கட்டுரைகள்
Published:Updated:

பா.ஜ.க Vs காங்கிரஸ் Vs ஆம் ஆத்மி... மும்முனைப் போட்டியில் குஜராத்!

மோடி, ராகுல்
பிரீமியம் ஸ்டோரி
News
மோடி, ராகுல்

எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை நீர்த்துப் போகச் செய்ய, தாங்கள் கொண்டுவந்த திட்டங்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள் பா.ஜ.க-வினர்.

வரும் டிசம்பர் மாதத்தில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது குஜராத். அந்த மாநிலத்தில், கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஆட்சி செய்துவரும் பா.ஜ.க-வுக்கு இதுவரை பிரதான எதிரியாக இருந்தது காங்கிரஸ் மட்டுமே. ஆனால், இந்த முறை புது வரவாக ஆம் ஆத்மி கட்சியும் களமிறங்கியிருக்கிறது. இந்தப் புது வரவு காங்கிரஸ், பா.ஜ.க என இரண்டு கட்சிகளுக்குமே தலைவலியாக மாறியிருக்கும் நிலையில், இலவச வாக்குறுதிகளும், அதிரடி அறிவிப்புகளும் தேர்தல் களத்தைச் சூடேற்றியிருக்கின்றன. 182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக்கொண்ட குஜராத்தில், தேர்தல் களம் எப்படியிருக்கிறது?

ஆளுங்கட்சி மீதான அதிருப்தி... சறுக்கலில் பா.ஜ.க!

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சொந்த மாநிலம் என்பதால், எப்படியாவது வெற்றிபெற்றுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது பா.ஜ.க. இந்த வெற்றி, ‘2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு உரமாக அமையும்’ என பா.ஜ.க தேசியத் தலைமை நம்புகிறது. ஆனால், களம் அவர்களுக்கு அவ்வளவு இனிப்பானதாக இல்லை.

பா.ஜ.க Vs காங்கிரஸ் Vs ஆம் ஆத்மி... மும்முனைப் போட்டியில் குஜராத்!

25 ஆண்டுக்கால பா.ஜ.க ஆட்சியில், குஜராத்தின் குறிப்பிட்ட சில பகுதிகள் மட்டுமே வளர்ச்சியடைந்திருப்பதை எதிர்க்கட்சிகள் வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன. கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட விஷயங்களில் குஜராத் எவ்வளவு பின்தங்கியிருக்கிறது என்பதைத் தரவுகளோடு அம்பலப்படுத்துகின்றன ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள். எதிர்க்கட்சிகளின் பிரசாரம் ஓரளவுக்கு எடுபட்டு, பெரும் பகுதி மக்கள் மத்தியில் பா.ஜ.க-மீது அதிருப்தியும் உண்டாக்கியிருக்கிறது.

மோடிக்குப் பிறகு, குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்தவர்கள் எவரும், அவர் அளவுக்குப் பெரிய தலைவராக உருவெடுக்கவில்லை. மாநில அளவிலும், மோடி, அமித் ஷாவை நம்பித்தான் அரசியல் செய்கிறது பா.ஜ.க. சாதி, மத அரசியலை வைத்து மட்டுமே குஜராத்தில் வாக்குகளை அறுவடை செய்துவந்த பா.ஜ.க., இந்த முறை தன் உத்தியை மாற்றும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. போதாக்குறைக்கு, மோர்பி பகுதியிலுள்ள தொங்கு பாலம் அறுந்து விபத்து நடந்ததும் பா.ஜ.க-வுக்கு சறுக்கலை உண்டாக்கியிருக்கிறது.

எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை நீர்த்துப் போகச் செய்ய, தாங்கள் கொண்டுவந்த திட்டங்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள் பா.ஜ.க-வினர். பிரதமரும், உள்துறை அமைச்சரும் அடிக்கடி குஜராத்துக்கு விசிட் அடித்து பேரணி நடத்துகிறார்கள். தேர்தலையொட்டி மிகப்பெரிய அரசுத் திட்டங்களும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. பழங்குடியின மக்களின் வாக்குகளைக் குறிவைத்து, திரெளபதி முர்முவைக் குடியரசுத் தலைவராக்கியதைச் சுட்டிக்காட்டி பிரசாரம் செய்கிறது பா.ஜ.க. 27 தொகுதிகள் பழங்குடியின வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன. எப்போதும் காங்கிரஸுக்குச் சாதகமாக இருக்கும் இந்தத் தொகுதிகள், ஆம் ஆத்மியின் பக்கம் சற்று சாய்ந்திருக்கிறது. அதை இழுத்துப் பிடிக்க, பழங்குடியினப் பகுதிகளில் தீவிர பிரசாரங்களை முடுக்கிவிட்டிருக்கிறது பா.ஜ.க. இதுபோக, படேல் சமூக வாக்குவங்கி, மோடி மற்றும் அமித் ஷாவின் செல்வாக்கு குஜராத்தில் கட்சியைக் கரைசேர்க்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது தாமரைக் கட்சி.

பா.ஜ.க Vs காங்கிரஸ் Vs ஆம் ஆத்மி... மும்முனைப் போட்டியில் குஜராத்!

களைகட்டும் உட்கட்சிப்பூசல்... தடுமாறும் காங்கிரஸ்!

கடந்த சட்டமன்றத் தேர்தலில், 77 இடங்களைக் கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது காங்கிரஸ். 16 தொகுதிகளில் மிகச் சொற்ப வாக்குகளில் வெற்றியை நழுவவிட்டது. பா.ஜ.க மீதான அதிருப்தியால்தான் காங்கிரஸுக்கு இத்தனை தொகுதிகள் வசமானதாக அப்போது சொல்லப்பட்டது. ஆளுங்கட்சி மீதான அதிருப்தி தற்போது பல மடங்கு அதிகரித்திருக்கும் நிலையில், அதை அறுவடை செய்ய முடியாத நிலையில், ஆம் ஆத்மியின் வருகை காங்கிரஸுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. பா.ஜ.க சட்டமன்றத் தேர்தலில் வென்றது 99 இடங்களாக இருந்தாலும், இடைத்தேர்தல், கட்சித் தாவல்கள் மூலம் தற்போது சட்டமன்றத்தில் 112 எம்.எல்.ஏ-க்கள் பலத்தை வைத்திருக்கிறது. தேர்தல் முடிந்தபோது 77 எம்.எல்.ஏ-க்களை வைத்திருந்த காங்கிரஸுக்கு தற்போது 62 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே இருக்கின்றனர்.

உட்கட்சிப்பூசல்தான் இதற்குப் பிரதான காரணம் என்கிறார்கள் கதர் கட்சிக்காரர்கள். பட்டியலினத்தைச் சேர்ந்த இளம் தலைவரான ஜிக்னேஷ் மேவானி காங்கிரஸ் பக்கம் நிற்பது அவர்களுக்கு ப்ளஸ்ஸாக இருந்தாலும், ஓ.பி.சி பிரிவைச் சேர்ந்த இளம் தலைவர் ஹர்திக் படேலை இழந்திருப்பது மைனஸ். எதிர்க்கட்சியாகப் பெரிதாகச் செயல்படாதது, தகுதிவாய்ந்த தலைவர்கள் இல்லாதது என காங்கிரஸின் சொதப்பல் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. இதற்கிடையில், “காங்கிரஸுக்கு நீங்கள் செலுத்தும் வாக்குகள், பா.ஜ.க-வையே வெற்றியடையச் செய்யும். எனவே, அந்த வாக்குகளை எங்களுக்கே அளியுங்கள்” என்று வெளிப்படையாகவே பிரசாரம் செய்துவருகிறார் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால். இந்தப் பிரசாரத்தால், காங்கிரஸ் வாக்குவங்கி உடையும் நிலை உருவாகியிருக்கிறது.

பா.ஜ.க Vs காங்கிரஸ் Vs ஆம் ஆத்மி... மும்முனைப் போட்டியில் குஜராத்!

இலவச வாக்குறுதி... மத அரசியல்... ஆம் ஆத்மிக்குக் கைகொடுக்குமா?

குஜராத் தேர்தல் களத்தைப் பொறுத்தவரையில் ‘டாப் கியரில்’ முன்னேறுகிறது ஆம் ஆத்மி. நாடு முழுக்க `குஜராத் மாடலை’ முன்வைத்து பிரசாரம் செய்த பா.ஜ.க-வுக்கு, குஜராத்திலேயே `டெல்லி மாடலை’ முன்வைத்து பிரசாரம் செய்து கிலியை உண்டாக்கியிருக்கிறார் கெஜ்ரிவால். `300 யூனிட் இலவச மின்சாரம்; 18 வயதுக்கு மேலுள்ள பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் நிதியுதவி, 10 லட்சம் பேருக்கு அரசு வேலை, இலவசக் கல்வி, வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை மாதம்தோறும் 3,000 நிதியுதவி’ என வாக்குறுதிகளை அள்ளித் தெளித்திருக்கிறார். இந்த வாக்குறுதிகள் சாமானிய மக்களிடையே தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றன.

பிரதமர் மோடி தொடர்ந்து இலவசங்களுக்கு எதிராகப் பேசிவரும் நிலையில், ஆம் ஆத்மியின் இலவச வாக்குறுதிகளால் பா.ஜ.க-வின் பாடு திண்டாட்டமாகியிருக்கிறது. பதிலடியாக, அவர்களும் இலவச அறிவிப்பு மேளாவில் குதித்திருக்கிறார்கள். `4,000 கிராமங்களுக்கு இலவச வைஃபை, கர்ப்பிணி, பாலூட்டும் பெண்களுக்கு மாதம்தோறும் இலவசப் பருப்பு, கடலை, எண்ணெய்... பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயனாளிகளுக்கு ஆண்டுக்கு இரண்டு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்’ என பா.ஜ.க-வும் வாக்குறுதியளித்திருக்கிறது.

மத அரசியலைக் கையிலெடுத்து, பா.ஜ.க-வுக்கு மேலும் நெருக்கடியை உண்டாக்கியிருக்கிறார் கெஜ்ரிவால். `வெற்றிபெற்றால் அயோத்திக்கு இலவசமாக அழைத்துச் செல்வோம்’, `கிருஷ்ணர் அனுப்பிவைத்த ஆள் நான்’, `ரூபாய் நோட்டில் லட்சுமி, விநாயகர் படம் அச்சிடலாம்’ எனத் தன் பங்குக்கும் காவிச் சாயத்தை உடலில் பூசிக்கொண்டிருக்கிறார் கெஜ்ரிவால். இதனால் எழுந்திருக்கும் விமர்சனங்களைச் சரிக்கட்ட, ‘பா.ஜ.க வாக்குகளை உடைக்கவே இந்த யுக்தியை கெஜ்ரிவால் கையில் எடுத்திருக்கிறார்’ எனக் கம்பு சுற்றுகிறார்கள் ஆம் ஆத்மி கட்சியினர். இதற்கிடையே, பழங்குடிகள் மத்தியில் செல்வாக்கு பெற்ற `பாரதிய பழங்குடிகள் கட்சி’ தேர்தலுக்கு முன்பே ஆம் ஆத்மியுடனான கூட்டணியை முறித்துக்கொண்டதும், கெஜ்ரிவாலைத் தவிர கட்சியில் பிரபலமான முகம் இல்லாததும் ஆம் ஆத்மிக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

குஜராத் அரசியலைக் கூர்ந்து கவனித்துவரும் அரசியல் பார்வையாளர்கள் சிலர், “குஜராத்தில் பா.ஜ.க சறுக்கினால், அது 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்குச் சாதமாகிவிடும். எனவே, பா.ஜ.க தேர்தல் பணிகளைப் பல மடங்கு வேகப்படுத்தியிருக்கிறது. காங்கிரஸ் வாக்குகளை ஆம் ஆத்மி கணிசமாகப் பிரிக்கக்கூடும் என்பதால், அதுவேபா.ஜ.க-வுக்குச் சாதகமாக அமையவும் வாய்ப்பிருக்கிறது’’ என்கின்றனர்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சிகளின் காயநகர்த்தல்கள் வேகமெடுக்கும். அந்த நகர்வுகளைப் பொறுத்தே தேர்தல் முடிவுகள் அமையும்!