸாகப் பணிபுரிந்து வந்தார்.

செங்கல்பட்டு எம்.எல்.ஏ வரலட்சுமி
செங்கல்பட்டு எம்.எல்.ஏ வரலட்சுமி

அப்போது இருவருக்குமிடையே காதல் மலர்ந்து திருமணமும் நடைபெற்றது. மதுசூதனனின் அண்ணன் சந்தானம் சாராய வியாபாரியாக இருந்தவர். இந்தநிலையில், 2006 உள்ளாட்சித் தேர்தலில் தன்னுடைய மனைவியை ஆப்பூர் ஊராட்சி மன்றத் தேர்தலில் தலைவராக நிறுத்தி வெற்றிபெறச் செய்தார் மதுசூதனன். 2011-ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் அவரின் மனைவியே மீண்டும் ஆப்பூர் ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலின்போது ஆப்பூரில் உள்ள வாக்காளர்களுக்கு இருசக்கர வாகனம் கொடுக்கப்பட்டது.

2009-ம் ஆண்டு காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் காங்கிரஸ் கட்சியின் விஸ்வநாதன். இவருக்கும் மதுசூதனன் தேர்தல் செலவு செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த அறிமுகத்தைப் பயன்படுத்தி சென்னை விமான நிலையத்தில் அனுமதியின்றி கொண்டுவரப்படும் பொருள்களை மதுசூதனன் வியாபாரம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து தி.மு.க தலைமையில் உள்ளவர்களின் அறிமுகம் கிடைத்தது. அவர்களுக்கு நிலம் வாங்கிக் கொடுக்கும் வேலைகளிலும் ஈடுபட்டார்.

செங்கல்பட்டு எம்.எல்.ஏ வீட்டில் ரெய்டு
செங்கல்பட்டு எம்.எல்.ஏ வீட்டில் ரெய்டு

இந்த அறிமுகம் காரணமாகத் தி.மு.க-வில் தன்னை ஐக்கியமாக்கிக் கொண்டார் மதுசூதனன். மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் மதுசூதனனே செலவு செய்வார். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது ஸ்டாலின் தலைமையில் ஆப்பூரில் நடைபெற்ற `நமக்கு நாமே' மாநாடு செலவு முழுவதையும் இவரே ஏற்றுக் கொண்டார். இதனால், தி.மு.க-வில் அவரின் செல்வாக்கு அதிகரிக்கத் தொடங்கியது.

20016 சட்டமன்றத் தேர்தலில் வரலட்சுமியைச் செங்கல்பட்டு தொகுதியில் போட்டியிடச் செய்து வெற்றி பெற வைத்தார். செங்கல்பட்டு தனி மாவட்டமாக உதயமான பிறகு செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் பதவியைக் குறிவைத்து காய்களை நகர்த்தி வருகிறார்” என்கிறார்கள்.

இதுகுறித்து செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ வரலட்சுமியின் கணவர் மதுசூதனனிடம் பேசினோம். ``அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஆளும்கட்சியினர் செய்யும் வழக்கமான வேலை தான் இது.

ரெய்டுக்கு வந்த வாகனங்கள்
ரெய்டுக்கு வந்த வாகனங்கள்

எங்களிடம் எந்தப் பணமும் கைப்பற்றவில்லை. நாங்கள் செய்யும் தொழிலுக்கு வரவு செலவு கணக்குகளை முறையாகப் பராமரித்து வருகிறோம்'' என்றதோடு முடித்துக் கொண்டார்.