Published:Updated:

5% அரிசி(யல்)! - போராட்டமும் அமைச்சர் சமாளிப்பும்

ஜி.எஸ்.டி கூட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ஜி.எஸ்.டி கூட்டம்

தமிழ்நாட்டின் மிக முக்கிய உணவு தானியம், அரிசி. அதனால்தான், அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக அரிசிக்கு வரியே போடாமல் இருக்கிறது தமிழ்நாடு.

5% அரிசி(யல்)! - போராட்டமும் அமைச்சர் சமாளிப்பும்

தமிழ்நாட்டின் மிக முக்கிய உணவு தானியம், அரிசி. அதனால்தான், அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக அரிசிக்கு வரியே போடாமல் இருக்கிறது தமிழ்நாடு.

Published:Updated:
ஜி.எஸ்.டி கூட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ஜி.எஸ்.டி கூட்டம்

இது சாமானிய மக்களுக்குப் போதாத காலம்போல. அரிசி விலை கிலோவுக்கு மூன்று ரூபாய் உயர்ந்திருக்கிறது. கூடவே, தயிர் விலையும் அதிகரித்திருக்கிறது. “எல்லாவற்றுக்கும் காரணம், மத்திய அரசு புதிதாக விதித்திருக்கும் ஜி.எஸ்.டி-தான். மக்களுக்கும் வணிகர்களுக்கும் எதிரான இந்த அறிவிப்பை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” என நாடு தழுவிய போராட்டங்களை நடத்திவருகின்றனர் அரிசி ஆலை உரிமையாளர்கள்.

அரிசிக்கு வரி..!

கடந்த ஜூன் மாதம் பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 47-வது ஜி.எஸ்.டி கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உட்பட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் பல்வேறு பொருள்களுக்கான ஜி.எஸ்.டி வரியை அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதில், பையில் அடைத்து விற்கப்படும் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருள்களுக்கும் ஐந்து சதவிகிதம் வரி செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு கடும் எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

5% அரிசி(யல்)! - போராட்டமும் அமைச்சர் சமாளிப்பும்

அரிசி மீதான ஜி.எஸ்.டி வரியை திரும்பப் பெறக் கோரி கடந்த ஜூலை 16-ம் தேதி அரிசி ஆலை உரிமையாளர்கள், அரிசிக்கடை வியாபாரிகள், வணிகர் சங்கத்தினர் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, தமிழ்நாட்டில் 4,000-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள், 35,000-க்கும் மேற்பட்ட மொத்த மற்றும் சில்லறை அரிசி விற்பனைக் கடைகள் அடைக்கப்பட்டன.

போராட்டத்தை ஒருங்கிணைத்த தலைவர்களுள் ஒருவரான `தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர்கள் சங்க சம்மேளன’த்தின் தலைவர் துளசிங்கத்திடம் இந்த விவகாரம் பற்றிப் பேசினோம்.

``தமிழ்நாட்டின் மிக முக்கிய உணவு தானியம், அரிசி. அதனால்தான், அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக அரிசிக்கு வரியே போடாமல் இருக்கிறது தமிழ்நாடு. இங்கு அரிசிப் பற்றாக்குறை இருப்பதால், பிற மாநிலங்களிலிருந்து கொண்டுவரப்படும் நெல், அரிசியை வைத்துத்தான் தட்டுப்பாடில்லாமல் சமாளிக்கிறது தமிழ்நாடு. எனவேதான், அரிசி ஆலைகளுக்கு மின்தடையிலிருந்து விலக்கு (Rice mills power cut exemption) அளித்திருக்கிறது மாநில அரசு. இந்தியாவிலேயே முதன்முறையாக மக்களுக்கு விலையில்லா ரேஷன் அரிசி வழங்கிவருவதும் தமிழ்நாடு அரசுதான். இது மட்டுமல்லாமல், மத்தியிலும் மாநிலத்திலும் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அரிசிக்கு தடையில்லாப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுவருகிறது. இந்த அளவுக்கு அரிசிக்கு முக்கியத்துவமும் சலுகையும் கொடுக்கப்படக் காரணம், எந்தச் சூழ்நிலையிலும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவும், அனைத்துத் தரப்பு மக்களையும் அரிசி சென்றடைய வேண்டும் என்பதற்காகவும்தான். ஆனால், அரிசிக்கு 5% ஜி.எஸ்.டி வரி விதித்திருப்பதால், ஒரு கிலோ அரிசி 3 ரூபாய் வரை விலை அதிகரித்திருக்கிறது. இதனால் நடுத்தர, சாமானிய மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்” என்றார்.

5% அரிசி(யல்)! - போராட்டமும் அமைச்சர் சமாளிப்பும்

அரிசிக்கான ஜி.எஸ்.டி-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருக்கும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவிடம் பேசினோம்.

``ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் போக்குவரத்து செலவினம் அதிகரித்துவிட்டது. இந்தச் சூழ்நிலையில் அரிசி, கோதுமை, பருப்பு, தயிர் உள்ளிட்ட பால் பொருள்கள், லேபிள் ஒட்டி விற்கப்படும் இறைச்சி போன்ற அத்தியாவசியப் பொருள்களுக்கு 5% ஜி.எஸ்.டி விதித்து, அதை ஜூலை 18-ம் தேதி முதல் அமல்படுத்தியிருப்பது மக்களை மேலும் கடுமையாக வாட்டி வதைக்கும்.

பிரதமர் மோடி ஜி.எஸ்.டி-ஐ அமல்படுத்தும்போது, ‘ஒரு லட்சம் கோடி வந்தாலே போதும், அதன் பிறகு வரி உயர்வு இருக்காது’ என்று சொன்னார். ஆனால், இப்போது 1 லட்சத்து 66 ஆயிரம் கோடி ரூபாய் வரி வசூலாகிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து இப்படி வரியை உயர்த்திக்கொண்டிருந்தால் விலைவாசி உயர்வோடு, வரி ஏய்ப்பும் அதிகரிக்கும். எனவே, அரிசிக்கான 5% ஜி.எஸ்.டி வரியை திரும்பப் பெறக் கோரி, வணிகர் சங்கங்களின் நிர்வாகிகள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை ஒன்றிணைத்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். அதைத் தொடர்ந்து மத்திய, மாநில நிதியமைச்சர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தப்போகிறோம். அதன் பிறகும் செவி சாய்க்கவில்லையென்றால், எங்களின் அடுத்தகட்டப் போராட்டம் இன்னும் தீவிரமாக இருக்கும்” என்றார் உறுதியான குரலில்.

துளசிங்கம்
துளசிங்கம்
விக்கிரமராஜா
விக்கிரமராஜா

இதற்கிடையே, “லேபிள் ஒட்டி விற்கப்படும் உணவுப் பொருள்களின் மீது மட்டுமே 5% வரி, சில்லறையில் விற்கப்படும் அரிசி, கோதுமை போன்ற உணவுப் பொருள்களுக்கு எந்தவித ஜி.எஸ்.டி வரியும் இல்லை” என்று விளக்கமளித்திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். ஆனால், “இந்த அறிவிப்பு தெளிவில்லாமல், மக்களை குழப்பும்படியாக இருக்கிறது. பேக்கிங் செய்யாமல் அரிசியை கையிலா கொண்டுபோய் விற்க முடியும்?” என கேள்வி எழுப்புகிறார்கள் வியாபாரிகள்.

பி.மூர்த்தி
பி.மூர்த்தி

இது தொடர்பாக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தியிடம் விளக்கம் கேட்டோம். ``இந்தக் கோரிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்படும். நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுடன் கலந்தாலோசித்து, ஆகஸ்ட் முதல் வாரம் மதுரையில் நடக்கவிருக்கும் அடுத்த ஜி.எஸ்.டி கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக இந்தக் கோரிக்கை வலியுறுத்தப்படும்” என்றார்.

மக்களின் கஷ்டத்தை உணருமா அரசு?