அரசியல்
அலசல்
Published:Updated:

அறுந்து தொங்கும் ‘குஜராத் மாடல்’! - மோடி அலை ஓய்கிறதா?

மோடி
பிரீமியம் ஸ்டோரி
News
மோடி

அந்த மாநிலப் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாக இருக்கும் நெசவுத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

நாடே ஆர்வமாக எதிர்பார்த்திருக்கும் குஜராத் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், ‘மோர்பி தொங்கு பால விபத்துச் சம்பவம் பா.ஜ.க-வுக்குக் கடும் எதிர்ப்பலையை ஏற்படுத்தும்’ என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்!

கால் நூற்றாண்டுக்காலத்துக்கும் மேலாக, குஜராத்தில் பா.ஜ.க ஆட்சிதான் நடைபெற்றுவருகிறது. இந்த முறையும் பா.ஜ.க ஆட்சி அமைக்கும் என்ற நிலையில்தான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை கள நிலவரம் இருந்துவந்தது. ஆனால், பெண்கள், குழந்தைகள் உட்பட 142 உயிர்களை பலிகொண்டிருக்கும் மோர்பி தொங்கு பால விபத்துச் சம்பவம், ஆளுங்கட்சியான பா.ஜ.க-வுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. இதுவரை ‘குஜராத் மாடல்’ என்ற அடையாளத்தை உயர்த்திப் பிடித்துவந்த பா.ஜ.க அரசு, மோர்பி பால விபத்தால் ‘ஊழல்’, `அஜாக்கிரதை’ உள்ளிட்ட கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுவருகிறது.

குஜராத்தின் மச்சு ஆற்றின் இரு கரைகளை இணைக்கும் மோர்பி தொங்கு பாலம், 1879-ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அதன் சீரமைப்புப் பணி தொடங்கப்பட்டது. இந்த நிலையில் பாலத்தின் உறுதித்தன்மையைச் சோதிக்காமலும், உரிய தகுதிச் சான்று பெறாமலும் திட்டமிடப்பட்ட காலத்துக்கு முன்பாக, கடந்த அக்டோபர் 26-ம் தேதி மோர்பி பாலம் மீண்டும் திறக்கப்பட்டது. அடுத்த ஐந்து நாள்களிலேயே பாலம் அறுந்து விழுந்து 142 உயிர்கள் பலியான சோகம் நிகழ்ந்திருக்கிறது. இந்த நிலையில், ‘மோர்பி பாலத்தைச் சீரமைப்பதற்கான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக’ எதிர்க்கட்சிகள் குரல் எழுப்ப, ஆபத்தான நிலையில் இருக்கும் அனைத்துப் பாலங்களையும் மூடுமாறு அவசர அவசரமாக உத்தரவிட்டிருக்கிறது குஜராத் அரசு.

கடந்த 2016-ம் ஆண்டு, மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவின் கிரீஷ் பூங்காவிலிருந்து ஹவுரா பகுதியை இணைக்கும் ‘விவேகானந்தா மேம்பாலம்’ திடீரென இடிந்து விழுந்ததில் 27 பேர் உயிரிழந்தனர். அப்போது, தேர்தல் பிரசார கூட்டத்துக்காக மேற்கு வங்கம் சென்ற பிரதமர் மோடி, “இது வங்கத்தைக் காப்பாற்றுங்கள் என்று கடவுள் அனுப்பிய செய்தி” என்று மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸை விமர்சித்தார். தற்போது, மோர்பி பால விபத்தையொட்டி, மோடியின் பழைய பேச்சைக் குறிப்பிட்டு, ‘இப்போது கடவுள் குஜராத்தை பா.ஜ.க-விடமிருந்து காப்பாற்றச் சொல்கிறாரா?’ என்பது போன்ற விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பரவிவருகின்றன.

அறுந்து தொங்கும் ‘குஜராத் மாடல்’! - மோடி அலை ஓய்கிறதா?

ஏற்கெனவே, குஜராத்தில் சிறு, குறு தொழில்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. குறிப்பாக, அந்த மாநிலப் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாக இருக்கும் நெசவுத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மதுவிலக்கு அமலில் இருக்கும் நிலையிலும், கள்ளச்சாராயப் புழக்கம் பரவலாக இருக்கிறது. கடந்த ஜூலை மாதம் மட்டும் 42 பேர் கள்ளச்சாராயம் குடித்து இறந்திருக்கிறார்கள். போதைப்பொருள் தலைநகரமாக குஜராத் மாறிவருகிறது என்று பல்வேறு தரப்பில் விமர்சனங்கள் எழுகின்றன.

என்.சி.ஆர்.பி புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் அதிகமான லாக்கப் மரணங்கள் நிகழும் மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் குஜராத் இருக்கிறது. மேலும் வர்த்தகர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள் உட்பட பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை பா.ஜ.க அரசு நீண்டகாலமாகவே கண்டுகொள்ளாமல் இருப்பது அவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. உதாரணமாக, காவல்துறையினர் எதிர்பார்த்த ஊதிய உயர்வு தரப்படவில்லை. இந்த நிலையில், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால், குஜராத் காவல்துறையினருக்கு அதிகபட்ச ஊதியம் வழங்குவோம்’ என்று அறிவித்தார் கெஜ்ரிவால். உடனே, காவல்துறையினர் சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதைக் கண்டு மிரண்டுபோன ஆளும் பா.ஜ.க அரசு, உடனடியாக காவல்துறையினருக்கு ரூபாய் 550 கோடியில் நலத்திட்டங்களை அறிவித்தது.

அறுந்து தொங்கும் ‘குஜராத் மாடல்’! - மோடி அலை ஓய்கிறதா?

இந்த நிலையில், ‘பெண்களுக்கு மாதம் ரூபாய் 1,000, வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூபாய் 3,000, வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம்’ எனச் சளைக்காமல் பல்வேறு ‘இலவச’ வாக்குறுதிகளை கெஜ்ரிவால் வெளியிட்டுவருகிறார். கூடுதலாக, ‘அயோத்திக்கு இலவச ரயில் பயணம்’, `ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் படங்கள்’ என இந்துத்துவா ரூட்டையும் கெஜ்ரிவால் எடுத்திருப்பது பா.ஜ.க-வுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

77 எம்.எல்.ஏ-க்களுடன் வலுவான எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ், பலவீனமாக இருப்பதுபோல ஒரு தோற்றம் இருக்கிறது. ஆனால் இப்போதும், அதே பலத்துடன் காங்கிரஸ் இருப்பதாகவே கள நிலவரம் தெரிவிக்கிறது. கடந்த 2017 சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க மொத்தம் ஒரு கோடியே 47 லட்சம் வாக்குகளைப் பெற்றது என்றால், ஒரு கோடியே 20 லட்சம் வாக்குகளை காங்கிரஸ் பெற்றிருந்தது.

ஆறு மாதங்களுக்கு முன்புவரை, 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டமன்றத்தில் “150 தொகுதிகளைக் கைப்பற்றுவோம்” என்று மேடைகளில் முழங்கிவந்தனர் பா.ஜ.க தலைவர்கள். தற்போது ‘‘மூன்றில் இரண்டு பங்கு இடங்களைக் கைப்பற்றுவோம்’’ என்று அவர்களாகவே பின்வாங்கிவருகிறார்கள்.

அறுந்து தொங்கும் ‘குஜராத் மாடல்’! - மோடி அலை ஓய்கிறதா?

வழக்கமாக ‘குஜராத் மாடல்’ என்று வளர்ச்சியை முன்னிறுத்தும் பிரதமர் மோடி, இந்த முறை ‘நகர்ப்புற நக்சல்கள் புதிய தோற்றத்துடன் குஜராத்துக்குள் நுழைய முயல்கிறார்கள்’ என்று பேசிக்கொண்டிருக்கிறார். எதிர்க் கட்சியினரோ, மோர்பி பாலம்போல ‘குஜராத் மாடல்’ அறுந்து தொங்குகிறது என்று விமர்சித்துவருகிறார்கள்.

27 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சியில் இருப்பதால், பா.ஜ.க அரசுக்கு எதிரான மனநிலை தற்போது தீவிரம் கண்டிருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!