சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

குஜராத் கிரீடம் யாருக்கு?

மோடி
பிரீமியம் ஸ்டோரி
News
மோடி

ஜி.எஸ்.டி வரிவிதிப்புக்கு எதிர்ப்பு, படேல் சமூகத்தினரின் போராட்டம் எல்லாம் உச்சத்தில் இருந்த கடந்த தேர்தலில் காங்கிரஸ் சரிக்கு சரியாகப் போட்டி கொடுத்தது

நமீபியா, நெதர்லாந்து அணிகளை நம் ஊருக்குக் கூட்டிவந்து இந்திய கிரிக்கெட் அணி முத்தரப்பு கிரிக்கெட் ஆடுவது போன்றதுதான் குஜராத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளை பா.ஜ.க எதிர்கொள்வது! அதிருப்தியாளர்கள் பலர் பா.ஜ.க வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிடுவது, மோர்பி பால விபத்து என்று கவலைக்கிடமான அறிகுறிகள் பல இருந்தாலும், பா.ஜ.க நம்பிக்கையுடன் இந்தத் தேர்தலை எதிர்கொள்வதற்குக் காரணங்கள் நிறைய.

கடந்த 1995-ம் ஆண்டு தொடங்கி, தொடர்ச்சியாக 27 ஆண்டுகள் குஜராத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெறுகிறது. ஆட்சிக்கு எதிரான அதிருப்தி இருக்கிறதா? லோக்நீதி மற்றும் சி.எஸ்.டி.எஸ் இணைந்து நடத்திய ஒரு கருத்துக்கணிப்பு இதை உணர்த்தும். கடந்த ஐந்து ஆண்டு ஆட்சியில் திருப்தியில்லை என்று சொல்கிறவர்கள் வெறும் 33% மக்கள்தான். கடந்த 2017 தேர்தலில் இது 45% என்று இருந்தபோதே பா.ஜ.க மீண்டும் வென்று ஆட்சியைப் பிடித்தது. ஊழல் அதிகரித்துவிட்டது, விலைவாசி உயர்வு கவலை தருவதாக இருக்கிறது என்றெல்லாம் சொல்லும் மக்கள்கூட, ‘இந்த ஆட்சியில் திருப்திதான்' என்கிறார்கள்.

குஜராத் கிரீடம் யாருக்கு?

இம்முறை குஜராத் தேர்தலில் தமிழகத்தைவிட அதிகமாக இலவசங்கள் வாக்குறுதிகளாக அள்ளித் தெளிக்கப்படுகின்றன. 10 லட்சம் வேலைவாய்ப்பு, பயிர்க்கடன் தள்ளுபடி, பெண்களுக்கு மாதம் 1,000 உதவித்தொகை, 300 யூனிட் இலவச மின்சாரம் என ஆம் ஆத்மி வாக்குறுதிகள் வழங்கியது. காங்கிரஸ் இன்னும் ஒருபடி மேலே போய் இவற்றையும் தந்து 500 ரூபாய்க்கு காஸ் சிலிண்டர் தருவதாக அறிவித்தது. ‘இலவசங்களால் நாட்டின் வளர்ச்சிக்குக் கேடு' என்று தொடர்ச்சியாகப் பேசிவந்தார் மோடி. ஆனால், தேர்தல் பிரசாரத்தில் அவர் அப்படியெல்லாம் பேச முடியாது. பெண்களுக்கு முதுகலைப் பட்டம் வரை இலவசக் கல்வி, இலவச மின் ஸ்கூட்டர், ஆண்டுக்கு இரண்டு இலவச சிலிண்டர் என்று இந்த இலவச ரேஸில் எல்லோரையும் முந்துகிறது பா.ஜ.க.

குஜராத் கிரீடம் யாருக்கு?

இந்த வாக்குறுதிகள் ஒருபக்கம் இருந்தாலும், இங்கு ஒவ்வொரு தேர்தலையும் இந்துத்துவ அலைவரிசையில்தான் பா.ஜ.க எதிர்கொள்கிறது. பொது சிவில் சட்டம், மதமாற்றத் தடை, வன்முறையில் ஈடுபடுவோர் சொத்துகள் பறிமுதல் ஆகியவையும் பா.ஜ.க கொடுத்துள்ள வாக்குறுதிகள். ‘‘2002-ல் வகுப்புக் கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு நாம் பாடம் கற்பித்தோம். அதன்பிறகு இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படவில்லை'' என்று கோத்ரா சம்பவங்களைக் குறிப்பிட்டு அமித் ஷா பேசினார். ‘‘தாடி வளர்த்திருக்கும் ராகுல் காந்தி பார்ப்பதற்கு சதாம் உசேன் போல இருக்கிறார்'' என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பிரசாரத்தில் பேசினார். டெல்லியில் தன் காதலி ஷ்ரத்தாவைப் படுகொலை செய்து துண்டு துண்டாக வெட்டிப் புதைத்ததாகக் கைது செய்யப்பட்ட அஃப்தாப் இப்போது குஜராத் தேர்தல் களத்திலும் பேசுபொருள். அந்தக் குற்றச் செயலுக்கு வகுப்புவாத சாயம் பூசி, ‘‘வலிமையான தலைவர் ஒருவர் இல்லாவிட்டால் ஒவ்வொரு நகரிலும் அஃப்தாப்கள் பிறப்பார்கள். நம் சமூகத்தை அப்புறம் காப்பாற்ற முடியாது'' என்று பிரசாரம் செய்கிறார் ஹிமந்த பிஸ்வா சர்மா.

குஜராத் கிரீடம் யாருக்கு?

எல்லாத் தேர்தல்களையும் பா.ஜ.க கடும் சிரத்தையுடன் எதிர்கொள்ளும். ஆனால், குஜராத் தேர்தல் என்பது அவர்களுக்கு வெறுமனே ஒரு மாநிலத் தேர்தல் கிடையாது. குஜராத்தின் மைந்தர்களான மோடியும் அமித் ஷாவும் இந்தியாவின் தலையெழுத்தையே தீர்மானிக்கும் உச்ச பதவிகளில் இருக்கும்போது, அந்த மாநிலத்தை இழந்துவிடக் கூடாது என்று மோதும் தேர்தல். முதல்வரை மாற்றி, பல எம்.எல்.ஏ-க்களுக்கு சீட் கொடுக்க மறுத்து, அதிருப்தியை சமாளித்துவருகிறது அந்தக் கட்சி.

ஜி.எஸ்.டி வரிவிதிப்புக்கு எதிர்ப்பு, படேல் சமூகத்தினரின் போராட்டம் எல்லாம் உச்சத்தில் இருந்த கடந்த தேர்தலில் காங்கிரஸ் சரிக்கு சரியாகப் போட்டி கொடுத்தது. அப்போது காங்கிரஸின் தளகர்த்தர்களாக இருந்த ஹர்திக் படேல், அல்பேஷ் தாகூர் போன்றவர்கள் இப்போது பா.ஜ.க-வில்! வியூகங்கள் வகுப்பதில் கில்லாடியான அகமது படேல் மறைவுக்குப் பிறகு தலைமை இல்லாமல் தவிக்கிறது காங்கிரஸ். பிரசாரத்துக்கு ராகுல் வந்தால், ‘ராகுலா, மோடியா' என்பது போல களம் அமைந்துவிடும் என்பதால், உள்ளூர்த் தலைவர்களே மாநிலப் பிரச்னைகளை முன்வைத்துப் பிரசாரம் செய்கிறார்கள்.

குஜராத் கிரீடம் யாருக்கு?

கிராமப்புற மக்கள், தலித்துகள், பழங்குடிகள், முஸ்லிம்கள் மத்தியில் காங்கிரஸுக்கு இன்னமும் செல்வாக்கு இருக்கிறது. பா.ஜ.க-வின் செல்வாக்கு ஏரியாவான நகர்ப்புறங்களில்தான் ஆம் ஆத்மியும் காலூன்றி வருகிறது. அதனால், ஆம் ஆத்மி பிரிக்கும் வாக்குகள் யாருடையவையாக இருக்கும் என்பதில் குழப்பம் இருக்கிறது. காங்கிரஸின் வாக்குகள் அதிகம் பிரிந்தால், காங்கிரஸ் பின்னடைவைச் சந்திக்கும். பா.ஜ.க வாக்குகள் பிரிந்தால், பா.ஜ.க வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை கொஞ்சம் குறையலாம். ஏதேனும் அதிசயம் நிகழ்ந்தால் தவிர, பா.ஜ.க ஆட்சியமைப்பதில் பிரச்னை இருக்காது என்பதே களநிலவரம்.